மேலும்

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?

TNA meetingஇனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில், விரைவில் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளன.

இதுதொடர்பாக ஆராய்வதற்கு, நேற்று கொழும்பில் நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில்,  எட்டுப் பேர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில், முதலில் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக நீண்டநேரம் ஆராயப்பட்டு உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோருவதெனவும், துரித நடவடிக்கை எடுப்பதென்றும் முடிவெடுக்கப்பட்டது.

இனப்பிரச்சினை விவகாரம்

அதையடுடுத்து, நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றியமைக்கும் பிரேரணையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் என்ற பகுதியில் புதிய என்ற சொற்பதம் நீக்கப்பட்டமை, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதை தேசிய பிரச்சினைக்கான தீர்வு என மாற்றியமை உட்பட சுதந்திரக்கட்சியால் கோரப்பட்ட ஒன்பது திருத்தங்களும் ஐக்கிய தேசியக் கட்சியால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

அத்துடன் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை விடயங்கள் குறித்து அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ளுதல் அல்லது வெளிப்படைத்தன்மையுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டுமென ஈபிஆர்எல்எவ் வலியுறுத்தியது.

இதன்போது புதிய என்ற சொற்பதம் நீக்கப்பட்டமையால் எவ்விதமான விளைவுகளும் ஏற்படாது. அரசியலமைப்பை வரைதல் என்பது புதிய அரசியல் அமைப்பை வரைவதேயாகும் என தமக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் தேசிய பிரச்சினை எனக் குறிப்பிடப்பட்டுள்ளமையால் இனப்பிரச்சினை உட்பட பல்வேறு விடயங்களையும் யாப்பில் உள்வாங்குவதற்கான ஏதுநிலைகள் ஏற்பட்டுள்ளன. ஆகவே அந்த விடயம் தொடர்பில் அச்சமடையத்தேவையில்லை என்று, இந்த விடயங்களை கையாளும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எடுத்துக் கூறினார்.

அதனையடுத்து, சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்தப்பட்டு உடன்படிக்கை அல்லது இணக்கப்பாட்டை எட்டுவது அவசியம். அதனை மறுக்கவில்லை என்று கூட்டமைப்பின் தலைவர், இரா.சம்பந்தன்  குறிப்பிட்டதுடன் தென்னிலங்கையின் சமகால நிலைமைகளை யும் சுட்டிக்காட்டி, இனப்பிரச்சினை தொடர்பில் எமது அடிப்படை விடயங்களை முன்வைத்து நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றியமைக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பிற்கு முன்னர் பேச்சு நடத்த முயன்றால், அது குழப்ப நிலைமைகள் உருவாகுவதற்குக் காரணமாகி விடும் என்றும் குறிப்பிட்டார்.

குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர் அரசாங்கத்துடன் பேச்சு நடத்தப்படும் என்றும், அதில்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்கேற்பது உறுதி செய்யப்படும் என்றும் சம்பந்தன் உறுதியளித்தார்.

வடக்கு மாகாணசபை விவகாரம்

இதனையடுத்து வடக்கு மாகாண முதல்வர் உட்பட மாகாண சபை விவகாரம் தொடர்பாக, ஈபிஆர்எல்எவ் மற்றும் புளொட் ஆகியன  தமது கருத்துக்களை முன்வைத்தன.

இதன்போது முதலமைச்சர் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களை முறையாக கையாள்வதற்கான பொறிமுறை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமை உட்பட வடக்கு மாகாண சபையுடன் நல்லுறவைப் பேணுவதற்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்கள் முறையாக நடத்தப்பட வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் கடந்த காலங்களில் வலியுறுத்தப்பட்டபோதும் அவை முறையாக முன்னெடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

இதனையடுத்து இந்தப் பிணக்குகள் தொடர்பாக உரிய தீர்வொன்றை கூட்டமைப்பின் தலைமை பெற்றுக்கொடுக்க வேண்டும். விரைவில் வடக்கு மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அப்போது, கொழும்பில் வடக்கு மாகாண முதல்வருடன் நடத்திய சந்திப்பில் கலந்துரையாடிய விடயங்கள் குறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்  வெளிப்படுத்தியதுடன், விரைவில் வடக்கிற்கான பயணத்தை  மேற்கொண்டு இந்த விடயத்தை முறையாக கையாள்வதாகவும் உறுதியளித்தார்.

கட்சித்தாவல்

கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் சார்பில் தெரிவான நாளுமன்ற உறுப்பினர்கள்  தமிழ் அரசுக் கட்சியில் இணைந்து கொள்வதற்கு இடமளிக்கக் கூடாதென மூன்று பங்காளிக்கட்சிகளும் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்தன.

தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா கூட்டத்தில் பங்கேற்காமையினால் இந்த விடயம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

புரிந்துணர்வு உடன்பாடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் நடவடிக்கைகள் காலம் தாழ்த்தப்படும் நிலையில் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றை மேற்கொள்வது குறித்த யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டபோதும் அதில் கையொப்பமிடாத நிலைமையே நீடிக்கின்றது. இவ்வாறான நிலையில் கூட்டமைப்பாக எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள விடயங்கள் சிலவற்றை உள்ளடக்கிய ஆவணம் ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஏனைய கட்சிகளிடம் கையளித்தார்.

அந்த ஆவணத்தில் உள்ள விடயங்கள் சிலவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ரெலோ சார்பில் வலியுறுத்தப்பட்டதுடன், மாவை.சேனாதிராசா மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் சமுகமளிக்காத நிலையில் அதனை இறுதி செய்ய முடியாதெனவும் கூறப்பட்டது.

அரசியல் விவகாரங்கள் குறித்து ஆராய குழு

அரசியல் தீர்வு உட்பட அனைத்து விடயங்களையும் எதிர்காலத்தில் கையாள்வதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்றைய கூட்டத்தில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவில் மாவை.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், சித்தார்த்தன், ஆர்.ராகவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதனையடுத்து மீண்டும் எதிர்வரும் செவ்வாய்கிழமை பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின்போது புரிந்துணர்வு உடன்பாடு கைச்சாத்திடுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

ஒரு கருத்து “கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?”

  1. மகேந்திரன் says:

    பொறுப்புடன் செயல்படவேண்டும் இங்கே தான் தாங்கள் கட்சி அரசியனல கைவிட்டு ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இனத்திற்கான விடுதலையை நோக்கியதாக அமைய வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *