மேலும்

எட்கா உடன்பாடு ரணிலை வீட்டுக்கு அனுப்புமா? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

ranil-sushmaஉள்நாட்டு யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வர இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்பதை ஜே.ஆர். புரிந்து கொண்டார். இதனால் இந்தியாவை தனது சூழ்ச்சி வலைக்குள் வீழ்த்துவதென ஜே.ஆர். தீர்மானித்தார். இந்தியாவால் வளர்த்தெடுக்கப்பட்ட புலிகளை இந்தியாவே அழிக்க வேண்டும் என்பதற்காகவே இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

இந்தியா – சிறிலங்கா இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் இவை தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் போன்ற அரசியல்வாதிகளின் பார்வைகள் என்ன என்பது தொடர்பாக இப்பத்தியில் ஆராயப்படுகிறது.

இவர்களது கருத்துக்கள் உத்தியோகபூர்வ ரீதியாகவும் உத்தியோகபூர்வமற்ற வகையிலும் எவ்வாறான முரண்பாடான விடயங்களை உள்ளடக்கியுள்ளன என்பதை இங்கு நோக்க முடியும்.  ஆகவே, குறுகிய அரசியல் நலன்களை அடைந்து கொள்வதற்காகவே அரசியல்வாதிகள் உடன்படிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்பது இங்கு தெளிவாகிறது.

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்தின் ஆசிரியர் சேகர் குப்தா , 2008ல் நேர்காணல் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இந்த நேர்காணலின் போது, 1987ல் மேற்கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தமானது இனப்பிரச்சினைக்குச் சிறந்ததொரு தீர்வு எனவும் 13வது திருத்தச்சட்டமும் சிறந்ததொரு தீர்வாகக் காணப்படுவதாகவும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இவற்றை முன்னுணர்ந்து 1987ல் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தமை வரவேற்கத்தக்க விடயம் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்டதைத் தொடர்ந்து இந்திய அமைதி காக்கும் படை சிறிலங்காவிற்கு வருகைதந்தமை தொடர்பாகவும் சேகர் குப்தாவிடம் மகிந்த ராஜபக்ச சுருக்கமாக விளக்கியிருந்தார்.

‘இந்திய அமைதி காக்கும் படையை சிறிலங்காவிலிருந்து மீண்டும் இந்தியா அழைக்க வேண்டும் என அதிபர் பிறேமதாச கோரிக்கை விடுத்தமை தவறானது. இதனால் இந்திய-இலங்கை உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்திய அமைதி காக்கும் படையினரால் ஆற்றப்பட்ட சேவைகளுக்கு இலங்கையர்கள் நன்றி செலுத்த வேண்டும். சிறிலங்காவின் ஒருமைப்பாட்டிற்காக இந்திய அமைதி காக்கும் படையினர் தமது உயிர்களைத் தியாகம் செய்தனர். இந்தியப் படையினர் சிறிலங்காவில் மேலும் சிறிது காலம் பணியாற்றுவதற்கு அனுமதித்திருந்தால், நாங்கள் வெற்றியைப் பெற்றிருப்போம். ஆனால் தென்னிலங்கை வாழ் தீவிரவாதிகளின் அழுத்தம் காரணமாக பிறேமதாசா, இந்திய அமைதி காக்கும் படையினரை அவர்களது நாட்டிற்குத் திருப்பி அனுப்பினார்’ என மகிந்த ராஜபக்ச 2008ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

இதே மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 1989 மே 26 அன்று சிறிலங்கா நாடாளுமன்றில் ஆற்றிய உரையின் போது,  1987ல் மேற்கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கை மற்றும் இந்திய அமைதி காக்கும் படை போன்றவற்றை விமர்சித்திருந்தார்.

இவர் தனது நாடாளுமன்ற உரையில் ‘இந்திய அமைதி காக்கும் படையினர் இங்கு கொண்டுவரப்பட்டதால் இந்த நாடு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளது. வடக்கில் வாழும் மக்களை அடக்குவதற்காகவும், தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களைக் கொல்வதற்காகவும், இவர்களது அடிப்படை உரிமைகளை மீறுவதற்காகவுமே இந்திய அமைதி காக்கும் படையினர் இங்கு கொண்டுவரப்பட்டனர். யூலையில் மேற்கொள்ளப்பட்ட சமாதான உடன்பாட்டின் பிரகாரம் சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கில் குவிக்கப்பட்ட இந்திய அமைதி காக்கும் படையினரே தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட பாலியல் வன்புணர்வு மற்றும் ஏனைய மீறல்களுக்குப் பொறுப்பாளிகளாவர் என அனைத்துலக மன்னிப்புச் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என சுட்டிக்காட்டியிருந்தார்.

மகிந்த தனது உரையின் போது, வடக்கு மற்றும் கிழக்கில் அப்பாவிப் பெண்கள் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்படுவதற்காகவே இந்திய அமைதிப் படையினர் சிறிலங்காவிற்குக் கொண்டு வரப்பட்டதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார்.

இவரது இந்தக் கூற்றை மேலும் வலுப்படுத்துவதற்காக, ‘இந்தியப் படையினர் அமைதி காக்கும் படையினர்கள் அல்ல. அவர்கள் பாலியல் படையினர்’ என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

மகிந்த ராஜபக்ச: ஆம், இந்திய அமைதி காக்கும் படையினர் இந்தியப் பாலியல் படையாக மாறியுள்ளனர். அவர்கள் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்குகின்றனர். எதிர்காலத்தில் வடக்கில் இந்தியர்களை உருவாக்குவதற்காகவே பெண்களைப் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்குகின்றனர். வடக்கில் மக்கள் கொல்லப்படுகின்றனர். பெண்கள் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். ஆனால் தெற்கில் என்ன நடக்கிறது எனப் பாருங்கள். வடக்கில் இடம்பெறும் இவ்வாறான மீறல்களுக்கு எதிராக தென்னிலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுபடும் போது அவர்கள் ரயர்கள் இடப்பட்டு எரிக்கப்படுகிறார்கள். ” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்

GL-Peiris

பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையானது பரந்த பொருளாதார கூட்டு உடன்படிக்கைக்கு ஒத்ததாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட்டு 15 ஆண்டுகளின் பின்னர் சிறிலங்காவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையானது வரையப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான சிறிலங்காவின் பிரதான ஏற்றுமதிப் பொருள் பாக்கு ஆகும்

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்– (08.02.2016- Mawbima)

இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை:

1998ல் இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக உடன்படிக்கையானது சிறிலங்காவிற்கு பல்வேறு திறந்த முதலீட்டு வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கும் என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் 2008ல் சிறிலங்காவின் வர்த்தக அமைச்சராக இருக்கும் போது அறிவித்திருந்தார். இதே பீரிஸ் இந்தியாவுடனான வர்த்தக உடன்படிக்கையின் கீழ் பாக்கு மட்டுமே சிறிலங்காவிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பிரதான பொருள் எனத் தற்போது குறிப்பிடுகிறார்.

பீரிஸ் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஏனையவர்கள் இந்தியாவுடனான பொருளாதார தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டையும் இரட்டைக் கருத்துக்களையும் கொண்டுள்ளனர் என்பது தெளிவாகும். தமது ஆட்சிக்காலத்தில் இந்த உடன்படிக்கையை ஆதரித்து தமது கைகளை உயர்த்திய இவர்கள் தற்போது இதனை எதிர்த்து நிற்கின்றனர்.

‘முதலில் தேசம் அதன் பிறகே வேலைத்தளம்’ என்கின்ற இரண்டு எண்ணக்கருக்களை 1987ல் தற்போது கூட்டு எதிர்க்கட்சியினர் கொண்டிருந்தனர். இந்த எண்ணக்கருக்களைப் பயன்படுத்தி இவர்கள் 1987ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை ஆட்சியிலிருந்து நீக்கினர். தற்போது இவர்கள் பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையை எதிர்ப்பதன் மூலம் ஜே.ஆரின் மருமகனான ரணிலை வீட்டிற்கு அனுப்பத் திட்டமிடுகிறார்கள். இதனை இவர்களால் செய்ய முடியுமா? இதனைத் தற்போது எதிர்வுகூற முடியாது. இதற்கு இன்னமும் கால அவகாசம் தேவைப்படுகிறது.

1989ல் மகிந்தவால் எதிர்த்து விமர்சிக்கப்பட்ட இந்திய அமைதி காக்கும் படையை சேகர் குப்தாவுடனான நேர்காணலின் போது மகிந்த ராஜபக்ச எவ்வாறு புகழ்ந்துரைத்தார் என்பதும், இவர் அதிபராகப் பதவி வகித்த போது உயிர்நீத்த இந்தியப் படையினருக்காக யாழ்ப்பாணத்தில் நினைவாலயம் ஒன்றை அமைத்து மரியாதை செலுத்தினார் என்பதையும், விமல் வீரவன்ச போன்ற நாட்டுப்பற்றாளர்கள் எனத் தம்மைத் தாமே கூறிக்கொள்பவர்கள் இந்த நினைவாலயத்தை வணங்குகிறார்கள் போன்ற சம்பவங்கள் சிறிலங்கா அரசியல்வாதிகள் இரட்டை முகத்தை வெளிச்சமிட்டுக் காண்பிக்கின்றது.

ஆகவே, தற்போது பொருளாதார, தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையை விமர்சிப்பவர்கள் எதிர்காலத்தில் இதனைப் புகழ்ந்து பாராட்டி நினைவாலயங்களை அமைக்கலாம். ஏனெனில் சில ‘நாட்டுப்பற்றாளர்கள்’ இரட்டை நாக்குகளுடன் இரட்டை நிலைப்பாடுகளுடன் செயற்படுகின்றனர்.

தனது தொலை நோக்குச் சிந்தனையின் மூலம் 1987ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். இவர் வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தை ஒரு புற்றுநோய் போன்றே நோக்கினார். இந்த யுத்தம் இந்தியாவாலேயே உருவாக்கப்பட்டது என்பதை இவர் அறிவார். வடமராட்சியில் இடம்பெற்ற யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வருவதற்கு இந்தியா எதிர்த்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானம் மூலம் உணவுப் பொதிகளை இந்தியா வீசிய போது, உள்நாட்டு யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவருவதற்கு இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்பதை ஜே.ஆர்.ஜெயவர்த்தனா புரிந்து கொண்டார்.

இதனால் இந்தியாவை தனது சூழ்ச்சி வலைக்குள் வீழ்த்துவதென ஜே.ஆர். தீர்மானித்தார். இந்தியாவால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ்ப் புலிகளை இந்தியாவே அழிக்க வேண்டும் என்பதற்காகவே இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் ஜே.ஆர் கைச்சாத்திட்டார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜே.வி.பி போன்றன ஜே.ஆரின் நிலைப்பாடு தொடர்பாக விழித்துக் கொண்டனர். இந்திய அமைதி காக்கும் படை யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவந்தால், இந்த நாட்டை ஜே.ஆர் தொடர்ந்தும் ஆளக்கூடிய நிலை உருவாகும் என இவர்கள் அச்சம் கொண்டனர். இது இடம்பெற்றால், தாம் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு உருவாகாது என்பதையும் இவ்விரு கட்சிகளும் புரிந்துகொண்டனர். இதனால், மாகாண சபைகள் இந்த நாட்டைக் கூறுபோடும் என்கின்ற கருத்தை உருவாக்கினர்.

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அச்சுறுத்தியதுடன் இவர்கள் தேசத்துரோகிகள் எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜே.வி.பி முத்திரை குத்தின. இதன்மூலம் நாடு தழுவிய ரீதியில் மக்கள் மத்தியில் மனரீதியான அச்சத்தை உருவாக்கினர். அத்துடன் இவர்கள் மாகாண சபைத் தேர்தல்களைப் புறக்கணித்தனர். இத்தேர்தல் 1988ல் இடம்பெற்றது.

1993ல், சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனது நிலையிலிருந்து மாறி மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டது. இதேபோன்று மாகாண சபை முறைமையை உருவாக்கிய 1987 இந்திய இலங்கை உடன்படிக்கையை எதிர்த்த ஜே.வி.பி தனது நிலையிலிருந்து இறங்கி 1999ல் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டது.

2005 மகிந்த சிந்தனை விளக்கவுரை:

1987ல் இந்தியாவின் அனுசரணையையும், 2005ல் நோர்வேயின் அனுசரணையையும் எதிர்த்து நின்ற மகிந்த மற்றும் விமல் ஆகியோர் 2005ல் இந்தியாவின் தலையீட்டுடன் கூடிய தேர்தல் விளக்கவுரையை உருவாக்கியது. இதேவே 2005 மகிந்த சிந்தனை ஆகும். இதில் இந்தியாவின் நடுநிலைமையுடன் நாட்டில் சமாதானமும் அபிவிருத்தியும் உருவாக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், 2010 அதிபர் தேர்தலில், மகிந்த சிந்தனையின் பக்கம் 05ல் ‘புவிமயமாக்கலானது சிறிலங்காவிற்குப் பல்வேறு வாய்ப்புக்களையும் சவால்களையும் வழங்கியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஏனைய பிராந்திய நாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இதன் மூலம் எமது ஏற்றுமதித் துறை, முதலீட்டு மற்றும் தொழினுட்பத் துறைகள் நலன் பெறும்’ எனக் குறிப்பிடப்பட்டது.

எந்தவொரு எதிர்காலத் திட்டங்களும் இன்றி, 2010ல் உருவாக்கப்பட்ட மகிந்த சிந்தனையில் இந்தியாவுடன் வர்த்தக மற்றும் ஏனைய உடன்படிக்கைகளை மேற்கொள்வதென பரிந்துரைக்கப்பட்டது. 2008ல் முதன்முதலாக இந்தியாவுடன் பரந்த பொருளாதார கூட்டு உடன்படிக்கையை மேற்கொண்டது மகிந்த அரசாங்கமே ஆகும். மகிந்த அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்தியாவுடன் உடன்படிக்கை தொடர்பாகப் பேச்சுக்களை நடத்தியவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆவார். இந்தியப் பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்த கருத்தரங்கு ஒன்றில் பீரிசால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஜூலை 13, 2008 அன்று ‘த ஐலண்ட்’ ஊடகம் பதிவேற்றியிருந்தது.

‘சிறிலங்கா ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், இந்தியப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் பரந்த பொருளாதார கூட்டு உடன்படிக்கை தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். சிறிலங்காவிற்கான இந்திய உயர் ஆணையாளர் அலோக் பிரசாத், இந்திய வர்த்தகச் செயலர் ஜி.கே.பிள்ளை, இந்திய வர்த்தகத் திணைக்களத்தின் கூட்டுச் செயலர் றஜீர் கேர், கொழும்பிலுள்ள இந்திய உயர் ஆணையகத்தின் பொருளாதார வர்த்தக ஆலோசகர் சந்தோஸ் ஜா, இந்திய வர்த்தகத் திணைக்கள இயக்குனர் றாஜீர் குமார் ஆகியோர் இந்திய அரச பிரதிநிதிகளாகக் கலந்துகொண்டனர்.

சிறிலங்காப் பிரதிநிதிகளாக, பீரிஸ் மற்றும் சிறிலங்கா ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சுச் செயலர் எஸ்.றணுகே, வர்த்தக பதில் இயக்குனர் கோமி சேனதிர ஆகியோர் கலந்து கொண்டனர். தாஜ் சமுத்ரா விடுதியில் இடம்பெற்ற பரந்த பொருளாதார கூட்டு உடன்படிக்கைக்கான ஆரம்ப கட்டக் கலந்துரையாடலில் இந்திய வர்த்தகச் செயலர் ஜி.கே.பிள்ளை கலந்து கொண்டார். சிறிலங்காவானது பூகோள பொருளாதாரத்துடன் தனது பொருளாதாரத்தையும் ஒன்றிணைப்பதற்கு பிராந்திய மற்றும் இருதரப்பு சுதந்திர வர்த்தக நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக பீரிஸ் தெரிவித்தார்.

சிறிலங்கா தனது அயல் நாடுகளுடன் குறிப்பாக சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளுடன் வலுவான வர்த்தக மற்றும் பொருளாதார உறவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். இதன் மூலம் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த சந்தை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் குறைந்த செலவில் பொருட்கள் மற்றும் சேவைகளையும் அடைய முடியும். அத்துடன் பிராந்தியத்தில் நல்லுறவையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்த முடியும். 1998ல் உருவாக்கப்பட்ட இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையானது எமது சொந்த முயற்சியில் பிராந்தியத்தில் மிகப்பாரிய பொருளாதார நாடாக வளம்பெற உதவும். இந்தியாவின் முதலீடானது சிறிலங்காவின் சுகாதாரம், விடுதிகள், வான் போக்குவரத்து, வங்கியியல் மற்றும் வழங்கல் போன்ற பல்வேறு துறைகளை விரிவாக்க உதவும். 2002லிருந்து இந்திய சுற்றுலாப்பயணிகளே சிறிலங்காவிற்கு அதிகம் வருகை தருகின்றனர் எனவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் மூலம் விசாகபட்டிணம் திட்டத்தில் 650 மில்லியன் டொலர் முதலீட்டில் இந்தியாவின் பிறாண்டிக்ஸ் நிறுவனத்தால் வர்த்தகச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது மிகவும் முதன்மையானதாகும்.

சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மிகவும் வெற்றிகரமாக அமுல்படுத்தப்படுவதால் சிறிலங்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் ஆகஸ்ட் 2004ல் பொருட்களிலிருந்து சேவைகள் வரை தமது பரிமாற்றல் தொடர்பாடல்களை விரிவுபடுத்தியுள்ளன எனவும் இதுவரை உத்தியோகபூர்வமாக 13 தடவைகள் பேச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பீரிஸ் தெரிவித்தார். பரந்த பொருளாதார கூட்டு உடன்படிக்கையின் கீழ் முதலீடுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் இது சிறிலங்காவிற்கு நலன் பயக்கும் எனவும் அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார்.

தேசிய சேமிப்பு மற்றும் முதலீடு ஆகியவற்றுக்கு இடையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள நான்கு சதவீத இடைவெளியை ஈடுசெய்வதற்கும் வருடாந்த பொருளாதார வளர்ச்சி வீதத்தை 8-9 சதவீதமாக அதிகரிப்பதற்கும் நீண்ட கால அடிப்படையில் நேரடி வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்க வேண்டிய தேவை சிறிலங்காவிற்கு உள்ளதாகவும் பீரிஸ் சுட்டிக்காட்டினார். தாராளமயப்படுத்தப்பட்ட முதலீடானது இந்தியாவிலிருந்து சிறிலங்காவிற்கு அதிக முதலீடுகள் உள்ளீர்க்கப்படுவதற்கும் தொழினுட்பம், மனித வலு மற்றும் வர்த்தக விரிவாக்கத்தை மேற்கொள்ளவும் வாய்ப்பாக அமையும் எனவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்’ என ஐலண்ட் செய்தி வெளியிட்டிருந்தது.

மகிந்தவின் வர்த்தக அமைச்சராக ஜி.எல் பதவி வகித்த போது முற்றுமுழுதாக பரந்த பொருளாதார கூட்டு உடன்படிக்கை ஆதரவாகவே பரப்புரை செய்திருந்தார். இதே ஜி.எல்.பீரிஸ் சிறிலங்காவிற்கு அதிக நலனை வழங்கக்கூடிய பொருளாதார தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையை தற்போது விமர்சிக்கிறார். இது ஜி.எல் பீரிசின் இரட்டை நிலைப்பாடா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *