மேலும்

அமெரிக்க தீர்மான வரைவு வெளியானது – கலப்பு விசாரணைக்கு அழைப்பு விடுக்கிறது

eagle-flag-usaஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தின் முதல் வரைவு ஆவணம் வெளியாகியுள்ளது.

இதில், போரின் இறுதி ஆண்டுகளில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக, அனைத்துலக நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டவாளர்களை உள்ளடக்கிய நீதிப் பொறிமுறையை உருவாக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது.

போரின் போது இழைக்கப்பட்டதாக தனது பணியகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள, மோசமான குற்றங்களை விசாரிக்கும் ஆற்றலை உள்நாட்டு குற்றவியல் நீதிப் பொறிமுறைகள் கொண்டிருக்கவில்லை என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டே, அமெரிக்காவும், ஏனைய நாடுகளும், தீர்மான வரைவில் அனைத்துலக நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டவாளர்களை உள்ளடக்கிய நீதிப்பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று இந்த தீர்மான வரைவில், வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், தயாரிக்கப்பட்டுள்ள, இந்த தீர்மான முன்வரைவு, வரும் திங்கட்கிழமை, ஜெனிவாவில் நடக்கவுள்ள சிறிலங்கா மீதான தீர்மானம் குறித்த முதலாவது, முறைசாரா கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படவுள்ளது.

ஆறு பக்கங்களில், 26 பந்திகளைக் கொண்ட இந்த முன்வரைவுத் தீர்மானத்தின் பிரதி கடந்த வியாழக்கிழமை சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மான வரைவு அமெரிக்கா தலைமையில், பிரித்தானியா, மசிடோனியா, மொன்ரெனிக்ரோ ஆகிய நாடுகளின் இணை அனுசரணையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கையின் பரிந்துரைகளின் முன்னேற்றம், மற்றும் சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்து, அடுத்த ஆண்டு- 2016 செப்ரெம்பரில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது அமர்வில் வாய்மூல அறிக்கையை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

தற்போதைய தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி, முன்னேற்றங்கள் தொடர்பான விரிவான விசாரணைகளை, 2017 மார்ச் மாதம் நடைபெறவுள்ள,  பேரவையின் 34ஆவது அமர்வில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இந்த தீர்மானம் கோருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *