மேலும்

தைப் புத்தாண்டில் விடியலுக்கான பூபாளம் கேட்கட்டும்!

Pongal-01தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை.  புத்தாண்டில் உலகத் தமிழர்களின் வாழ்வில் தென்றல் வீசட்டும்.இன்பம் சேரட்டும். மகிழ்ச்சி பொங்கட்டும்.

தைப் புத்தாண்டில் தமிழ் மக்கள் வாழ்வில் அல்லல்கள் நீங்கி துன்பங்கள் தொலைந்து, இன்பங்கள் குவிந்து, விடியலுக்கானபூபாளம் கேட்கட்டும்.

அமைதி நிறைந்து புது வாழ்வு பூக்கட்டும். அந்த நம்பிக்கையுடன் தமிழர் தாயக மண்ணின் பொங்கற்பால் பொங்கட்டும்.

விரிந்து கிடக்கும் பூமிப்பந்தில், தமிழர் நாம் பரந்து கிடந்தாலும் தாய் மொழியாம் தமிழைக் காத்து,வளர்த்தெடுத்து, தமிழர் கலை பண்பாட்டு விழுமியங்களோடு வாழ்ந்து, தமிழனாய் தரணியெங்கும் தலைநிமிர்ந்து வாழ இந்தப் பொங்கல் திருநாளை வரவேற்போம்

இத் தைத் திருநாளில் புதினப்பலகைக் குழுமமும் தாயக, தமிழக மற்றும் உலகத் தமிழர்களை நோக்கித் தனது உரிமைக் கரங்களை நீட்டுகிறது.

எமது தாயக விடுதலைநோக்கிய  இலட்சியப் பாதையில், நெருப்பாறுகள் கடந்து,  அளப்பரிய தியாகங்கள், வெற்றிகள், சாதனைகள் பெரும் சரித்திரங்களைப் படைத்தும்,  சமகாலத்தில் தோல்விகள்,  இழப்புக்கள், துன்பங்கள், துரோகங்கள் போன்றவற்றைக்  கடந்தும்,  எமது தேசம் தனது நிரந்தரமான விடிவுக்காய் அசையா உறுதியுடன் அறவழியில் போராடுகிறது.

ஆயினும், இன்று எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான பயணம்,  ஒரு சூட்சுமம் நிறைந்த, நிச்சயமற்றதொன்றாய் பரிணமித்து நிற்பது போன்ற மாயைத் தோற்றத்தை உலகிற்கு வெளிக்காட்டி நிற்கிறது.

தமிழர் நிலப்பரப்பின்  மீதான சிறிலங்காவின் அதிகாரமும், சிங்கள அரசின் தமிழ் இன  அழிப்பின் மறைமுக முனைப்பும்,  எமைச் சூழ்ந்திருக்கும் அனைத்துலக சக்திகளின் நலன்சார் கொள்கைகளும் , சிங்களத் தேசியவாதிகளின்  தமிழர் விரோதப் போக்கும், பெருத்த ஏமாற்றத்தையும் வேதனையையும் தந்து நிற்கின்றது.

அண்டைநாடான இந்திய அரசும், எமக்கு நியாயமான தீர்விற்கு வழி வகுக்குமென நம்பிய மேற்குலகமும் கொடிய போரின் பின்னரான, தமிழ் இனத்தின் அவலத்தில் எள்ளளவேனும் அக்கறையில்லாதிருப்பது தாங்கொணாத் துன்பத்தையும், ரணவலியையும் ஏற்படுத்தி நிற்கிறது.

முகில் கூட்டம் சூரியனை மறைப்பதால் சூரியன் அழிந்து போய்விட்டதாக அர்த்தமாகாது.

இதைப்போல் நமது தாயகத்தை அனைத்துலக அரசுகளினது நலன்சார் மேகங்கள் மறைத்து நிற்கின்றன.

இந்த சுயநல மேகங்களை கலைத்து, எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்க,  ஒன்றுபட்ட குரலாய்  ஒருமித்த தளத்தில் ஒருங்கிணைந்து, நிரந்தர விடிவுக்கான இலக்கு நோக்கி, எம் அரசியல் சக்திகள் செல்நெறி தவறாது செயற்படுவர்  என்பதே புதினப்பலகையின்  எதிர்பார்ப்பு.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளின்  உயர்வான நிலையை உணர்ந்து, தன் கையே தனக்குதவி என்ற யதார்த்தத்தை உணர்ந்தவர்களாய், உலகத் தமிழரெலாம் ஒன்றுபட வேண்டியது இத்தருணத்தில் அவசியம்.

தாய் மொழியாம் தமிழை காப்பதற்கும், தமிழர்களின் தாயகத்தை மீட்பதற்கும் உலகத் தமிழர் ஒவ்வொருவரும் காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து உணர்வோடும் உறுதியோடும் பணி செய்து, பாரினில் தமிழரெலாம் தலைநிமிர்ந்து வாழ வழி சமைப்போம்.

“பொங்கல் இன்றல்ல

குருதிவழியும்  விழிகளில்

ஆனந்தக் கண்ணீர்  பொங்கும்

ஒருநாள்.. ”

எங்கள் சமுதாயம்

ஏழாயிரமாண்டு திங்கள்போல் வாழ்ந்து

செங்கதிர்போல் ஒளிவீசும் மங்காதபோர்க்களத்தும்

மாளாத வீரர்படை கங்குல் அகமென்றும் காலைப் புறமென்றும்

பொங்கி விளையாடிப் புகழேட்டிற் குடியேறித்

தங்கி நிலைத்துத் தழைத்திருக்கும்

காட்சிதனைக் கண்காணவந்தகலைவடிவே

நித்திலமே!

பொங்கற்பால் பொங்கிப்

பூவுதிர்ப்பாய் தைப்பாவாய்!””

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *