மேலும்

புதிய பாதுகாப்புச் செயலராக கருணாசேன ஹெற்றியாராச்சி – பஸ்நாயக்கவின் பதவி பறிப்பு

சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலராக கருணாசேன ஹெற்றியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்காவின் புதிய அமைச்சரவை பதவியேற்றதையடுத்து, 44 அமைச்சுக்களுக்கான செயலர்கள் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் பாதுகாப்புச் செயலராக கருணாசேன ஹெற்றியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். சிவில் அதிகாரியான இவர் முன்னர் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபையின் செயலராக பணியாற்றியிருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்சவை நீக்கி விட்டு, பி.எம்.யூ.டி.பஸ்நாயக்கவை பாதுகாப்புச் செயலராக நியமித்திருந்தது.

அவர், மகிந்த தரப்புக்கு ஆதரவாகச் செயற்படுவதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன.

தற்போது, அவர் நீக்கப்பட்டு, புதிய பாதுகாப்புச் செயலராக கருணாசேன ஹெற்றியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

Karunasena Hettiarachchi - Defence Secretary (2)

முன்னதாக, தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், கோத்தாபய ராஜபக்ச அமர்ந்த ஆசனத்தில் தாம் அமரப் போவதில்லை என்றும், அது தனது கௌரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *