மேலும்

மகிந்தவின் அரசியலில் தேங்காய்கள் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

mahinda-vajraகறுப்பு மந்திர சூனியங்கள் மற்றும் தேங்காய் உடைப்பு வழிபாடு போன்றன சிறிலங்காவின் அதிபர்களை வீட்டிற்கு அனுப்புவதுடன், அரசாங்கங்களையும் கவிழ்க்குமாயின், 2009ல் மகிந்த வீட்டிற்கு அனுப்பப்பட்டிருப்பார்.

இவ்வாறு சிலோன் ரூடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது விசுவாசிகளின் அரசியலில் தேங்காய்கள் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றன.   சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராகவும் அதன் உறுப்பினர்களுக்கு எதிராகவும் கோயில்கள் மற்றும் விகாரைகளில் பல நூறாயிரக்கணக்கான தேங்காய்கங்களை உடைப்பதன் மூலம் பயனுள்ள பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என மகிந்தவும் அவரது விசுவாசிகளும் நம்புகின்றனர்.

‘தேங்காய்களை உடைப்பதன் மூலம் தற்போது நிலைமைகள் முன்னேற்றமடைகின்றன’ என மகிந்த ராஜபக்ச கண்டியிலுள்ள தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபடுவதற்காக சென்றபோது அதன் நுழைவாயிலில் நின்றவாறு தெரிவித்தார்.

ராஜித சேனாரட்ன சத்திர சிகிச்சைக்காக சிங்கப்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான தேங்காய் உடைப்பு வழிபாடு தமக்குச் சாதகமான பலனைத் தந்துள்ளதாக மகிந்த விசுவாசிகள் சமூக ஊடகங்களில் தெரிவித்தனர். இதேபோன்றே வணக்கத்திற்குரிய மாதுளுவாவே சோபித தேரர் சிங்கப்பூரில் காலமாகிய போது, மகிந்த விசுவாசிகள் தமது தேங்காய் உடைப்பு பிரார்த்தனை வீண்போகவில்லை எனத் தெரிவித்தனர்.

அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன இறந்தவேளையிலும் கூட, மகிந்தவிற்கு குணவர்த்தன இழைத்த அநியாயத்திற்கான பலனைத் தற்போது அனுபவித்து விட்டார் என மகிந்த விசுவாசிகள் முகப்புத்தகம் மற்றும் சமூக ஊடகங்களில் சுட்டிக்காட்டினர்.

எண்பது வயதான அரசியல்வாதி பேராசிரியர் விஸ்வ வர்ணபால கடந்த வாரம் இறந்த வேளையிலும் இதையே மகிந்த ராஜபக்சவின் விசுவாசிகள் கூறினர். விஸ்வ வர்ணபால கடந்த அதிபர் தேர்தலில் எதனையும் செய்யவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே.

சிங்கப்பூர் வைத்தியசாலையில் ராஜித மாற்றுவழி இணைப்பறுவை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட போது, மகிந்தவிற்கு துரோகமிழைத்தமைக்காகன தண்டனையை ராஜித தற்போது அனுபவிப்பதாக மகிந்த விசுவாசிகள் பரப்புரை செய்தனர். இவ்வாறான விடயங்களை மகிந்த விசுவாசிகள் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டுள்ளதுடன், தேங்காய்களை உடைப்பதன் மூலம் அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியும் என இவர்கள் எண்ணுகின்றனர்.

பிறேமதாசவின் ஆட்சிக்காலத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் திருமதி.சிறிமாவோ பண்டாரநாயக்க றொஸ்மீட்டிலிருந்த அவரது வதிவிடத்தில் படியில் சறுக்கிக் கீழே விழுந்தார். இவர் அந்தவேளையில் தனது மகன் அனுராவுடனான கருத்து முரண்பாட்டால் மனஅழுத்தத்திற்கு உட்பட்டிருந்தார்.

சிறிமாவோ மேலதிக சிகிச்சைக்காக வெளிநாட்டிற்குச் சென்றிருந்தார். அவர் நீண்ட காலமாக அரசியலிற்குத் திரும்பாது ஓய்வில் இருந்தார். இதே காலப்பகுதியில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அனுருத்த ரத்வத்தை, கண்டியிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த வேளையில் வீதி விபத்திற்கு ஆளாகினார். இவரது காலொன்றில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நீண்டகாலமாக இவர் அரசியலிலிருந்து ஓய்வெடுத்தார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை அழிப்பதற்கு பிறேமதாசா மந்திரக் கோலை உபயோகிக்கிறார் என்ற கருத்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பொதுவான நம்பிக்கையாகக் காணப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிறேமதாசவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்ட வேளையில், நாடாளுமன்றின் எதிர்க்கட்சி இருக்கைகளில் மலையாள வசீகர எண்ணெயை பிறேமதாச ஊற்றியதாக லலித் அத்துலத்முதலி, காமினி திசநாயக்க, போன்றவர்களும் மகிந்த ராஜபக்ச மற்றும் ஏனைய சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் தெரிவித்தனர்.

இதற்கு முதல் நாள் இரவு பிறேமதாசா, நாடாளுமன்றில் மலையாள மாந்திரீகப் பூசை ஒன்றை மேற்கொண்டதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டன. இதுமட்டுமல்லாது, பிறேமதாச தனது அதிபர் பதவியைப் பாதுகாப்பதற்காக மலையாள மந்திரக் கோல் சடங்கில் ஈடுபடும் வல்லுனர்களை  வரவழைத்ததுடன், இவருக்கு ஏழு கன்னிப் பெண்கள் பால் அபிசேகம் செய்ததாகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரால் வதந்தி பரப்பப்பட்டது.

நாட்டில் கன்னிப் பெண்கள் காணாமற் போகின்றனர் என்கின்ற பரப்பரையையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் பத்திரிகை ஒன்றின் ஊடாகப் பரப்பினர்.

இவ்வாறான வதந்திகள் எவ்வளவு தூரம் உண்மை என்பதற்கப்பால், பிறேமதாச, மாய மந்திரச் சடங்கில் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பது உண்மையாகும். அத்துடன் இவர் சோதிடத்திலும் நம்பிக்கை கொண்டிருந்தார். அதற்காக பிறேமதாசா, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் மீது மந்திரக் கோல் சடங்கை மேற்கொண்டிருந்தார் எனக் கருதமுடியாது.

பிறேமதாச தனது அதிபர் பதவியைத் தக்கவைத்திருப்பதற்காக இவ்வாறான சடங்குகளை மேற்கொண்டார் எனக் கூறப்பட்டாலும் கூட, இவரால் இவரது பதவியையும் உயிரையும் பாதுகாக்க முடியவில்லை. பிறேமதாச, புலிகளின் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.

பிறேமதாசாவை விட, கறுப்பு மந்திரக் கோல் சடங்குகள் மீதும் சோதிடம் மீதும் மகிந்த ராஜபக்ச அதிக நம்பிக்கை கொண்டுள்ளார். இவ்வாறானதொரு பின்னணியைக் கொண்ட ஒருவரையே மகிந்த தனது வைத்தியராகத் தெரிவு செய்தார். பிறேமதாச தனக்கென எந்தவொரு சோதிடரையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் மகிந்த தனக்கென சோதிடர் ஒருவரை வைத்திருந்தார்.

தான் கொல்லப்பட்டு விடுவேனோ என்ற அச்சம் மகிந்தவிற்கு இருந்தது. சோதிடர் சந்திரசிறி பண்டார, மகிந்த துன்பகரமான சாவைச் சந்திக்கப் போகிறார் என எதிர்வுகூறியதன் காரணமாக, இவர் சிறையிலடைக்கப்பட்டார். மற்றத் தலைவர்களைப் போலல்லாது, மகிந்த தான் போகும் இடமெல்லாம் தனது கையில் கறுப்பு மந்திரக் கோலைக் கொண்டு சென்றுள்ளார்.

மகிந்தவின் கறுப்பு மந்திரக் கோல் மீதான நம்பிக்கை தொடர்பாக அனைத்துலக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. சந்திரிக்கா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினரை வசப்படுத்துவதற்கான மலையாள கறுப்பு மந்திரக் கோல் சடங்கொன்றை மகிந்த மேற்கொண்டிருந்தார் என்ற வதந்திகள் பரப்பப்பட்டன. மந்திரக் கோல் மற்றும் சோதிடம் போன்றவற்றில் மகிந்த கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டிருந்த வேளையில், அனோமா பொன்சேகா தனது கணவர் சரத் பொன்சேகா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட வேண்டும் எனக்கோரி விகாரைகளில் தேங்காய்களை உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டார்.  அனோமாவின் இந்தச் செயலை மகிந்தவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனினும், இந்த வழிபாட்டால் மகிந்தவிற்கு எவ்வித தீங்கும் ஏற்படவில்லை.

இவர் தொடர்ந்தும் பத்தாண்டுகள் அதிபராகப் பதவி வகித்துள்ளார். இவருக்கு முன்னாள் நாட்டை ஆண்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தன மற்றும் சந்திரிக்கா ஆகியோர் தமது ஆட்சிக்காலங்களில் மகிந்தவை விட ஓராண்டு காலம் அதிகமாகவே ஆட்சி செய்தனர். மகிந்தவும் அதிபர் தேர்தலைக் காலத்திற்கு முன்னர் நடத்தாது விட்டிருந்தால், இவா தற்போதும் அதிபராக இருந்திருப்பார். சோதிடம் மற்றும் கறுப்பு மந்திரக் கோல் போன்றவற்றில் மகிந்த அதிக நம்பிக்கை கொண்டிருந்ததால், தனது கட்சியின் பொதுச் செயலர் தனக்கெதிராக தேர்தலில் போட்டியிடுவார் என்பதை இவர் கவனத்தில் எடுக்கவில்லை.

மகிந்த, கறுப்பு மந்திரவாதிகள் மற்றும் சோதிடர்களாலேயே அழிவைச் சந்தித்தார். ஆனால் இதே நம்பிக்கைகளை இவர் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காகப் பயன்படுத்துகிறார் என்பது ஆச்சரியமளிக்கும் விடயமாகும். சோபித தேரரின் இழப்பு என்பது மகிந்தவிற்கு தீமை அளித்துள்ளது.

தேரர் உயிருடன் இருந்திருந்தால், நல்லாட்சிக்கு எதிராக மக்களை ஒன்றிணைத்திருப்பார். தேரர் இறக்கும் வரை தற்போதைய ஆட்சியை எதிர்த்துச் செயற்பட்டிருந்தார். தேரர் தற்போதைய ஆட்சியில் நிலவும் பல்வேறு பின்னடைவுகள் தொடர்பாகக் குற்றம் சுமத்தியிருந்தார். இவர் தனக்கென ஆதரவாக எவ்வித அரசியல் கட்சியையும் கொண்டிருக்கவில்லை.

1977ல் அப்போதைய ஐ.தே.க அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான பரப்புரையில் சோபித தேரர் ஈடுபட்டிருந்தார். 1994ல் சந்திரிக்கா பிரதமராகப் பதவியேற்ற போது, சோபித தேரரின் விகாரைக்குச் சென்றிருந்தார். சந்திரிக்கா பிழையான அரசியல் பாதையில் பயணிக்க ஆரம்பித்த போது, ஐ.தே.க ஆட்சியிலிருந்து தூக்கி வீசப்பட்டு 17 ஆண்டுகள் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாமைக்குக் காரணமான சோபித தேரரால் மீண்டும் ஐ.தே.க ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்டது. தேரர் உயிருடன் இருந்திருந்தால் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழும் முதலாவது நபராக இருந்திருப்பார். இந்த உண்மையை மகிந்தவும் அவரது விசுவாசிகளும் உணரத் தவறிவிட்டனர்.

இதற்குப் பதிலாக இவர்கள் சோபித தேரரின் இறுதிச்சடங்கின் போது மதுபானம் அருந்தி மகிழ்ந்தனர். ‘பாவிகள் ஒருபோதும் ஞானிகளாக மாறமுடியாது’ இந்த உண்மை மகிந்த விசுவாசிகளுக்குப் பொருத்தமானதாகும். ஏனெனில் இவர்கள் மக்கள் மீது நம்பிக்கை கொள்ளத் தவறியுள்ளனர். ஆனால் இவர்கள் மந்திரவாதிகள் மற்றும் சோதிடர்களுக்குப் பின்னால் ஓடுகின்றனர்.

‘சேர், அன்ரன் ஜோன்ஸ் மற்றும் அஜந்த ரணசிங்க ஆகியோர் மகிந்த விசுவாசிகளின் தேங்காய் உடைப்பு வழிபாட்டாலேயா இறந்தனர்?’ என முச்சக்கரவண்டி ஓட்டுநர் ஒருவர் என்னிடம் வினவினார். ஆம்.. நிச்சயமாக இந்த வினாவில் அர்த்தம் உள்ளது.

அதிபர் தேர்தலை முன்கூட்டி நடத்துவதற்கான அறிவிப்பை மகிந்த விடுத்த போது, சோபித தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மகிந்த மற்றும் கோத்தபாய ஆகியோர் தேரரை அமைதியாக இருக்குமாறு அச்சுறுத்தல்களை மேற்கொண்டனர். இவர்களது அச்சுறுத்தல்கள் மற்றும் தலையீடுகளின் விளைவாகவே தேரர் நோய்வாய்ப்பட்டார்.

சோபித தேரர் இறப்பதற்கு முன்னர் அஸ்கீரிய பீடத்தின் மகாநாயக்கர் வணக்கத்திற்குரிய உடுகம சிறி புத்தரகித்த தேரர் காலமாகினார். புத்தரகித்த தேரர் இறந்த வேளையில் மைத்திரி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மகாநாயக்க தேரர் ஒருபோதும் அரசியலில் பிரவேசிக்கவில்லை. இவர் தனது முதுமையின் காரணமாக நோய்வாய்ப்பட்டு இறந்தார்.

கறுப்பு மந்திர சூனியங்கள் மற்றும் தேங்காய் உடைப்பு வழிபாடு போன்றன சிறிலங்காவின் அதிபர்களை வீட்டிற்கு அனுப்புவதுடன், அரசாங்கங்களையும் கவிழ்க்குமாயின், 2009ல் மகிந்த வீட்டிற்கு அனுப்பப்பட்டிருப்பார். ஏனெனில் 2009ல் சிறிலங்காவின் வடக்கில் காணாமற் போனவர்களின் பெற்றோர்கள் மற்றும் கணவனை இழந்த பெண்கள் போன்றோர் ஒவ்வொரு கோயில்களிலும் மகிந்தவைப் பழிவாங்குவதற்காக தேங்காய்களை உடைத்து வழிபாட்டில் ஈடுபட்ட போது மகிந்த வீட்டிற்கு அனுப்பப்பட்டிருப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *