மேலும்

ரவிராஜ் படுகொலை வழக்கு – 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

N.Ravirajநாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக,  ஏழு சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய போதிய சாட்சியங்கள் இருப்பதாக தெரிவித்துள்ள, கொழும்பு மேலதிக நீதிவான், இந்த வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார்.

நான்கு கடற்படையினர், கருணா குழுவைச் சேர்ந்த இரண்டு  பேர், உள்ளிட்ட ஏழு சந்தேநபர்களுக்கு எதிராக, ரவிராஜ் மற்றும் அவரது சாரதி ஆகியோரைப் படுகொலை செய்தது உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய குற்றப்பத்திரத்தை  குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்று கொழும்பு  மேலதிக நீதிவான் திலின கமகே, முன்னிலையில் தாக்கல் செய்தனர்.

ஏழு சந்தேநபர்களான பி.சுரேஸ், ஹெட்டியாராச்சிலாகே பிரசாந்த சந்தன குமார, காமினி செனவிரட்ண, பிரதீப் சமிந்த, சிவகாந்தன் விவேகானந்தன், ரொய்ஸ்டன் ரூசன் மற்றும் சம்பத் முனசிங்க ஆகிய சந்தேக நபர்களுக்கு எதிராக சுருக்க முறையற்ற விசாரணைகளை நடத்துமாறும் சட்டமா அதிபர் திணைக்களம் கோரியது. இதையடுத்து, சுருக்க முறையற்ற விசாரணைகளை நடத்துவதற்கு நீதிவான்  அனுமதி வழங்கினார்.

அதேவேளை, சந்தேகநபர்களான சரண் மற்றும் சுரேஸ் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. இதையடுத்து அவர்களை கைது செய்வதற்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

மேலும் இந்த வழக்கின் ஆவணங்களை கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றுமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *