மேலும்

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை விட்டுக் கொடுக்குமா சீனா? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

port-cityசிறிலங்காவில் சீனப் பயணிகளால் முகங்கொடுக்கப்படும் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு இந்த அறிக்கையை சீனா வெளியிட்டதா அல்லது சிறிலங்காத் தீவின் அரசியற் சூழலை மதிப்பீடு செய்வதற்காக இது வெளியிடப்பட்டதா என்பது ஆராயப்பட வேண்டும்.

இவ்வாறு, சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்காவை ராஜபக்ச ஆட்சிசெய்த காலத்தில் அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் போன்றன தமது நாடுகளிலிருந்து சிறிலங்காவுக்குப் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கு பயண எச்சரிக்கைகளை  விடுத்திருந்தன. இது ராஜபக்ச அரசாங்கத்திற்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது. இந்த பயண எச்சரிக்கைகள் தனது நாட்டின் பொருளாதாரம் மீதான மறைமுக அச்சுறுத்தல் என்பதை ராஜபக்ச நிர்வாகம் நன்குணர்ந்தது.

இருப்பினும், சிறிலங்காவுக்கான பயண எச்சரிக்கைகளை  நீக்குவதற்கான முயற்சிகளை ராஜபக்ச அரசாங்கம் முன்னெடுத்தது. ஏனெனில் இந்தப் பிரச்சினையை அப்போதைய எதிர்க்கட்சி முதன்மைப்படுத்தியது. சிறிலங்கா யாத்திரிகர்கள் இந்தியாவுக்குப் பயணம் செய்தபோது அவர்கள் துன்புறுத்தப்பட்டனர். இதனால் ராஜபக்ச அரசாங்கமும் இந்தியாவுக்குப் பயணம் செய்யும் யாத்திரிகள் மீது பயண எச்சரிக்கைகளை  அமுல்படுத்தியது.

ராஜபக்சவின் இந்த நகர்வை இந்தியா வரவேற்கவில்லை. இதனால் சிறிலங்காவிலிருந்து இந்தியா செல்லும் யாத்திரிகர்களுக்கு போதியளவு பாதுகாப்பு வழங்குவதற்கு இந்தியா தயாராக இருந்தது.

இவ்வாறான பயண எச்சரிக்கைகளும் ஆலோசனைகள் மற்றும் தடைகளும் பொதுவான ஒரு பிரச்சினையாக மாறியது. ஓகஸ்ட் மாதம் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கு இரு நாட்களுக்கு முன்னரும் கூட சீனா தனது நாட்டிலிருந்து சிறிலங்கா செல்லும் சுற்றுலாப் பயணிகளும் பயண எச்சரிக்கையை வழங்கியிருந்தது.

‘சிறிலங்காவுக்குப் பயணம் செய்யும் சீனப் பயணிகள் இலங்கைத் தீவில் இடம்பெறும் பல்வேறு விபத்துக்கள் தொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அண்மைய ஆண்டுகளில், சிறிலங்காவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் சிறிலங்கா செல்லும் சீனச் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு அசௌகரியங்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு ஆளாகுகின்றனர்.

இவ்வாண்டின் முதல் ஏழு மாதங்களில் சிறிலங்காவுக்குப் பயணித்த சீனர்களில் 46 சுற்றுலாப் பயணிகள் விபத்துகளுக்கு உள்ளாகியுள்ளதாக சீனத் தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றுள் மூன்று விபத்துக்கள் நீரில் மூழ்கியதுடன் தொடர்புபட்டுள்ளன. இதில் இருவர் மரணித்துள்ளனர். 30 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்கள், ஒரு பாலியல் வன்புணர்வு, ஒரு பாம்புக் கடி விபத்து மற்றும் இரண்டு சுற்றுலாப்பயணிகள் தொடருந்திலிருந்து தவறிவிழுந்தமை, சிறிலங்காவின் குடிவரவுத் திணைக்களத்தால் மூன்று சீனர்கள் தடுத்துவைக்கப்பட்டமை போன்ற பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கும் மேலாக, சில சீன சுற்றுலாப் பயணிகள் நகைக் கொள்ளையில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டனர். இவர்கள் மீண்டும் தமது நாட்டிற்குச் செல்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. கடந்த மார்ச்சில், சீனப் பயணிகளில் இருவர் கொள்ளையில் ஈடுபட்டதாக பதிவுசெய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறிலங்காவுக்குச் செல்லும் சீனச் சுற்றுலாப்பயணிகள் அந்நாட்டின் உள்ளுர் சுற்றுலாத்துறைச் சட்டங்களை அவதானித்து, உள்நாட்டு நடைமுறைகள் மற்றும் வழக்காறுகளைப் பின்பற்றி, உள்நாட்டு உணவு, தங்குமிடம், போக்குவரத்து, இடங்களைப் பார்வையிடுதல், பொருட்களை வாங்குதல் போன்றவற்றிற்குச் செல்லும் போது தமக்கான பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்த வேண்டும்’ என சீன அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட போக்குவரத்து எச்சரிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

சிறிலங்காவில் தேர்தல் இடம்பெறவிருந்த வேளையில் சீனாவின் இந்த நகர்வானது அரசாங்கத்துக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. ஏனெனில் அக்காலப்பகுதியில் சிறிலங்காவானது சீனப் பயணிகளைப் பொறுத்தளவில் ஒரு சொர்க்கபூமியாகத் தென்பட்டது. சீனாவின் இந்த அறிவிப்பானது சிறிலங்காவிற்கான ஒரு எச்சரிக்கையாக நோக்கப்பட்டது.

ஆனால் சிறிலங்காவில் சீனப் பயணிகளால் முகங்கொடுக்கப்படும் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு இந்த அறிக்கையை சீனா வெளியிட்டதா அல்லது சிறிலங்காத் தீவின் அரசியற் சூழலை மதிப்பீடு செய்வதற்காக இது வெளியிடப்பட்டதா என்பது ஆராயப்பட வேண்டும்.

மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்குத் திரும்பி வருவார் என்கின்ற அதீத நம்பிக்கையை சீனா கொண்டிருந்தது. ராஜபக்சவின் அரசியல் மீள்பிரவேசம் மூலம் தடைப்பட்டிருந்த கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என சீனா கருதியது. சீனாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை இந்தியா எதிர்ப்பதானது சீனா-ராஜபக்ச கூட்டணியானது இன்னமும் உடையவில்லை என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச கடந்த பொதுத் தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்திருந்தார்.

கடந்த மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மகிந்த தோற்கடிக்கப்பட்ட போது, இது இந்தியாவிற்கான வெற்றி எனவும் சீனாவிற்கான தோல்வி எனவும் இந்திய மற்றும் அனைத்துலக ஊடகங்கள் விபரித்தன. எவ்வாறெனினும், தடைப்பட்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை மீளவும் தொடர்வதற்கு ராஜபக்ச ஆட்சிக்கு வரும்வரை சீனா காத்திருந்திருக்கும் எனக் கருதுவது மிகவும் கடினமானதாகும்.

இத்திட்டத்தை மீளச் செயற்படுத்துவதில் அரச மட்டத்தில் இந்தியாவின் எதிர்ப்பைக் குறைப்பதற்காகவும் சிறிலங்கா வாழ் மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்காகவும் சீனா மிகப்பாரிய பரப்புரை நடவடிக்கையை முன்னெடுத்தது.

இப்பின்னணியில், சீனாவின் கொழும்பு துறைமுக நகரத் திட்டமானது சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான பேச்சுக்களில் உள்ளடக்கப்படும் என இந்திய ஊடகம் அறிக்கை வெளியிட்டது. சீனாவின் விருப்பின் பேரில் இத்திட்டத்தை மீளவும் ஆரம்பிக்கப்பட வேண்டிய தேவையுள்ளதாக பிரதமர் விக்கிரமசிங்க, பிரதமர் மோடியிடம் அழுத்தம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தத் திட்டமானது இரத்துச் செய்யப்படுமானால் சிறிலங்காவுக்கு எதிராக சீனாவானது அனைத்துலக நீதிமன்றின் முன்னால் செல்லும் என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சிறிலங்காவும் இந்தியாவும் நன்கறியும். இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்காது இத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்திட்டம் தொடர்பில் கொழும்புடன் மீள்சமரசம் செய்வதற்கு சீனா உடன்பட்டுள்ளதாகவும் குறித்த செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இத்திட்டம் தொடர்பாக பொதுத் தேர்தலுக்கு முன்னர் சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்த கருத்தானது இங்கு ஆராயப்பட வேண்டும். ‘சீனாவின் நிதியுதவியுடனான பாரிய திட்டம் ஒன்று சில மாத காலதாமதத்தின் பின்னர் மீளவும் ஆரம்பிப்பதற்கான ஒரு விட்டுக்கொடுப்பை சிறிலங்கா மேற்கொள்கின்றது’ என பொதுத் தேர்தல் இடம்பெறுவதற்கு ஒரு வாரத்தின் முன்னர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார்.

ஆசியாவிலிருந்து ஐரோப்பா வரை கடல் வழி பட்டுப்பாதைத் திட்டம் ஒன்றை அமுல்படுத்துவதற்கான சீனாவின் மூலோபாய நகர்வானது சிறிலங்காவின் அயல்நாடான இந்தியாவிற்கு எச்சரிக்கை மணியை எழுப்பியுள்ளது. இது தனக்கும் தனது பிராந்தியத்திற்கும் அச்சுறுத்தலாக விளங்குவதாகவும் இந்தியா கருதியது. சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்திற்கும் சிறிலங்காவும் உள்ளடங்குகின்றது. இதற்காகவே சீனா, சிறிலங்காவில் பல ஹெக்ரேயர் நிலப்பரப்பில் கொழும்புத் துறைமுகத்திற்கு அண்மையில் துறைமுக நகரத் திட்டம் ஒன்றை அமைக்கத் தீர்மானித்தது.

அரசாங்கமானது தேர்தலில் வென்றால் சீனாவுடன் இத்திட்டம் தொடர்பில் மீள்சமரசத்தை மேற்கொள்ளும் எனவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார். ‘அதாவது எமது நாட்டிற்குச் சொந்தமான நிலத்தை வேறொரு நாடும் ஆக்கிரமிக்க முடியாது. இதனால் துறைமுக நகரத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான நிலம் தொடர்பான உடன்படிக்கை மாற்றியமைக்கப்படும்’ என ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்திருந்தார்.

சிறிசேன அரசாங்கம் இவ்வாண்டு ஆரம்பத்தில் ஆட்சிக்கு வந்தபோது சிறிலங்காவில் இடம்பெற்ற பாரிய வெளிநாட்டுத் திட்டங்களை இடைநிறுத்தியிருந்தது. இத்திட்டங்கள் சிறிலங்காவின் தேசிய நலன்களுக்கு ஊறுவிளைவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எவ்வித பாரிய திருத்தங்களுமின்றி சீனாவின் நிதியுதவியுடன் சிறிலங்காவின் அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் இரண்டு ஆரம்பிக்கப்பட்டதானது ஏனைய திட்டங்களிலும் தாம் விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு அவற்றை அமுல்படுத்தத் தயாராக உள்ளதற்கான அறிகுறியாகவே நோக்கப்பட வேண்டும்.

துறைமுக நகரத் திட்டமானது சீன தொலைத்தொடர்பாடல் கட்டுமான அமைப்பால் நிதியுதவி வழங்கப்பட்டு உள்நாட்டில் கொழும்பு துறைமுக நகர நிறுவனத்தால் அமுல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் குடியிருப்புக்கள், வர்த்தகத் தொகுதிகள், நீர் விளையாட்டு மையம், கோல்ப் விளையாட்டு மையம், விடுதிகள், கப்பல் தங்குமிடம் போன்ற பல்வேறு வசதிகளுடன் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது.

இத்திட்டம் இடைநிறுத்தப்பட்ட போது, நாளொன்றுக்கு 380,000 டொலர்கள் நிதி இழப்பு ஏற்படும் என சீன நிறுவனம் மதிப்பீடு செய்தது. இத்திட்டத்திற்காக சீன நிறுவனத்திற்கு 108 ஹெக்ரேயர் நிலப்பரப்பு கொடுப்பனவு வடிவில் வழங்கப்பட்டது. இதேபோன்று 20 ஹெக்ரேயர் நிலப்பரப்பானது 99 ஆண்டுகால குத்தகையில் வழங்கப்பட்டது.

திருகோணமலைத் துறைமுகத்தை அமெரிக்காவுக்கு குத்தகையாக வழங்குவதால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு எவ்வித குந்தகமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்தியாவால் இந்திய-இலங்கை உடன்படிக்கையில் கைச்சாத்திடுமாறு சிறிலங்காவின் அப்போதைய அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன மீது அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதேபோன்றே சீனாவின் கொழும்புத் துறைமுக நகரத் திட்டமும் தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என இந்தியா கருதுகிறது.

திருகோணமலைத் துறைமுகத்தை தான் குத்தகைக்கு வாங்குவதால் அது இந்தியாவுடனான உறவில் கசப்புணர்வை ஏற்படுத்தும் என அமெரிக்கா பின்னர் உணர்ந்தது. இதனால் அது இந்திய-இலங்கை உடன்பாட்டிற்கு ஆதரவளிப்பதெனத் தீர்மானித்தது. இதேபோன்று சீனாவும் தனது தவறை உணர்ந்து கொள்ளுமா என்பது இன்னமும் வினவப்படும் ஒரு வினாவாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *