மேலும்

விக்னேஸ்வரன் மீது சுவாமிநாதன் சீற்றம் – உருப்படியாக எதையும் செய்யவில்லையாம்

dm swaminathanபோரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உருப்படியாக எதையும் செய்யாத வடக்கு மாகாணசபை, மத்திய அரசாங்கம் மேற்கொள்ளும் மீள்குடியேற்ற, அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முட்டுக் கட்டையாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார், சிறிலங்காவின் புனர்வாழ்வு, மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்.

வடக்கு கிழக்கில் 65,000 பொருத்து வீடுகளை அமைக்கும், மீள்குடியேற்ற அமைச்சின் திட்டத்திற்கு வடமாகாண சபை எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன், இதுதொடர்பாக, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சர் சுவாமிநாதன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்-

“மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் சமூகத்தினருக்கு 65,000 வீடுகளை நிர்மாணிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை முழுமையாக நிராகரிக்க வட மாகாணசபை ஒருமனதாக தீர்மானம் எடுத்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மேற்படி திட்டம் அரசாங்கத்தால் தமிழ் சமூகத்திற்கான ஒன்றாக அல்லாமல் ஜெனீவாவிற்கு காண்பிப்பதற்கான ஒன்றாகவுள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு மோதல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் வட மாகாணசபை உருப்படியான எதையும் செய்யப்படவில்லை.

வட மாகாண அபிவிருத்திக்காக மத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டதாக கூறப்படும் பணம் அங்கு வீடமைப்பு, வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு, விவசாயம், மீன்பிடி மற்றும் தொழிற்றுறை பொருளாதார செயற்பாடுகள் என்பவற்றில் அபிவிருத்திக்கான தீவிர தேவைப்பாடு இருந்தும், அவற்றுக்காக செலவிடப்படவில்லை.

தமது தேவைப்பாடுகள் குறித்து அழுத்தம் கொடுப்பதற்காக மாகாணசபையை தமிழ் மக்கள் தெரிவு செய்துள்ள நிலையில், அது அவர்களது நியாயபூர்வமான அடிப்படைத் தேவைகள் குறித்து செயலளவில் ஒன்றுமில்லாது பேச்சளவில் மட்டுமே நாடகமாடிக் கொண்டிருக்கிறது.

மேலும் அரசாங்கம் எதையாவது மேற்கொள்ளும் போது வடமாகாணசபை அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து மீள்குடியேற்ற மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முடிவுக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறது.

இந்த அணுகுமுறை அவர்கள் (பாதிக்கப்பட்வர்களின்) காயங்களை குணப்படுத்துவதற்கு அக்கறை காட்டாது தமது பதவி நிலைகளை தக்கவைத்துக் கொள்ளவே அக்கறை காட்டி வருவதாக எனக்குத் தோன்றுகிறது.

இது, இத்தகைய அரசியல்வாதிகளை இனங்கண்டு அவர்களது தனிப்பட்ட அக்கறைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தருணமாகும்.

அரசாங்கம் நீர் விநியோகம், குழாய்க் கிணறு, மின்சாரம், கட்டில்கள், மின்விசிறிகள், இணைய வசதிகள், எரிவாயு கொள்கலனுடன் எரிவாயு சமையல் அடுப்பு, உள்ளடங்கலான தளபாடங்களையும் வீட்டுப் பாவனைப் பொருட்களையும் உள்ளடக்கி கணிசமான பெறுமதியுடைய முழுமையான தளபாட வசதியுடைய வீட்டை வழங்கத் தீர்மானித்த போது அந்தத் திட்டத்திற்கு முதலமைச்சர் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்.

அவர் கடந்த 30 ஆண்டு காலமாக துன்பத்தை அனுபவித்து வரும் மக்களுக்கு எந்தவித வசதிகளுமற்ற முழுமையாக பூர்த்தி செய்யப்படாத வீடுகளைக் கட்டிக் கொடுக்க விரும்புகிறார்.

இந்த வீடமைப்புத் திட்டத்தை எதிர்ப்பவர்களை,  இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களிலும் தற்காலிக் குடிசைகளிலும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் தயவிலும் வாழும் மக்களை சென்று பார்க்க வேண்டுகோள் விடுக்கிறேன்.

குளிரூட்டி வசதிகளுள்ள வீடுகளில் வாழ்பவர்கள் தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் பிள்ளைகளுக்குமென நல்ல வீடுகளையே விரும்புகின்றனர்.

ஆனால் தம்மை தேர்தல் மூலம் தெரிவு செய்யும் தொகுதி மக்களுக்கு அத்தகைய வசதியான வீடுகளை இடித்துத் தள்ளி எந்தவொரு வசதிகளுமில்லாத அரைகுறையாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளையே வழங்க விரும்புகின்றனர்.

அதனால் அந்த அரசியல்வாதிகள் நீண்ட காலத்துக்கு மக்களுக்கு தேவையானவர்களாக உணரப்படுவார்கள்.

இந்த வீடமைப்புத் திட்டத்தின் அடிப்படை உண்மைகளை உணராது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அது தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்னர் குற்றஞ்சாட்டினார்.

அவரது கடிதத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தகவல்கள் தொடர்பான மிகவும் அடிப்படையான கேள்விகளை மட்டுமே அவர் கேட்டிருந்தார்.

வெற்றிபெற்ற அரசாங்கங்களால் தமிழ் சமூகத்தின் பொருளாதார மற்றும் சமூக நிலைப்பாட்டை தரமுயர்த்துவதற்கு கொண்டு வரப்பட்ட ஒவ்வொரு அபிவிருத்தித் திட்டத்திற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது. அதனால் அந்த சமூகத்திற்கு மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமது சொந்தத் தொகுதிகளுக்கு எதனையும் செய்யாத இந்த அரசியல்வாதிகள் மற்றவர்கள் ஏதாவது நல்ல அபிவிருத்தி பணியை மேற்கொள்ளும் பட்சத்தில் அதனை எதிர்த்து வருகின்றனர்.

இதற்கு முன் முதலமைச்சர் விலை, பாவனை, மோதல்களுக்கு பின்னரான நிர்மாணம் மற்றும் நிலக்கீழ் நீர் என்பன தொடர்பில் தனது விவாதங்களை முன்வைத்திருந்தார். அந்தப் பலவீனமான விவாதங்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக விளக்கமளிக்கப்பட்டது.

தற்போது அவர் இந்த ஜெனீவா அடிப்படையிலான ஆரம்பம் என்ற புதிய நிகழ்ச்சித் திட்டத்துடன் வந்துள்ளார்.

சிறிலங்கா அதிபரும், பிரதமரும் இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதிலும் மோதல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சமூக நிலையை தரமுயர்த்துவதிலும் மிகுந்த அக்கறை எடுத்து வருகின்ற நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி தம்மால் இயன்றளவு சிறப்பாக செயற்பட வேண்டும். எவரும் எல்லோரையும் எந்த நாளும் முட்டாளாக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *