மேலும்

சிறிலங்காவின் முன்னேற்றங்கள் இந்தியாவுக்கு முக்கியமானது – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

சிறிலங்காவின் முன்னேற்றங்கள், இந்தியாவுக்கும், தெற்காசியாவுக்கும், எமது கடற் பிராந்தியத்துக்கும் முக்கியமானது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் இன்று மதியம், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய பேச்சுக்களைத் தொடர்ந்து, அவருடன் இணைந்து நடத்திய ஊடகச் சந்திப்பின் போதே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தனது உரையில், “சிறிலங்கா பிரதமரையும் அவருடன் வந்திருக்கும் குழுவினரையும் இந்தியாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சிறிலங்கா தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றமைக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர், பிரதமராக பதவியேற்ற பின்னர் முதல் வெளிநாட்டுப் பயணத்துக்கு இந்தியாவை தெரிவு செய்ததில் பெருமிதம் கொள்கிறேன்.

ரணில் விக்கிரமசிங்க முதல்முறையாக சிறிலங்கா பிரதமராக முழுமையான பதவிக்காலத்தில் இருந்த போது இந்தியாவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே இருந்தது.

இப்போது அவர் மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இங்கு, (இந்தியாவில்) தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே நடைபெறுகிறது.

இந்திய – சிறிலங்கா உறவில் இந்த ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்கது. முதலில் சிறிலங்கா அதிபர் சிறிசேனா பதவியேற்புக்கு பின்னர் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டார்.

பின்னர், நான் சிறிலங்கா சென்றேன். தற்போது, சிறிலங்கா பிரதமர் ரணில் இந்தியாவுக்கு தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்தியா – சிறிலங்கா நட்புறவு மிகவும் வலுவானது.

சிறிலங்காவில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்கள் அந்தநாடு அமைதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய கொள்கைகளுடன் வளமான எதிர்காலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என்பதை உணர்த்துகிறது.

சிறிலங்கா அரசு அனைத்து முயற்சிகளிலும் வெற்றிபெற வாழ்த்துவதோடு, இந்தியாவின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறிலங்கா தலைவர்களின் சீர்தூக்கிய அறிவாலும், அவர்களது உயரிய எண்ணங்களாலும், மக்களின் ஒத்துழைப்பாலும், ஒன்றுபட்ட இலங்கைக்குள், தமிழ் மக்கள் உள்ளிட்ட எல்லா சமூகத்தினரும், சமத்துவம், நீதி, அமைதி, கௌரவத்துடன் வாழ முடியும் என்றும், நல்லிணக்கம், அபிவிருத்தியை அடைய முடியும் என்றும் நம்புகிறேன்.

சிறிலங்காவின் முன்னேற்றங்கள், இந்தியாவுக்கும், தெற்காசியாவுக்கும், எமது கடற் பிராந்தியத்துக்கும் முக்கியமானது

இருநாட்டு நட்புறவு குறித்து எங்களுக்கு இடையேயான பேச்சு ஆக்கபூர்வமானதாக அமைந்தது. பொருளாதார உடன்பாடுகள் மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கை உதயமாகியுள்ளது.

சிறிலங்காவில் கட்டுமானம், எரிசக்தி, போக்குவரத்து துறையில் முதலீடு செய்ய விரும்பும் இந்திய முதலீட்டாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என சிறிலங்கா பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன்.

அதேபோல், சிறிலங்காவின் உட்கட்டுமானம், தொடருந்து, எரிசக்தி, சமூக மேம்பாட்டு திட்டங்கள், விவசாயம், விஞ்ஞான தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி ஆகிய துறைகளில் இந்தியாவின் நட்புறவு தொடரும்.

இருநாட்டு மக்கள் நட்புறவை மதிக்கிறோம். இனி குமார சங்ககாராவை துடுப்பாட்ட மைதானத்தில் காண முடியாது என்பதுகூட எங்களுக்கு வருத்தமளிக்கும் செய்தியே.

பாதுகாப்பு பயிற்சித் துறையில் சிறிலங்கா, இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக திகழ்கிறது.

அந்தவகையில் சிறிலங்கா படையினருக்கு தொடர்ந்து இந்தியா பாதுகாப்பு துறைசார் பயிற்சி வழங்கும். இந்தியா – சிறிலங்கா பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்.

தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியா- சிறிலங்கா கூட்டுறவு தீவிரப்படுத்தப்படும். கடல் எல்லையில் இருநாட்டு பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்.

சிறிலங்கா, இந்திய மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் பேச்சு மூலம் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்பதில் நாங்கள் இருவரும் உடன்படுகிறோம்.

மேலும், மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகவேண்டும் என சிறிலங்கா பிரதமரிடம் வலியுறுத்தினேன்.

ஏனெனில், இது அவர்கள் வாழ்வாதார பிரச்சினை. அதேவேளையில், இந்திய மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு தயாராகும்படி ஊக்குவித்து வருவதாகவும் ரணிலிடம் கூறினேன்” என்ற குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *