மேலும்

இந்தியப் பெருங்கடலில் இந்திய- சீன மோதல் ஏற்படாது – சிறிலங்கா பிரதமர்

ranil-japanஇந்தியப் பெருங்கடலைக் கட்டுப்படுத்துவதில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் மோதல் ஏற்படும் வாய்ப்பு இல்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பீஜிங்கில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தினால்,பாதுகாப்புப் பிரச்சினை ஏற்படும் என்ற கேள்விக்கே இடமில்லை.

இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனைகள் எம்மால் தீர்க்கப்பட்டுள்ளன. இதுபற்றி இந்தியாவுடன் மேலும் பேச்சுக்கள் நடத்தப்படும்.

துறைமுக நகரத் திட்டமோ, பெருநகரத் திட்டமோ,  யாருக்கும் அச்சுறுத்தலாக அமையாது. இது எல்லோருக்கும் பணத்தை சம்பாதிக்கும் ஒரு வாய்ப்பாகும்.

வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்களில் பல குறைபாடுகள் இருந்ததைக் கண்டுபிடித்தோம். அவற்றை நாம் நிராகரிக்கவில்லை. அவற்றை திருத்தியமைத்து புதிய வடிவம் கொடுத்திருக்கிறோம்.

துறைமுகநகரத் திட்டத்தில் சீனாவுக்கு நிலத்தை உரிமையாக கொடுக்கவில்லை. ஆனால் 99 ஆண்டு குத்தகைக்கு கொடுத்திருக்கிறோம்.

இந்தியப் பெருங்கடலில் துறைமுக நகரம், ஒரு நிதி மற்றும் வர்த்தக கேந்திரமாக இருக்கும்.

சீன நிறுவனம் கோரிய நட்டஈடு விவகாரத்தில், நாம் பேசித் தீர்க்க முடியும். இங்கு பிரச்சினை அதிகம் இல்லை.

சீனாவுடனான உடன்பாட்டு விடயத்தில் நீண்டகாலம் நிலையான கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்பதால் பீஜிங் புறப்பட முன்னர், முன்னாள் அதிபர்கள் மகிந்த ராஜபக்ச, சந்திரிகா குமாரதுங்க ஆகியோருடனும் பேச்சு நடத்தியிருந்தேன்.

சிறிலங்காவில் சீனா எந்த இராணுவத் தளத்தையும் அமைப்பதற்குக் கோரவில்லை.  பயிற்சி தொடர்பாக மேலும் இராணுவ ஒத்துழைப்புகளை நாம் வலுப்படுத்தவுள்ளோம். சீனா எமக்கு ஒரு ஆழ்கடல் ரோந்துக் கப்பலை வழங்கவுள்ளது.

இந்தியாவும் கூட எமக்காக இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை கட்டி வருகிறது.

இந்தியப் பெருங்கடலில் சீனா- இந்தியாவுக்கு இடையில் மோதல் ஏற்பட வாய்ப்பில்லை. இந்தியப் பெருங்கடல் கடல் சார் கொள்கைச் சட்டங்களின் படி நிர்வகிக்கப்பட வேண்டும். சுதந்திரமான நடமாட்டத்துக்கு இடமளிப்பதாக இருக்க வேண்டும்.

இந்தியப் பெருங்கடலில் சுதந்திரமான நடமாட்டத்தை  சிறிலங்கா உறுதி செய்யும்.

இங்கு கடற்கொள்ளைக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியக் கடற்படை ஈடுபடுகிறது. சீனாவும் டிஜிபோட்டியில் தளத்தை அமைக்கிறது.  பல நாடுகள் தளங்களை அமைக்கின்றன. ஆனால் அவை ஐ.நாவின் கடற்கொள்ளை முறியடிப்பு உடன்பாட்டின் ஒரு பகுதியாகவே இருக்கின்றன.

கடற்கொள்ளைக்கு எதிரான சீனாவின் இராணுவப் பிரசன்னம், இந்தியப் பெருங்கடலில் மோதலை உருவாக்கும் என்று கருதவில்லை.

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் கையளிக்கப்படாது, அம்பாந்தோட்டை அபிவிருத்தி சீனாவினுடையதல்ல, அது சிறிலங்காவின் அபிவிருத்தி திட்டம். எவரும் வந்து பிரதேசங்களை அபிவிருத்தி செய்யலாம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *