மேலும்

போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலகப் பங்களிப்பு தேவை – சரத் பொன்சேகா

sarath-fonsekaசிறிலங்கா படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில், அனைத்துலக கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐ.நா விசாரணைக்கான ஆலோசகர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று முதல்முறையாக உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“விசாரணைகளில் அனைத்துலகப் பங்களிப்புத் தொடர்பாக அச்சம் கொள்ள வேண்டியதில்லை. விசாரணைகளில் அனைத்துலகப் பங்களிப்பு இருந்தால் அது நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.

நான் தலைமையேற்று நடத்திய போர், ஜெனிவாவில்  ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்கள் நெறிமுறைகளுக்கு அமையவே இடம்பெற்றது.

யாரேனும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால், சட்டங்களை மீறியிருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் போது, பாதுகாப்புப் படையினரின் கௌரவமும், மதிப்பும் பாதுகாக்கப்பட வேண்டும்.

வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். வெள்ளைக்கொடி சம்பவம் உண்மையா- பொய்யா என்று மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

சில குழுக்கள் பொதுமக்கள் மத்தியில் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

தேசிய பாதுகாப்பின் மீது அக்கறை கொண்டவர்களாக காட்டிக்கொள்ளும் இத்தகைய குழுவினரின் தவறான வழிநடத்தலில் மக்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது. தொடர்ந்தும் நாட்டில் அமைதியை உறுதிப்படுத்த வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்கா இராணுவத்துக்குத் தலைமை தாங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அண்மையில் ஐதேகவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிராந்திய அபிவிருத்தி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *