மேலும்

சிதம்பரத்துக்கான திருவாதிரை கப்பல் சேவை திட்டம் ரத்து

cruise-shipசிதம்பரத்தில் நடைபெறும் திருவாதிரை உற்சவத்தில் ஈழத்து பக்தர்கள் பங்கேற்பதற்கு வசதியாக, காங்கேசன்துறையில் இருந்து காரைக்கால் துறைமுகத்துக்கு நடத்தத் திட்டமிட்டிருந்த பயணிகள் கப்பல் சேவை கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிதம்பரத்தில் சிறப்பாக கொண்டாடப்படும் திருவாதிரை உற்சவத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து பக்தர்கள் பங்கேற்க வசதியாக, தமிழகத்துக்கு பயணிகள் கப்பல் சேவை ஒன்றை ஒழுங்கு செய்து தருமாறு, வடக்கில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிவசேனை அமைப்பின் அமைப்பாளர் மறவன்புலவு சச்சிதானந்தம் வட மாகாண ஆளுனர் ஊடாக சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதுகுறித்து. இந்திய- சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்களுக்கு இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டிருந்தன.

இதன் போது, காங்கேசன்துறையில் இருந்து காரைக்கால் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் சேவை ஒன்றை நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

எனினும், காங்கேசன்துறை துறைமுகத்தில் தற்போது உடனடியாக பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான வசதிகள் இல்லை என்று கூறி, இந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பயணிகள் கப்பல் சேவை விவகாரத்தை துறைமுக அதிகார சபையே கையாள்வதாகவும், அதனால் இதுபற்றித் தமக்கு ஏதும் தெரியாது என்றும், சிறிலங்கா கடற்படை பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, துறைமுக அதிகார சபை அதிகாரிகள் தமக்கு இந்த விவகாரத்துடன் தொடர்பில்லை என்று மறுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *