மேலும்

சமஸ்டியை வழங்குமாறு சிறிலங்காவிடம் கோர மறுத்தார் ராஜீவ் காந்தி – வரதராஜப்பெருமாள்

A.Varatharajaperumalசமஸ்டி அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்றோ, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்ட வரைவதிலோ அல்லது அதனை நடைமுறைப்படுத்துமாறோ சிறிலங்கா அரசாங்கத்தை, இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார் வட-கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர்,

“1986ஆம் ஆண்டு நாம் ராஜீவ்காந்தியை சந்தித்த போது, சமஸ்டி அரசியலமைப்பை உருவாக்கும்படி சிறிலங்காவிடம் இந்தியா கேட்காது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அப்போது பஞ்சாபில் தனிநாடு கோரும் போராளிகளுடன் ராஜீவ்காந்தி தீவிரமாகப் போரிட்டுக் கொண்டிருந்தார். அவர் அவ்வாறு கூறியதற்கு பெரும்பாலும் அதுவே காரணமாக இருக்கலாம்.

1987ஆம் ஆண்டு சிறிலங்காவுடன் உடன்பாடு ஒன்றுக்குள் நுழைந்த போது, இந்தியா தனது கடப்பாடுகளை நிறைவேற்றத் தவறிவிட்டது.

13ஆவது திருத்தச்சட்டத்தை வரைவதிலோ, அது நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிப்பதிலோ எந்தப் பங்கையும் வகிக்கவில்லை.

இந்த செயலற்றதன்மையைப் பயன்படுத்திக் கொண்டு சிறிலங்கா அரசாங்கங்கள், காணி, காவல்துறை அதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளாமல் 13ஆவது திருத்தச்சட்டத்தை மீறின.

2006ஆம்  ஆண்டு வடக்கும் கிழக்ககும் பிரிக்கப்பட்ட போது எங்கிருந்தும் எதிர்ப்பு வரவில்லை.

1989ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ராஜீவ்காந்தியைத் தோற்கடிப்பதற்காகவே, திமுக தலைவர் மு.கருணாநிதியும், பின்னர் பிரதமராகப் பதவிக்கு வந்த வி.பி.சிங்கும் இந்திய-சிறிலங்கா உடன்பாட்டை எதிர்த்தனர்.

1991ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், சிறிலங்கா விடயத்தில் இந்தியாவின் கொள்கை மாறியது.  தமிழர்களின் போராட்டம் தொடர்பாக இந்தியா இப்போது வரைக்கும் உதட்டளவில் தான் பேசி வருகிறது.

சிறிலங்காவுடனான உறவுகளை முன்னேற்றுவதில் தான்  புதுடெல்லி கவனம் செலுத்துகிறது.

மேற்குலகமும் தமது நிகழ்ச்சி நிரலை வைத்திருக்கிறது. அந்த நிகழ்ச்சி நிரல் பூர்த்தியானதும், மனித உரிமைகள் விவகாரத்தை கைவிட்டு விடுவார்கள்.

இந்தச் சூழலில் தமிழர்களும் சிங்களவர்களும் நேரடியாகப் பேசி தீர்வு ஒன்றுக்கு வருவதே சிறந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதிக்கத்தில் உள்ள வடக்கு மாகாணசபை இப்போது 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரங்களை உறுதிப்படுத்திக் கொள்வதில் கவனம் செலுதத் வேண்டும்.

தமிழர்களின்  நீண்டகால, நியாயமான கோரிக்கையான சமஸ்டித் தீர்வை, அவர்கள் எதிர்பார்ப்பது போன்றே ஒரே முயற்சியில் அடைய முடியாது.

அவர்களின் வரலாறு அந்த இலக்கை அடைவதற்கான பெரும் பாய்ச்சல் ஒன்று சாத்தியமில்லை என்பதை காட்டுகிறது. ஆனால், ஆனால் தொடர்ச்சியான சிறிய முயற்சிகளின் மூலம், அந்த இலக்கை அடைய முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கருத்து “சமஸ்டியை வழங்குமாறு சிறிலங்காவிடம் கோர மறுத்தார் ராஜீவ் காந்தி – வரதராஜப்பெருமாள்”

  1. மகேந்திரன் says:

    தோழர் வரதர் அவர்களே தங்களின் மனச்சாட்சியை திறந்துதான் பேசுகின்றீர்களா அல்லது வஞ்சகமான ஒரு நகர்வுக்கான அடித்தழத்தை இட்டுக்கொடுக்கின்றீர்களா மீண்டும் ஒரு தேச துரோக்த்தை புரிய வேண்டாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *