மேலும்

இனப்பிரச்சினையைத் தீர்க்காவிடின், மீண்டும் ஆயுதக் கிளர்ச்சி ஏற்படும் – சிறிலங்கா அதிபர் எச்சரிக்கை

maithriஇனப்பிரச்சினைக்கு இப்போது தீர்வு காணப்படாவிட்டால்,  மீண்டும் நாட்டை பிரிக்க தனிஈழம் கேட்கும், ஆயுதக் கிளர்ச்சிகள் தலைதூக்கும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

கொழும்பில் நேற்று நடந்த, எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் மக்கள் புரட்சி சுதந்திர வெற்றியின் 60 ஆவது ஆண்டு விழா நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“பண்டா – செல்வா உடன்பாடு, டட்லி – செல்வா உடன்பாடு ஆகியவற்றின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்கப்பட்டது. ஆனால் எதிர்ப்புகள் காரணமாக, அந்த உடன்பாடுகளைத் தீவைத்து எரிக்கும் நிலைமை பண்டாரநாயக்கவுக்கு ஏற்பட்டது.

அன்று உண்மையில் அதனை எதிர்த்தவர்கள், உடன்பாட்டின் சாதக,பாதகம் தொடர்பான பேச்சுக்களை நடத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாது அது கிழித்து எறியப்பட்டதனால் இன்றும் இனப்பிரச்சினை தீராமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அதேபோன்று ஜே.ஆர். ஜெயவர்தன 13 ஆவது திருத்தத்தை கொண்டு வந்தார். இந்திய – சிறிலங்கா உடன்பாட்டைச் செய்து கொண்டார். சந்திரிகா குமாரதுங்க தீர்வுப் பொதியை கொண்டு வந்தார். அதுவும் தீ வைத்து எரிக்கப்பட்டது.

1956 இல் இருந்த பிரச்சினை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த யுகத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

இல்லாவிட்டால் மீண்டும் நாட்டைப் பிரிக்க, தனிஈழம் கேட்கும் ஆயுதக் கிளர்ச்சிகள் தலைதூக்கும்.  அதற்கு இடமளிக்கக்கூடாது. ” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *