மேலும்

பாதுகாப்பு வலயங்களை அகற்றியிருந்தால் யாழ்ப்பாணத்தை இழந்திருப்போம் – சரத் பொன்சேகா

sarath-fonsekaவிடுதலைப் புலிகள் கோரியது போன்று பேச்சுவார்த்தைக் காலத்தில் யாழ்ப்பாண உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றியிருந்தால், மாவிலாறில் போர் வெடித்து இரண்டே வாரங்களில் யாழ்ப்பாணத்தை இழந்திருப்போம் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் சிறிலங்காவின் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,“ கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த முன்னாள் அதிபர்  நாட்டைத் தன்னிடம் கையளிக்குமாறு கூறியிருந்தார்.

அதிபர் மற்றும் பிரதமர் ஆகிய இருவரும் பதவியில் இருக்கும்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு நாட்டைப் பொறுப்புக் கொடுக்கும் நிகழ்வு உலகில் எந்தவொரு நாட்டிலும் இடம்பெறவில்லை.

நாட்டைத் தன்னிடம் பொறுப்புத் தருமாறு கோரும் முன்னாள் அதிபர் கடந்த 10 ஆண்டகளில் நாட்டில் நடத்தியிருந்த ஆட்சி அனைவருக்கும் தெரியும். அவருடைய ஆட்சியாலேயே நாடு இந்த மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளது.

துறைமுக நகரத் திட்டம் சீனாவிடமிருந்து இலவசமாகக் கிடைத்த திட்டம் எனக் கூறுகின்றனர். 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான இந்த திட்டத்தின் மூலம், 50 ஏக்கர் நிலத்தை இலவசமாக சீனாவுக்கு வழங்குவதற்கு கடந்த ஆட்சியாளர்கள் இணங்கியுள்ளனர்.

போர்க்காலத்தில் யாழ்ப்பாணத்தைப் பொறுப்பேற்க எந்த இராணுவத் தளபதிகளும் முன்வராத நிலையில்,  நான் இரண்டு மணித்தியாலங்களில் வடக்கிற்குச் சென்றேன். அப்போது ஆனையிறவு வீழ்ச்சியுற்றுக் கொண்டிருந்தது.

குறுகிய திட்டமிடலை அமைத்து நான் அமைத்த பதுக்குகுழிகளே இன்னமும் அங்கு இருக்கின்றன. இதனால்தான் போரின் போக்கை மாற்ற முடிந்தது.

இவ்வாறு போருக்கு தலைமைத்துவம் வழங்கி செயற்பட்ட இராணுவத் தளபதி யாரும் இருக்க மாட்டார்கள்.

யாழ்ப்பாணத்தில் நான் தளபதியாக இருக்கும்போது, உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட வேண்டும் என சமாதானப் பேச்சுக்களில் கலந்துரையாடப்பட்ட போது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தேன்.

அன்று பாதுகாப்பு வலயங்கள் மீள வழங்கப்பட்டிருந்தால் மாவிலாறு தாக்குதல் ஆரம்பித்து இரண்டு வாரங்களில் யாழ்ப்பாணத்தை இழந்திருப்போம். போர் செய்வதற்கு எதுவும் எஞ்சியிருக்காது” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *