மேலும்

கூட்டமைப்பின் சமஸ்டித் தீர்வு நிலைப்பாட்டுக்கு ஜெர்மனி ஆதரவு

germany-mps-sumanthiranதமிழ் மக்களின் பிரச்சினைக்கு சமஸ்டி தீர்வை முன்வைத்திருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு ஜேர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகளை நேரில் கண்டறிவதற்காக ஜேர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று வந்திருந்தது.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்த இந்தக் குழுவினர் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான, எம்.ஏ.சுமந்திரனை எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியது.

germany-mps-sumanthiran

இதன்போது, கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,

“தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டியது மிகவும் முக்கியமானது. இந்த நல்லாட்சியில் அது நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்து வருகிறது.

சமஸ்டி அடிப்படையிலான தீர்வுத் திட்டத்திற்கே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையினூடாக மக்களின் ஆணையைப் பெற்றிருக்கிறது. இதனடிப்படையிலேயே தீர்வு காண்பதற்கு கூட்டமைப்பு விரும்புகிறது.

தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். மக்களின் மீள்குடியமர்வு நடவடிக்கைகள் பூர்த்தியாக்கப்பட வேண்டும். இராணுவத்தினரின் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும்.

காணாமல் போகச் செய்யப்பட்டோர் விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். இந்த அடிப்படை அன்றாடப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதையடுத்துக் கருத்துத் தெரிவித்த ஜேர்மனி நாடாளுமன்றக் குழுவினர், “சமஸ்டி அடிப்படையிலான தீர்வை எட்டுவதற்கு தமது நாடும் உதவியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *