மேலும்

இந்திய சார்பு ரணில் அரசுடன் சீனா எப்படி நெருங்கியது? – இந்திய ஊடகம்

xi-ranilசிறிலங்கா பிரதமரின் சீனாவிற்கான பயணத்தின் இறுதியில், இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவானது மகிந்த ஆட்சிக்காலத்தில் இருந்த நிலைக்கு மீளத் திரும்பிவிட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா’ வலைத்தளத்தில், ஆர்.எஸ்.வாசன் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சிறிலங்காவின் ஆட்சிப் பொறுப்பைத் தமது கைகளில் எடுத்தபோது, தேசிய பொருளாதாரம் மற்றும் வெளிவிவகாரக் கோட்பாடு ஆகியன தொடர்பாக முன்னாள் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் விடப்பட்ட தவறுகள் சரிசெய்யப்படும் என வாக்குறுதி வழங்கியிருந்தனர். சிறிலங்காவின் தேசிய நலன்களை மகிந்த ராஜபக்ச சீனாவிற்கு ஒட்டுமொத்தமாக விற்றுவிட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் சீனாவிற்குப் பயணம் செய்த போது இப்பயணம் தொடர்பாக மிகப் பாரிய எதிர்பார்ப்புக் காணப்பட்டது. ஆனால், ரணிலின் அண்மைய சீனப் பயணமானது ஏமாற்றத்தைத் தந்துள்ளது. அதாவது வரும் பத்தாண்டுகளில் சிறிலங்காவின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களில்  பல தரப்பினர் பாரியளவில் பங்கெடுக்க முடியும் என்ற உந்துதலை வழங்கியுள்ளது.

1.4 பில்லியன் டொலர் செலவில் ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் துறைமுக நகர அபிவிருத்தித் திட்டமானது ரணிலின் சீனப் பயணத்தின் போது முதன்மைப்படுத்தப்பட்டது. இத்திட்டமானது கடலிலிருந்து 233 ஹெக்ரேயர் பரப்பில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. இதில் 88 ஹெக்ரேயர் பரப்பானது சீனாவிற்கு 99 ஆண்டுக் குத்தகையிலும் 20 ஹெக்ரேயர் நிரந்தரக் குத்தகையிலும் வழங்கப்படுவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் இச்சிறப்பு வலயத்தில் சீனச் சட்டம் அமுல்படுத்தப்பட முடியும்.

சீனாவால் முதலீடு செய்யப்பட்ட சில ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்ட சூழல் சார் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு கொழும்புத் துறைமுக நகரத் திட்டமும் இடைநிறுத்தப்பட்டது. சீனாவால் முதலீடு செய்யப்பட்ட திட்டங்கள் மூலம் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் நாடுகளுக்கு வர்த்தக மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிப்பதற்கான எவ்வித வாய்ப்பும் காணப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.

ஏனெனில் சீனாவானது தனது நாட்டைச் சேர்ந்த கைதிகளைப் பயன்படுத்தி இத்திட்டங்களை மேற்கொள்வதால் உள்நாட்டு மக்களுக்கான தொழில் வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளதை ஆபிரிக்க நாடுகளில் காணமுடியும்.

ஆனால் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு ஓர் ஆண்டின் பின்னர் சிறிலங்கா அரசாங்கத்திற்கு 8 பில்லியன் டொலர் கடன் சுமை அதிகரித்தது. இதனால் இதனை ஈடுசெய்வதற்கு எந்தவொரு தெரிவும் காணப்படாததால், ரணில் விக்கிரமசிங்க சீனாவிற்கான பயணத்தை மேற்கொண்டதுடன் இத்திட்டத்தைத் தொடர்வதற்கான சமிக்கையையும் வழங்கினார்.

சிறிலங்காவானது சீனாவின் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளது என்பதைப் பயன்படுத்திய சீனா இது தொடர்பில் அழுத்தம் கொடுத்தது. இதனால் சிறிலங்காவும் சீனாவுடனான உறவைப் புதுப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சீனாவிற்கான தனது அண்மைய பயணத்தின் போது பொருளாதாரம், முதலீடுகள், தொழினுட்பம், விளையாட்டு, சுற்றுலாத்துறை, நிதிச் சேவைகள், நீர் விநியோகம் மற்றும் விஞ்ஞானம் ஆகியன உட்பட பல்வேறு ஒத்துழைப்பு உடன்பாட்டை ரணில் ஏற்றுக்கொண்டார். சிறிலங்காவானது ஏற்கனவே சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. பிராந்தியப் பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் ஆசியா, ஆபிரிக்கா போன்றவற்றுக்கு அப்பால் உள்ள நாடுகளுடனும் தொடர்பைப் பேணுவதற்கான சீனாவின் கரையோரப் பட்டுப்பாதைத் திட்டத்திற்கு சிறிலங்கா ஆதரவாக உள்ளது.

சிறிலங்காவில் சீனாவால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கட்டுமானத் திட்டங்கள், அம்பாந்தோட்டை மற்றும் மத்தல விமான நிலையத் திட்டங்கள் ஆகியன போலவே தற்போது கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தையும் தொடருமாறு கூறுவதற்காகவே ரணில் சீனாவிற்குப் பயணம் செய்ததாக சீனா கருதுகிறது. இந்திய மாக்கடலில் சிறிலங்காவின் கேந்திர முக்கியத்துவமே சீனாவின் சிறிலங்கா நோக்கிய பயணத்தின் நீண்ட கால நோக்காகும்.

‘தற்போது பாகிஸ்தானில் சீனாவால் முன்னெடுக்கப்படும் கட்டுமானத் திட்டங்களானது சீனாவிற்கு உறுதியான தளமாக அமையாது. இந்திய மாக்கடலில் தனது பாதுகாப்பு மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சீனாவிற்கு சிறிலங்கா மிகவும் முக்கியமானதாகும். இது அண்மையிலுள்ள கடல்சார் மையங்களுக்கான பாதுகாப்பு உறுதிப்பாடுகளை மட்டும் வழங்கவில்லை. இதன் மூலம் 21ம் நூற்றாண்டிற்கான கரையோரப் பட்டுப்பாதைத் திட்டமும் விரிவுபடுத்தப்படும்’ என ரணில் சீனாவிற்கான தனது பயணத்தை மேற்கொண்ட தினமன்று, சீனாவின் அரச ஊடகமான குளோபல் ரைம்ஸ்  செய்தி வெளியிட்டிருந்தது.

சிறிலங்கா பிரதமரின் சீனாவிற்கான பயணத்தின் இறுதியில், இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவானது மகிந்த ஆட்சிக்காலத்தில் இருந்த நிலைக்கு மீளத் திரும்பிவிட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் சூழலைப் பாதிக்கின்ற எந்தவொரு திட்டத்தையும் சீனா மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும், இந்தியாவுடன் இணைந்து சிறிலங்கா பாலங்களை அமைக்கும் என ரணில் தனது தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தான் உட்பட சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளுடன் தொடர்பைப் பேணுவதன் மூலம் தனது பிராந்தியச் செல்வாக்கை மீளவும் நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதே தற்போதைய இந்திய மத்திய அரசாங்கத்தின் கோட்பாடாகும். இந்திய மத்திய அரசாங்கத்தின் ‘அயல்நாடுகளுடன் முதலில் உறவைப் பேணுதல்’ என்கின்ற முயற்சியானது இன்னமும் முழுமையாக்கப்படவில்லை. அத்துடன் பல பத்தாண்டுகளாகத் தொடரும் எல்லைப் பிரச்சினைகளைக் கையாளும் முறைமையும் இன்னமும் மாற்றமுறவில்லை.

தனது நீண்டகால நோக்கை அடைந்து கொள்வதில் ஏற்படும் இடர்களைக் களையும் சீனாவானது இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் நிலைபெற்று நிற்பதற்கான வெளியுறவுக் கோட்பாடுகளை இந்தியா வரையறுக்க வேண்டும். சிறிலங்கா மற்றும் இந்தியாவை இணைக்கும் பாலத்தை அமைப்பதற்காக 2000ம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்கவால் பரிந்துரைக்கப்பட்டது.

சீனாவுடனான தனது உறவை சமநிலைப்படுத்தும் அதேவேளையில், சிறிலங்காவானது பொருளாதார, தொழினுட்ப ஒருங்கிணைப்பு உடன்பாடுகளை மிக அதிகளவில் இந்தியாவுடன் மேற்கொள்ள வேண்டும். பாக்குநீரிணையில் நிலவும் மீன்பிடி விவகாரம் தீர்க்கப்பட வேண்டும். கடல் சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு இந்தியா, சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகிய முத்தரப்பு பாதுகாப்பு உடன்படிக்கையை மேலும் பலப்படுத்தப்பட வேண்டிய தேவையுள்ளது.

பூகோள-மூலோபாயம் தொடர்பில் முக்கியத்துவம் பெறும் இந்திய மாக்கடல் நோக்கிய சீனாவின் நகர்வானது கவனத்திற்கு கொள்ளப்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

குறிப்பு – அண்மைய சீன – சிறிலங்கா  நெருக்கம் தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் கருத்து எதுவும் வெளியாகாத நிலையில், இந்தியத் தரப்பின் கருத்தையும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்துவதாக இந்தக் கட்டுரை அமைந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *