மேலும்

வெளியே வந்ததும் லெப்.யோசித ராஜபக்சவிடம் விசாரணை – ருவான் விஜேவர்த்தன

Yoshitha-Rajapaksaவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லெப்.யோசித ராஜபக்ச சிறையில் இருந்து வெளிவந்த பின்னர், சிறிலங்கா கடற்படையில் இருந்த போது, அவரது மோசடிகள், தன்னிச்சையான செயற்பாடுகள், மற்றும் செலவினங்கள் தொடர்பாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன இன்று நாடாளுமன்றத்தில் இந்த தகவலை வெளியிட்டார்.

”யோசித ராஜபக்ச கடற்படை வீரராக தனிப்பட்ட மற்றும் பயிற்சிகளுக்கென 27 தடவைகள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். அதற்கு பாதுகாப்புச் செயலர் அனுமதி வழங்கியுள்ளார்.

ரஷ்யவில் உள்ள சிறிலங்கா தூதுவர் உக்ரேனின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்புக்காக கடற்படையைச் சேர்ந்த ஒருவரை பரிந்துரைக்குமாறு அறிவித்திருக்கிறார். இதற்கமைய கடற்படைத் தளபதி, லெப்.யோசித ராஜபக்சவின்  பெயரை பரிந்துரை செய்துள்ளார்.

பாதுகாப்புச் செயலரின் அனுமதியுடனேயே அவர் வெளிநாடு சென்றுள்ளார்.  அவரது 27 பயணங்களுக்கும் பாதுகாப்புச் செயலரின் அனுமதி கிடைத்துள்ளது.  முன்னாள் அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது.

உக்ரேன் நாட்டுக்கு பல தடவைகள் சென்றுள்ளார். அதைவிட  பிரித்தானியா, அமெரிக்கா, சிங்கப்பூர், அவுஸ்ரேலியா, மியன்மார், ஹொங்கொங், கொரியா, மலேசியா, ரஷ்யா, நியூசிலாந்து, ஜப்பான் என பல நாடுகளுக்கும் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

இதில் தனிப்பட்ட பயணங்களும் அடங்கியுள்ளன. இந்த விடயம் தொடர்பாக  முன்னாள் அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலருக்குமே தெரியும்.

அதேவேளை கடற்படை தளபதி எவ்வாறு அனுமதி வழங்கினார் என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும்.

தற்போது யோசித ராஜபக்ச சிறையில் உள்ளார். அவர் சேவையில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

வெளியில் வந்ததும் வெளிநாட்டு பயணங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *