மேலும்

அமெரிக்க – சிறிலங்கா கூட்டுக் கலந்துரையாடல் – இருதரப்பு உறவைப் பலப்படுத்தும் முக்கிய வாய்ப்பு

mangala-john kerry (1)அமெரிக்க -சிறிலங்கா கூட்டுக் கலந்துரையாடலானது சிறிலங்கா புதிய திசை நோக்கிப் பயணிப்பதற்கும் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

இவ்வாறு Daily Signal ஊடகத்தில் Lisa Curtis * எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ‘அமெரிக்க-சிறிலங்கா முதலாவது கூட்டுக்கலந்துரையாடலில்’ கலந்து கொள்வதற்காக வோசிங்டனுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

கடந்த 40 ஆண்டுகளில் முதன் முதலாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஒருவர் சிறிலங்காவிற்கான தனது முதலாவது பயணத்தை கடந்த மே மாதம் மேற்கொண்டிருந்தார்.  அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி சிறிலங்காவுனக்கு மேற்கொண்டிருந்த இந்த இவரது வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணத்தின் போதே ‘அமெரிக்க-சிறிலங்கா கூட்டுக் கலந்துரையாடல்’ தொடர்பாக அறிவிக்கப்பட்டது.

மகிந்த ராஜபக்ச கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவரது அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேன தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்தே அமெரிக்காவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான உறவு மீண்டும் நெருக்கமடைந்தது. இதன் பயனாகவே ஜோன் கெரியின் சிறிலங்காவிற்கான பயணமும் அமைந்தது.

அமெரிக்காவின் ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் கடந்த நவம்பரிலும், அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான கீழ்நிலைச் செயலர் தோமஸ் சானோன் கடந்த டிசம்பர் நடுப்பகுதியிலும் மற்றும் பல்வேறு அமெரிக்க அதிகாரிகளும் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணங்களைத் தொடர்ந்தே சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சமரவீரவும் வோசிங்டனுக்கான தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

உள்நாட்டில் இன நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான வாக்குறுதியுடனேயே கடந்த ஆண்டு சிறிசேன சிறிலங்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், ராஜபக்ச அதிகாரத்துவ ஆட்சியை மேற்கொண்டிருந்தார். சிறிசேனவின் தேர்தல் வெற்றியானது சிறிலங்காவின் பல ஆண்டுகளாக நடைமுறையிலிருந்த அதிகாரத்துவ ஆட்சி மாற்றமுறுவதற்கு வழிகோலியது.

மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் ஊடக சுதந்திரம், நீதிச் சேவைகளில் தலையீடு மற்றும் பரவலான பாரபட்சங்கள் போன்றன இடம்பெற்றன. சிறிசேன ஆட்சிப் பொறுப்பெடுத்து ஐந்து மாதங்களின் பின்னர், சிறிலங்கா நாடாளுமன்றமானது நிறைவேற்று அதிபர் முறைமையை இரண்டு தடவைகளுக்கு மட்டுப்படுத்தக் கூடிய மற்றும் நாடாளுமன்றைக் கலைப்பதற்கான அதிபரின் அதிகாரத்தை மட்டுப்படுத்துவதற்கும் நீதிச் சேவை மற்றும் காவற்துறை போன்றவற்றுக்கான சுயாதீன ஆணைக்கழுக்களை உருவாக்கி அரசியல் சபையை மீளச் செயற்படுத்துவதற்கான திருத்தங்கள் 19வது வரைபில் மேற்கொள்ளப்பட்டது. இது சிறிலங்காவின் சிறிலங்காவின் ஜனநாயகத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

கடந்த ஆகஸ்ட் மாதம் சிறிலங்காவின் பொதுத்தேர்தல் இடம்பெற்றது. இத்தேர்தலின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்று பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டார். இதன் மூலம் சிறிலங்காவில் மறுமலர்ச்சி மற்றும் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான நம்பகத்தன்மை உருவாக்கப்பட்டது.

இதற்கப்பால், போருக்குப் பின்னான மீளிணக்கப்பாடு மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான மீறல்கள் மீதான விசாரணையை வலியுறுத்தும் விதமாக கடந்த செப்ரெம்பரில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானத்தை மைத்திரி-ரணில் கூட்டு அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

இத்தீர்மானத்திற்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கியதானது இந்நாட்டின் மனித உரிமைகள் தொடர்பான திருப்பு முனையாக அமைந்துள்ளதாகவும் இத்தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றுவதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் இவ்வளவு ஆண்டுகளாகக் காத்திருக்கும் உண்மை மற்றும் நீதி போன்றன கிடைக்க வழிவகுக்கப்படும் எனவும் அனைத்துலக மன்னிப்புச் சபை தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

நல்லாட்சி, அபிவிருத்தி ஒத்துழைப்பு, மக்களுடனான உறவுகள் போன்றவற்றை முதன்மைப்படுத்தும் இவ்வார சிறிலங்கா மற்றும் அமெரிக்க கூட்டுக் கலந்துரையாடலானது இவ்விரு நாடுகளினதும் உறவுகளை வலுப்படுத்தவும், சிறிலங்காவின் போருக்குப் பின்னான நல்லிணக்க முயற்சியில் ஆழமான புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

கடந்த செப்ரெம்பரில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவாறு சிறிலங்காவின் மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலில் வெளிநாட்டுப் பங்களிப்பும் உள்வாங்கப்படும் என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட வேண்டிய நிலை காணப்படுகிறது.

சிறிலங்கா தனது போர்க்கால மீறல்கள் தொடர்பாகப் பொறுப்பளிப்பதற்கு வெளிநாட்டு நீதிபதிகளும் உள்வாங்கப்பட வேண்டும் என ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் கெய்த் ஹாப்பர் கடந்த மாதம் வலியுறுத்திய போதிலும், போர் மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு வெளிநாட்டுப் பங்களிப்புத் தேவையில்லை என அண்மையில் சிறிசேன அறிவித்திருந்தார்.

மீறல்கள் தொடர்பான விசாரணை மற்றும் ஆவணப்படுத்தல்களில் சிறிலங்காவிற்கு பல்வேறு தொழினுட்ப உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது.

பொறுப்புக்கூறல் மற்றும் இனமீளிணக்கப்பாட்டு செயற்பாடுகள் முன்னகர்த்தப்படும் போது, அமெரிக்காவும், இராணுவப் பயிற்சித் திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மீளவும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நாடுகளில் சிறிலங்காவையும் உள்வாங்குவதென அமெரிக்காவின் புத்தாயிர சவால்களுக்கான அமைப்பின் இயக்குனர் சபையால் கடந்த டிசம்பரில் தீர்மானிக்கப்பட்டுள்ளதானது வரவேற்கத்தக்க ஒன்றாகும். சிறிலங்காவின் வர்த்தக அபிவிருத்திகளை மேம்படுத்தவும், போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குமான நிகழ்ச்சித் திட்டங்களை அமெரிக்காவின் புத்தாயிர சவால்களுக்கான அமைப்பு மேற்கொள்வது பயனுள்ளதாகும்.

கடந்த ஒரு ஆண்டிற்குள் சிறிலங்கா தனது நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்கும், போருக்குப் பின்னான மீளிணக்கப்பாட்டை மேம்படுத்துவதற்குமான பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க-சிறிலங்கா கூட்டுக் கலந்துரையாடலானது சிறிலங்கா புதிய திசை நோக்கிப் பயணிப்பதற்கும் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

Lisa Curtis*Lisa Curtis analyzes America’s economic, security and political relationships with India, Pakistan, Afghanistan and other nations of South Asia as a senior research fellow at The Heritage Foundation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *