துறைமுக நகரத் திட்டத்துக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
சீனாவின் 1.4 பில்லியன் டொலர் முதலீட்டில், அமைக்கப்படவுள்ள துறைமுக நகரத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
துறைமுக நகரத் திட்டத்தை அமைக்க, சீன நிறுவனத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று மாலை, மீனவர்கள், சூழலியலாளர்கள், மற்றும் கத்தோலிக்க மதகுருமார் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த திட்டத்தினால், சிறிலங்காவின் கடல் வளம் பாதிக்கப்படும் என்றும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் மீனவர்கள் விசனம் வெளியிட்டனர்.
இந்த திட்டத்தை இடைநிறுத்துவதாக கூறியே தற்போதைய ஆட்சியாளர்கள், மக்களின் வாக்குகளைப் பெற்றதாகவும், ஆட்சிக்கு வந்ததும், அவர்கள் சீனாவுடன் இணைந்து கொண்டு, இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளதன் மூலம், வாக்குறுதிகளை மீறியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.



