மேலும்

வடக்கு, கிழக்கை இணைக்க அனுமதியோம் – ரவூப் ஹக்கீம்

rauff-hakeemமூன்று பத்தாண்டுகளாக நீடிக்கும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு, கிழக்கு இணைப்பை முன்மொழிந்தால், முஸ்லிம்களுக்கும் தனி மாகாணம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம்.

“ ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் முஸ்லிம்களின் பிரச்சினை அணுகப்படாத வரையில் வடக்கு, கிழக்கு இணைப்பை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

வடக்கிலும், கிழக்கிலும் வாழும் முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் அமைக்கும்  யோசனை ஒன்றும் புதியது அல்ல.

1957இல் திருகோணமலையில் நடந்த மாநாட்டில், 1977ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், பல்வேறு தமிழ்த் தேசியத் தலைவர்களால் இது முன்மொழியப்பட்டது.செல்வநாயகம் தீர்விலும் கூட இது ஒரு பகுதியாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களைப் புறக்கணித்து விட்டு, இனப்பிரச்சினைக்கு தமிழ்த் தேசியத் தலைவர்களால் நிரந்தரமான தீர்வைக் காண முடியாது.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள்  இந்திய- சிறிலங்கா உடன்பாட்டின் கீழ் 1987ஆம் ஆண்டு ஒரே ஒரு ஆண்டுக்கு என்று மட்டுமே தற்காலிகமாக இணைக்கப்பட்டது.

முஸ்லிம்களின் அபிலாசைகளை கருத்தில் கொள்ளாமல் அந்த இணைப்பு 24 ஆண்டுகளுக்கு நீடித்தது. இது தொடர்பாக கருத்துக்கணிப்பும் நடத்தப்படவில்லை.

இந்தப் பிரச்சினைக்கு ஒரே இரவில் தீர்வைக் காண முடியாது.

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது, இந்த இரு மாகாணங்களில் உள்ள மக்களில் மாத்திரம் தங்கியுள்ள விடயமல்ல.சிறிலங்காவில் வாழும் அனைத்து மக்களிலும் தங்கியுள்ளது.

சிலர் வடக்கு, கிழக்கு இணைப்புத் தொடர்பாக குறுகிய அரசியல் நலன்களுக்காக கருத்து வெளியிடுகின்றனர்.ஆனால் இது இராஜதந்திர ரீதயாக அணுகப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கருத்து “வடக்கு, கிழக்கை இணைக்க அனுமதியோம் – ரவூப் ஹக்கீம்”

  1. மனோ says:

    சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு தமிழ் ஈழத்தில் என்ன வேலை? இவரது கோரிக்கையை சிங்களத்திடம் துணிவிருந்தால் கேட்டுப் பெறலாமே. இன ஒற்றுமையைச் சிதைக்க வந்த …..இவரை இஸ்லாமிய மக்கள்தான் திருத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *