மேலும்

ஆறுமுனைப் போட்டி: யாருக்கு இலாபம்? – ஆர்.மணி

tn-party-leadersஇப்போதுள்ள நிலையே நீடித்தால், வரும் மே 16 ம் தேதி சட்டமன்றத் தேர்தல் தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் முழுக்க, முழுக்க வித்தியாசமான தேர்தல்தான். காரணம், முதல் முறையாக தமிழ் நாடு ஆறுமுனைப் போட்டியை சந்திக்கப் போகிறது.

இன்றைய நிலையில் களத்தில் உள்ள கட்சிகள்: 1. அஇஅதிமுக 2. திமுக (காங்கிரஸ்+ இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) 3. மக்கள் நலக் கூட்டணி 4. தேமுதிக 5. நாம் தமிழர் 6. பாமக 7. பாஜக 8. தமாகா இவற்றில் தமாகா, பாமக இரண்டுமே ஏதோ ஒரு கட்சிக் கூட்டணியில் ஐக்கியமாக வாய்ப்புகள் அதிகம் என்பதால் ஆறுமுனைப் போட்டியாக கருத்தில் கொள்வோம்.

மற்றோர் முக்கியமான, இதுவரையில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் மாநிலம் பார்த்தறியாத விஷயம் ஆளும் கட்சிக்கு எதிராக பெரியளவில் மக்களிடம் எதிரப்பலைகள் இல்லாதது (2001 லும் இப்படி எதிர்ப்பலை இல்லாத சூழல் திமுகவுக்கு இருந்ததை மறப்பதற்கில்லை!).

வியாழக்கிழமை தேமுதிக மகளிர் அணி மாநாட்டில் பேசிய விஜயகாந்த் வரும் தேர்தலில் தான் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்து விட்டார். விஜயகாந்த் திமுக பக்கம் போகப் போகிறார், 59 சீட்டுக்கள் அவருக்கு ஒதுக்கப் பட்டுவிட்டதாக கடந்த வாரம் அவிழ்த்து விடப் பட்ட கட்டுக் கதைகளுக்கு எல்லாம் தன்னுடைய 12 நொடி பதிலில் அவர் பதிலளித்தார். ஆம். கேப்டன் தன்னுடைய முடிவை அறிவித்தது வெறும் 12 நொடிகளில் தான்.

நாட்டின் முன்னணி ஆங்கில தொலைக் காட்சியின் சென்னை செய்தியாளர் என்னிடம் இப்படிச் சொன்னார்: “தன்னுடைய முடிவை மிகவும் தெளிவாக, 12 நொடிகளில் கேப்டன் அறிவித்து விட்டார். வழக்கமாக தலைவர்களின் பேச்சுக்களை துல்லியமாக ‘கட்’ செய்து அவர்களது ‘பைட்’ எனப்படும் அந்த ரத்தினச் சுருக்கமான வார்த்தைகளை போடுவது எங்களுக்கு எல்லாம் பெரிய தலைவலிதான். ஆனால் வியாழக் கிழமை கேப்டன் எங்களுக்கு பெரிய வேலை எதுவும் வைக்கவில்லை”.

விஜயகாந்தின் பேச்சில் இதுவரையில் காணாத ஏதோ ஒரு விதமான உறுதி அல்லது தெளிவு என்று வைத்துக் கொள்ளுங்கள் இருந்தது… தேர்தல்களுக்கு இன்னமும் இரண்டு மாதங்கள் இருப்பதால் அவர் தன்னுடைய பதிலை சொல்லுவதற்கு மேலும் கால அவகாசம் எடுத்துக் கொள்ளுவாரென்றும் கூறப்பட்டது. அவரது வியாழக்கிழமை பேச்சில் ஒரு விதமான கோபப் பட்டவரின் காயமும், வருத்தமும் கூட தெரிந்ததுதான்.

‘நான் காசு வாங்கி விட்டேன் என்று கூறுகிறார்கள். இப்போது முடிவை அறிவித்து விட்டேன். இதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்’ என்று கேட்டதுதான் முக்கியமானது.

கடந்த வாரம் விஜயகாந்த் 59 சீட்டுக்களுக்கு ஒப்புக் கொண்டு விட்டார் என்று பரப்ப பட்ட செய்திதான் அவரது திடீர் முடிவுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. பேச்சு வார்த்தைகள் முக்கிய கட்டத்தில் இருக்கும் போதே இந்த வதந்தியை யார், ஏன், எதற்காக பரப்பினார்கள் என்பது தெரியவில்லை.

திமுக தேமுதிக கூட்டணி ஏற்படுவதை பிடிக்காதவர்கள், அதுவும் திமுக வுக்கு உள்ளேயிருப்பவர்கள் தான் இதனை செய்திருக்கலாம் என்றே நம்பப்படுகிறது. இதனை ஏன் செய்தார்கள், இது ஆர்வக் கோளாறா அல்லது வேறு ஆழமான உள் நோக்கங்கள் கொண்டதா என்றும் தெரியவில்லை. மொத்தத்தில் திமுக கோட்டை விட்டது. முகத்தில் கரியைப் பூசிக் கொண்டு நின்று கொண்டிருக்கிறது.

விஜயகாந்தின் முடிவு திமுகவுக்கு பலத்த அடி என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். சராசரி திமுக தொண்டனுக்கு மட்டுமல்ல, அதன் தலைமைக்கும் கூட இது பெரியதோர் ஏமாற்றமே. காரணம் தெரிந்தோ, தெரியாமலோ தேமுதிக வந்தால் தாங்கள் நிச்சயம் வெற்றி பெற்று விடலாம் என்றே எண்ணிக் கொண்டிருந்தவர்கள் இன்று செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள்.

‘பழம் கனிந்து விட்டது. எப்போது பாலில் விழும் என்று தெரியாது’ என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியபோது கிட்டத்தட்ட கூட்டணி உறுதி என்ற எண்ணம்தான் எல்லோருக்குமே ஏற்பட்டது. மற்றவர்கள் என்ன வேண்டுமானால் பேசலாம். ஆனால் கருணாநிதியே சொல்கிறார் என்றால் அது நிச்சயம் உண்மையாகத்தான் இருக்கும் என்றுதான் பரவலாக நினைத்தனர். ஆனால் மூன்றே நாட்களில் நிலைமை தலை கீழாக மாறியது.

விஜயகாந்த் கூட்டணிக்கு வந்தாலும் திமுக வெற்றி பெற்று விடும் என்றெல்லாம் யாரும் உறுதியாக கூறி விட முடியாதுதான். காரணம் கடந்த சில வாரங்களாக விஜயகாந்தின் பச்சையான மாடு பிடி அரசியலும், செய்தியாளர்களை பொது வெளியில் அவர் காறி உமிழ்வதும், அதனை அவரது மனைவி சிலாகித்து, இதுதான் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் என்று நியாயப் படுத்துவதும், எத்தகைய விளைவுகளை தேமுதிக வின் வாக்கு வங்கியில் ஏற்படுத்தியிருக்கும் என்பதனை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் பிரச்சனை அதுவல்ல. விஜயகாந்த் எந்தளவுக்கு வேண்டுமானாலும் ஒரு எதிர்மறையான சக்தியாக இருந்து விட்டுப் போகட்டும். பொது வெளியில் அவரது நடத்தை எந்தளவுக்கு வேண்டுமானாலும் மக்கள் மன்றத்தில் அவருக்கு எதிர்மறையான உணர்வை ஏற்படுத்தட்டும். அது பற்றியெல்லாம் திமுக வுக்கு கவலையில்லை. திமுக வுக்கு தேவை தேமுதிக வின் வாக்கு வங்கி. அது ஐந்து சதவிகிதமோ அல்லது ஆறு சதவிகிதமோ, அதுமட்டும்தான் தேவை. மனதளவில் திமுக வினரிடம் ஏற்பட்ட இந்த உணர்வுதான் இன்று பலத்த சேதாரத்தைச் சந்தித்துள்ளது.

தேமுதிக வந்தால் நிச்சயம் வென்று விடலாம் என்றே கனவு கொண்டிருந்தவர்கள் இன்று கேப்டனின் முடிவு வேறு மாதிரியானதாக மாறி விட்டதால், கருணாநிதியின் பாஷையில் சொன்னால் ‘ஆப்பசைத்த அது வாக’, பரிதாப கோலத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

ஆறுமுனைப் போட்டியில் யாருக்கு லாபம் என்பதற்கு பதில் மிகவும் சுலபமானது. ஆளும் அஇஅதிமுக வுக்குத்தான் இதில் இலாபம். காரணம் எப்போதுமே அஇஅதிமுக வின் வாக்கு வங்கியானது திமுக வின் வாக்கு வங்கியை விட சற்றே அதிகமானது. 2014 ல் அஇஅதிமுக வின் வாக்கு வங்கி 44 சதவிகிதமாக இருந்தது. இன்று அது 36 முதல் 40 சதவிகிதம் என்று கூறப்படுகிறது. திமுக வின் வாக்கு வங்கி 28 முதல் 30 சதவிகிதமாகும். இது இரண்டும் சற்றே கூடக் குறைய இருந்தாலும், இருவருக்குமான வித்திசாயம் குறைந்தது ஆறு சதவிதிதம்.

மேலும் தேமுதிக இல்லாததால் திமுக வெற்றி பெறாது என்ற எண்ணம் பரவலாகவே ஏற்பட்டு விட்டதால் அதுவும் வெற்றி பெறும் கூட்டணிக்கே வாக்களிக்க விரும்பும் குறிப்பிட்ட சதவிகித்தினரின் வாக்குகளையும் இன்று திமுக வுக்கு கொண்டு வர வாய்ப்பில்லைதான். தேமுதிகவைப் பற்றி திமுகவினர் உள்ளும், புறமும் ஏற்படுத்திய பிம்பம் தான் இன்று அவர்களுக்கு எதிராகவே திரும்பி யிருக்கிறது.

மற்றொன்று, இந்த நிமிடம் வரையில் ஆளும் கட்சிக்கு எதிராக பெரியளவில் எதிர்ப்பலை இல்லாதது. இது 1996 மற்றும் ஓரளவுக்கு 2011 ஐ ஒப்பிட்டுப் பார்த்தால்தான் நன்கு விளங்கும். அந்தளவுக்கு கண்டிப்பாக இப்போது அரசுக்கு எதிரான எதிர்ப்பலை இல்லை. இரண்டு திராவிடக் கட்சிகளுமே கூட்டணிகள் மூலம்தான் ஆட்சியைப் கைப்பற்றியிருக்கிறார்கள். எம்ஜிஆரே 1977 ல் சிபிஐ மற்றும் சில கட்சிகளுடனும், 1980 இரண்டு கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் ஜனதா கட்சி, குமரி அனந்தனின் காகாதேகா வுடனும், 1984 ல் காங்கிரசுடனும் சேர்ந்தே ஆட்சியை க் கைப்பற்றினார்.

ஜெயலலிதா 1991, 2001 மற்றும் 2011 ல் கூட்டணிகளுடன் சேர்ந்துதான் ஆட்சியைப் பிடித்தார். கருணாநிதியாலும் கூட்டணிகள் துணையுடன்தான் இதனைச் சாதிக்க முடிந்தது, 1989ல் மட்டும் இரட்டை இலை சின்னம் இல்லாமல் அஇஅதிமுக இரண்டாக பிளவுப் பட்டுக் கிடந்த போது திமுக வென்றது. ஆனால் இரண்டே மாதங்களில் பிளவுண்டிருந்த அஇஅதிமுக மீண்டும் ஒன்றிணைந்து இரட்டை இலையை பெற்று விட்ட பின்னர் நடைபெற்ற மதுரை கிழக்கு மற்றும் மருங்காபுரி இடைத் தேர்தல்களில் திமுக தோற்றது.

ஆகவே கடந்த கால வரலாற்றை வைத்துப் பார்த்தால் பல முனைப் போட்டியில் யாருக்கு சாதகம் என்பது தெளிவாகவே தெரியும். திமுக கோட்டை விட்டு விட்டது. பாஜக என்ன செய்யப் போகிறதென்று தெரியவில்லை. கேப்டனை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளுபவர்கள் கூட்டணிக்கு வரலாம் என்கிறார் விஜயகாந்த் மனைவி பிரேமலதா. ஆனால் இதற்கும் வாய்ப்பு குறைவு என்றுதான் படுகிறது. காரணம் வியாழக்கிழமை தனது உரையில் கேப்டன் நான்கு முறை தான் தனித்துப் போட்டியிடப் போவதாக கூறியதுடன், வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக ஏழு பேர் கொண்ட குழுவையும் சுதீஷ் தலைமையில் நியமித்து விட்டார்.

ஆகவே இதற்கு மேலும் இந்த முடிவில் மாற்றம் ஏற்படும் என்று தெரியவில்லை. ஒரு விதத்தில் எல்லோருமே தனியாக நிற்பதும் நல்லதுதான். காரணம் அவரவர் சக்தி நன்றாகவே வெளியில் தெரிந்து விடும். ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்களின் ஆர்வக் கோளாறும், ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களைப் பற்றித் தாங்களே கொண்டிருக்கும் அதீதமான சுய பிம்பங்களும், மதிப்பீடுகளும் மீண்டும் ஜெயலலிதாவை அரியணையில் அமர வைக்கலாம். அப்படி நிகழ்ந்தால் அதற்காக ஜெயலலிதா நிச்சயம் எதிர்கட்சிகளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்!

– ஆர்.மணி

வழிமூலம் – oneindia

ஒரு கருத்து “ஆறுமுனைப் போட்டி: யாருக்கு இலாபம்? – ஆர்.மணி”

  1. மனோ says:

    அரசியல்வாதிகளில் நா நயம் மிக்கவர்கள் வரிசையில் கலைஞரையும் விஜயகாந்தையும் எத்தனையாவது இடத்தில் வைக்கலாம் என எந்த அரசியல் விமர்சராலும் கூறமுடிந்தால் இத்தக் கட்டுரையும் சரி என ஏற்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *