மேலும்

கடன்பொறியில் இருந்து தப்பிக்க சீனாவின் நிபந்தனைகளை ஏற்கும் சிறிலங்கா

ranil-lee-chinaஇந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளாலும் வர்த்தக மற்றும் இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் இந்திய மாக்கடலில் தனது இருப்பை நிலைப்படுத்துவதற்கு சீனாவிற்கு சிறிலங்கா தேவைப்படுகிறது.

இவ்வாறு, Voice Of America இணையத்தளத்தில், Saibal Dasgupta எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். புதினப்பலகைக்காக இதனை மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

ஒரு ஆண்டுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட, 1.4 பில்லியன் டொலர் பெறுமதியில் சீனாவின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான இணக்கப்பாட்டை சிறிலங்கா வழங்கியுள்ளது.

இத்திட்டம் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வியாழனன்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சீனாவிற்கான  பயணத்தை மேற்கொண்டிருந்த போது அறிவிக்கப்பட்டது. சிறிலங்காவின் இத்தீர்மானமானது மேலும் சீன முதலீடுகள் சிறிலங்காவிற்குள் உள்நுழைவதற்கும், இந்திய மாக்கடலை அடைய வேண்டும் என்கின்ற தனது இலக்கை நோக்கி சீனா நகர்வதற்குமான வாய்ப்பை வழங்கியுள்ளது.

சிறிலங்காவின் பிரதமர் சீனாவிற்கான தனது பயணத்தின் போது தொடருந்து, வீதி, துறைமுகம் மற்றும் விமானநிலையத் திட்டங்களை சீன நிறுவனங்கள் அமுல்படுத்துவது தொடர்பான உடன்படிக்கையிலும் கைச்சாத்திட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க சிறிலங்காவின் பிரதமராகப் பதவியேற்ற கையோடு கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்துமாறு கட்டளையிட்டிருந்தார். இத்திட்டமானது சீனா மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளுக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகக் காணப்படுகிறது.

‘கொழும்பு நகரத் திட்டம் மீண்டும் தொடங்குவதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். இத்திட்டமானது மிகவும் உறுதியாக மேற்கொள்ளப்படுவதற்கு சிறிலங்காவுடன் கைகோர்த்துச் செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என சீனப் பிரதமர் லீ கெகியாங் தெரிவித்துள்ளதானது கொழும்பு துறைமுக நகரத் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கான தீர்மானமானது எவ்வளவு முக்கியமானது என்பதை அடிக்கோடிட்டுக் காண்பிக்கிறது.

ranil-lee-china

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கான தீர்மானத்தை சிறிலங்காவின் தலைவர் எட்டியதானது இந்த நாடு சீனாவின் கடன்பொறிக்குள் தள்ளப்படுவதைத் தடுப்பதற்கான ஒரு நடவடிக்கையாகும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சிறிலங்காவிற்கான கடன் தர மதிப்பீட்டை அனைத்துலக தர மதிப்பீட்டு நிறுவனங்களான Fitch மற்றும் Standard & Poor’s  ஆகியன குறைத்ததன் பின்னர் உலக சந்தையிலிருந்து தனக்கான நிதிகளைத் திரட்டிக்கொள்வதில் சிறிலங்கா பல்வேறு கடினங்களை எதிர்நோக்கி வருகிறது.

சிறிலங்காவானது சீனாவால் வழங்கப்பட்ட 8 பில்லியன் டொலர் கடனை மீளஒழுங்குபடுத்த வேண்டியிருப்பதுடன், சீனாவிடமிருந்து புதிய கடன்களையும் பெற்றுக் கொள்ள விரும்புகிறது. அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட துறைமுகம் மற்றும் விமானநிலையம் ஆகியவற்றுக்காக சீனாவால் வழங்கப்பட்ட 1.6 பில்லியன் டொலர் உட்பட எட்டு பில்லியன் டொலரை சீனாவிடமிருந்து சிறிலங்கா கடனாகப் பெற்றுள்ளது.

‘நிதிப் பிரச்சினைகள் மற்றும் கட்டுமானத் திட்டங்களுக்கான நிதித் தேவை போன்றனவே பிரதமர் விக்கிரமசிங்கவால் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் மீளஆரம்பிக்கப்படுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டதற்கான பிரதான காரணங்களாகும்’ என கொழும்பிலுள்ள பொதுக் கோட்பாட்டு நிறுவகத்தின் உதவி இயக்குனர் வீரக்கோன் டுஸ்னி தெரிவித்தார்.

‘கடன் மீளச் செலுத்துவதை முகாமை செய்தல் என்பது மிகப் பாரிய பிரச்சினையாகும். கிட்டத்தட்ட சிறிலங்காவின் வெளிநாட்டுக் கடனின் அரைவாசி சலுகையற்ற மற்றும் வர்த்தக நோக்கிலான கடனாகும். இதனால் நாங்கள் சீனாவுடன் அரசியல் மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்காக தொடர்ந்தும் உறவைப் பேணவேண்டிய தேவையுள்ளது’ என வீரக்கோன் டிஸ்னி தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் சிறிலங்காவுக்கு உதவத் தவறியதன் காரணமாகவே சிறிலங்காவானது சீனாவை நாடியதாக சில வல்லுனர்கள் நம்புகின்றனர்.

‘சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தின் பிரதான பிரச்சினையாக பொருளாதார அபிவிருத்தி காணப்படுகிறது. சீனாவுடனான உறவை சிறிலங்கா தற்போது குறைப்பதற்கான முயற்சியை எடுத்த போதிலும், தனக்கு உதவுவதற்கு எந்த நாடும் முன்வராது என்பதை சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் உணர்ந்துள்ளது’ என அனைத்துலக கற்கைகளுக்கான சங்காய் நிறுவகத்தின் தென்னாசியக் கற்கைகளுக்கான இயக்குனர் ஷவோ கன்ஞெங்க் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘கடந்த ஒரு ஆண்டாக இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ சீனாவால் மேற்கொள்ளப்பட்டது போன்ற கவர்ச்சிகரமான பாரிய திட்டங்களை மேற்கொள்ள முன்வரவில்லை. இதனால் சிறிலங்கா மீண்டும் சீனாவின் பக்கம் திரும்பியுள்ளது’ என ஷவோ தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இந்திய மாக்கடலில் தனது கேந்திர அமைவிடத்தைப் பயன்படுத்தி சீனாவின் முதலீடுகளை உள்ளீர்ப்பதற்கு முயற்சிக்கிறது எனவும் ஷாவோ குறிப்பிட்டுள்ளார். ‘அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற ஏற்கனவே சீனாவால் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களுக்கு அப்பால், சிறிலங்கா தனது இந்திய மாக்கடல் மீதான அமைவிடத்தைப் பயன்படுத்தி சீனாவுடன் புதிய கூட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான வாய்ப்பை எதிர்பார்க்கின்றது’ என ஷவோ தெரிவித்தார்.

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளாலும் வர்த்தக மற்றும் இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் இந்திய மாக்கடலில் தனது இருப்பை நிலைப்படுத்துவதற்கு சீனாவிற்கு சிறிலங்கா தேவைப்படுகிறது. 1200 கிலோமீற்றர்  நீளமான, சின்ஜியாங்கிலுள்ள சீன எல்லையை பாகிஸ்தானின் அரேபியக் கடல் மீதுள்ள குவாடர் துறைமுகத்துடன் இணைப்பதற்கான பாரிய திட்டத்திற்காக சீனா 26 பில்லியன் டொலரைச் செலவழித்துள்ளது.

‘சீனா தனது பாரிய திட்டத்தை அமுல்படுத்துவதற்கான மிக முக்கிய கடற் பாதையில் சிறிலங்கா அமைந்துள்ளது. சீனா தனது மூலோபாய நலன்களை அடைந்து கொள்வதற்காகவும் சிறிலங்காவுடன் தொடர்பைப் பேணுகிறது. இது தவிர, சீனாவின் ‘ஒரு அணை, ஒரு பாதை’ என்கின்ற திட்டத்தை அமுல்படுத்துவதற்கு சிறிலங்காவின் பங்களிப்பும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்’ என பொதுக் கோட்பாட்டு நிறுவகத்தின் உதவி இயக்குனர் வீரக்கோன் டுஸ்னி சுட்டிக்காட்டியுள்ளார்.

‘சீனாவின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட அம்பாந்தோட்டை விமான நிலையமானது நெற் களஞ்சியமாகப் பயன்படுத்தப்படுகிறது. சீனாவால் நிதியுதவி வழங்கப்பட்டு கட்டப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகமானது பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளது’ என புதுடில்லியிலுள்ள பாதுகாப்பு மற்றும் மூலோபாயக் கற்கைகளுக்கான நிறுவகத்தின் ஆய்வாளர் ஸ்மிருதி பட்நாயக் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டையில் உருவாக்கப்பட்ட துறைமுகம், விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் போன்ற சீன ஆதரவுத் திட்டங்கள் அண்மைய சில ஆண்டுகளாக சிறிலங்காவில் அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. 2014ல் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைகளில், அப்போதைய அதிபர் ராஜபக்சவால் சீன நிறுவனங்களிடமிருந்து ஊழல் மோசடிகள் மேற்கொள்ளப்பட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியிருந்தனர். ராஜபக்சவிற்கு எதிராக விமர்சனம் செய்தவர்கள் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர்.

‘சிறிலங்கா அரசாங்கமானது தற்போது இக்கட்டான நிலையை அடைந்துள்ளது. இது தற்போது வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. இதனால் சிறிலங்காவிற்கு தனது பொருளாதாரத்தை வீழ்ச்சியுறாது தொடர்ந்தும் நாட்டை நிர்வகிப்பதற்கு நிதி தேவைப்படுகிறது. குறுகிய கால அடிப்படையிலாவது சீனாவின் நிதியுதவி என்பது தற்போது சிறிலங்காவிற்குத் தேவைப்படுகிறது. ஆனால் சிறிலங்கா வாழ் மக்களுக்கு சீனத் திட்டங்கள் பயனற்றவையாகும்’ என கொழும்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளரும் ஆய்வாளருமான சமிந்தா ஹெற்றியராச்சி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *