மேலும்

கட்டுநாயக்க திரும்பிய போர்க்குற்றவாளியான பிரிகேடியர் பின்கதவால் தப்பிச் சென்றார்

Brigadier Deshapriya Gunawardenaதுருக்கியில் இருந்து நாடு திரும்பும் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவைக் கைது செய்யக் கோரி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர் பின்கதவால் வெளியேறி தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுத்தமான குடிநீர் கேட்டு போராட்டம் நடத்திய ரதுபஸ்வெல பொதுமக்கள் மீது வெலிவேரியவில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டவர் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன.

இந்தச் சம்பவத்தில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 35 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இதுதொடர்பாக சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழு நடத்திய விசாரணைகளில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டது. எனினும் முன்னைய அரசாங்கத்தினால், துருக்கியில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் பதவி வழங்கப்பட்டதுடன், சட்டநடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பும் அளிக்கப்பட்டது.

அதையடுத்து, துருக்கி சென்றிருந்த அவர், தனது ஒரு ஆண்டு பதவிக்காலம் முடிந்து இன்று நாடு திரும்பினார்.

monk-demo

போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்கு. படம்- லங்காதீப

அவர் நாடு திரும்பும் தகவல் அறிந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி, தெரிப்பக சிறிதம்ம தேரர் உள்ளிட்டோர், கட்டுநாயக்க விமான நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையறிந்து பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன, இரகசியமான விமான நிலையத்தின் பின்புறக்கதவின் ஊடாக வெளியேறி, போராட்டக்காரர்களின் பிடியில் இருந்து தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன, வன்னியில் இறுதிப் போரில், போர்க்குற்றங்களை இழைத்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையிலான 58ஆவது டிவிசனின் ஒரு பிரிகேட்டுக்கு கட்டளைத் தளபதியாக இருந்த போர்க்குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *