மேலும்

குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்கும் கலாசாரம் பொறுப்புக்கூறலைப் பாதிக்கும் – ஐ.நா நிபுணர்

Special Rapporteur Pablo de Greiffசிறிலங்காவில் குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கும் கலாச்சாரமானது, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை கமையாக பாதிக்கும் என ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர், பப்லோ டி கிரெய்ப் எச்சரித்துள்ளார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட உண்மை, நீதி, இழப்பீடு, மீண்டும் நிகழாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் நேற்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமது அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையில் அவர், “சிறிலங்கா அரசு நாட்டின் நிலைமையை சரியாகக் கையாண்டால், அது அந்தப் பிராந்தியத்தில் மட்டுமல்ல, உலக அளவில் எப்படி நீடித்திருக்கக் கூடிய சமாதானத்தை முன்னெடுக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாக அமையும்.

சிறிலங்காவில் நீதித்துறையில் மாறுதல்களைக் கொண்டு வந்து, போருக்கு பின்னரான காலப் பகுதியில் ஏற்பட்டுள்ள மாறுதல்களையும் மனதில் கொண்டு, அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிவழங்கும் நோக்கில், அதற்கேற்ற வகையில் உத்திகள் வகுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.

அதற்கான வழிமுறைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதேபோல் உண்மைகளை கண்டறிய சுயாதீனமான வழிமுறை ஏற்படுத்தப்பட்டு, இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு முழுமையான வகையில் நியாயங்கள் வழங்கப்பட்டு, இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் .

இந்த இரண்டு நடவடிக்கைகளும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் சிறிலங்கா தனது முழுமையான வலிமையை உணர்ந்து கொள்ள முடியும்.

சிறிலங்காவின் அனைத்து சமூக மக்களிடமும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு, அவர்களும் உள்வாங்கப்படுவது மிகவும் அவசியம்.

அனைத்திலும் முக்கியமாக கடந்த காலங்களில் இடம்பெற்ற பெரிய அளவிலான அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் உள்வாங்கப்படுவது அவசியம்.

அதிகாரிகள் நீண்டகால அடிப்படையில் உறுதியுடன் செயல்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும்.

மறுபுறத்தில் காணாமல் போனவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை தெளிவுபடுத்த உடனடி நடவடிக்கை தேவை.

நாட்டின் வடக்கு-கிழக்கு பகுதியில் பெண்கள் மீதான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்களும், சட்டத்துக்கு விரோதமாக தடுத்து வைப்பது போன்ற நடவடிக்கைகளும் முடிவுக்கு வருவதை அரசு உறுதிசெய்ய வேண்டும் .

கடுமையான விதிமீறல்களைச் செய்தவர்கள் நீதிமன்றத்தின் முன்னர் குற்றச்செயல்களுக்காக நிறுத்தப்படுவது அவசியம்.

நாடு தற்போதுள்ள நிலையில் மீண்டும் எவ்விதமான தவறுகளும் செய்யும் நிலை ஏற்படக் கூடாது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *