மேலும்

சிறிலங்காவுக்கான நிதி உதவிகளை பாதியாக வெட்டிக் குறைத்தது இந்தியா

India-emblemஇந்திய வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகளை, இந்திய நிதியமைச்சு வெட்டிக் குறைத்திருப்பதால், சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு கொடைகள், கடன்களை வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களின் போது, பல்வேறு கொடைகள் மற்றும் கடன்உதவிகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

இராஜதந்திரத் தொடர்புகளை வலுப்படுத்தவும், உலக அரங்கில் இந்தியாவின் பெயரை உயர்த்தவும், இந்த உதவிகளை வழங்க வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இதற்கமைய, 2016-17ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடாக 22,967.01 கோடி ரூபாவை இந்திய வெளிவிவகார அமைச்சு கோரியிருந்தது. ஆனால், 14,662.66 கோடி ரூபா மாத்திரமே இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த தொகை, 2015-16ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டை விடவும், 303 கோடி ரூபா குறைவாகும்.

சசி தாரூர் தலைமையிலான 31 பேர் கொண்ட நாடாளுமன்றக் குழுவே, இந்த நிதி ஒதுக்கீட்டை வெட்டிக் குறைத்துள்ளது. இது இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முடிவினால் அயல் நாடுகளான சிறிலங்கா, பங்களாதேஸ், மாலைதீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான இந்தியாவின் உதவித் திட்டங்களில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கான கொடைகள், 500 கோடி ரூபாவில் இருந்து 230 கோடி ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளன.

பங்காதேசுக்கான உதவி, 213 கோடி ரூபாவில் இருந்து 150 கோடி ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

மாலைதீவுக்கு 213 கோடி ரூபா உதவி தொடர்பான வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும், 40 கோடி ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு, 628.94 கோடி ரூபா வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், 536.67 கோடி ரூபாவே அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்தியாவின் பெயர் அனைத்துலக அரங்கில் பாதிக்கப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *