மேலும்

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களின் பின்னணியில் மகிந்த – போட்டு உடைக்கிறது பொது பலசேனா

bbsகடந்த ஆட்சிக்காலத்தில் அளுத்கம மற்றும் பிற இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் மகிந்த ராஜபக்சவே இருந்தார் என்று, சிங்கள பெளத்த அடிப்படைவாத அமைப்பான பொது பலசேன குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த வாரம் வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, தம்மைத் தோற்கடிப்பதற்காக, எதிர்க்கட்சியினரும், மேற்குலக அரசாங்கங்களும் இணைந்தே, பொது பலசேனா என்ற அமைப்பை உருவாக்கியதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் மகிந்த ராஜபக்சவின் குற்றச்சாட்டுகளை மறுத்த பொது பலசேனாவின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே, மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்தார்.

“மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்தவர்களே அளுத்கமவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பெப்பிலியானவில் முஸ்லிம் வர்த்தகரின் பசன் பக் ஆடையகம் மீது பௌத்த பிக்குகள் நடத்திய தாக்குதல்களின் பின்னணியில், இருந்தனர்.

இந்தச் சம்பவங்களின் பின்னணியில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இருந்ததால் தான், குற்றவாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை.

மகிந்த ராஜபக்ச கண்ணாடி வீட்டுக்குள் இருந்த கல் எறியக்கூடாது.

இப்போது மகிந்த ராஜபக்ச தனது வீடுகள், தனது கார்கள், தனது குடும்பத்தினர், தனது பாதுகாப்புப் பற்றி மட்டுமே பேசுகிறார்.

பொது பலசேனா அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.  நாட்டில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சிங்கள சமூகத்தினரையே பிரதிநிதித்துவம் செய்கிறோம்.

பொது பலசேனாவுக்கு எதிராக பொய்யான பரப்புரைகளை மேற்கொள்ளும் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுகுறித்து சட்டநிபுணர்களுடன் ஆலோசிக்கப்படுகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *