மேலும்

சாவகச்சேரி வெடிபொருள் சந்தேகநபரிடம் வவுனியாவில் வைத்தே விசாரணை

Suicide vest-ammunitionசாவகச்சேரியில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ரமேஸ் எனப்படும், எட்வேட் ஜூலியன், இன்னமும் கொழும்புக்குக் கொண்டு வரப்படவில்லை என்றும், வவுனியாவில் வைத்தே விசாரிக்கப்படுவதாகவும், நீதிமன்றத்துக்கு சிறிலங்கா காவல்துறையினரால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தீவிரவாத விசாரணைப் பிரிவின்  ஆய்வாளர் இந்துனில் கொழும்பு மேலதிக நீதிவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் நேற்று அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார்.

யாழ்.காவல்துறை புலனாய்வுப் பிரிவின் உதவி ஆய்வாளர் தர்மசேனவின் முறைப்பாட்டுக்கு அமைய, தீவிரவாத விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறி,  சாவகச்சேரியில் மீட்கப்பட்ட  மீட்கப்பட்ட வெடி பொருட்களின் பட்டியலை ஆய்வாளர் இந்துனில் நீதிமன்றத்தில்  சமர்ப்பித்தார்.

அதன்படி எஸ்.பீ. ஆர்.024/ஏ சிறிய ரக தற்கொலை அங்கி- ஒன்று, சீ.ஓ.303, சீ.ஓ.299, சீ.ஓ.290, சீ.ஓ.399 ஆகிய இலக்கங்களைக் கொண்ட கிளைமோர் ரக குண்டுகள் -நான்கு, எஸ்.எம்.001, எஸ்.எம்.002 ஆகிய இலக்கங்களைக் கொன்ட மக்னட் குண்டு பெட்டிகள் – இரண்டு, 9 மி.மீ ரக ரவைகள்- 50 அடங்கிய இரு பெட்டிகள், ரி.என்.டி. அதி சக்திவாய்ந்த வெடி பொருட்கள் அடங்கியதாக கருதப்படும் இரு பொதிகள், சிலிக்கன் மணல் பொதிகள் இரண்டு மற்றும் அந்த பொருட்கள் மறைக்கப்பட்டிருந்த 2008 ஆம் ஆண்டின் ஜனவரி 29 ஆம் நாளுக்குரிய சிங்கள நாளேடு ஒன்றின் இரு பக்கங்கள் ஆகியன, குறித்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தற்கொலை அங்கியும், வெடிக்கும் நிலையில் இருந்த மேலும் இரு குண்டுகளும் சிறப்பு அதிரடிப்படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள வெல்லன்குளம், பிள்ளையார் வீதி, மறவன்புலவு மத்தி, சாவகச்சேரி எனும் முகவரியைச் சேர்ந்த எட்வேட் ஜூலியன் அல்லது ரமேஸ் சாவகச்சேரி காவல்துறையினரால் தீவிரவாத விசாரணைப் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இன்னும் கொழும்புக்கு கொண்டு வரப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதிவான் அருணி ஆட்டிகல, தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்களை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்த உத்தரவு பிறப்பித்ததுடன் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் 20 ஆம் நாளுக்கு ஒத்தி வைத்தார்.

இதனிடையே கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான எட்வேட் ஜூலியன் தற்போது, வவுனியாவில் உள்ள தீவிரவாத விசாரணைப் பிரிவின் பிராந்திய தலைமை பணியகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், இன்று அவர் பெரும்பாலும் கொழும்புக்கு  அழைத்து வரப்படுவார் எனவும் தீவிரவாத விசாரணைப்பிரிவின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு நாளிதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *