மேலும்

மத்தல விமான நிலையத்தில் நெல்லைக் களஞ்சியப்படுத்த அனுமதி

Mattala Rajapaksa International Airportஅம்பாந்தோட்டையில் முன்னைய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட மத்தல மகிந்த ராஜபக்ச விமான நிலையத்தில், யால போகத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லை களஞ்சியப்படுத்த, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மத்தல அனைத்துலக விமான நிலையத்தின் களஞ்சிய சாலைகளில், யால போக அறுவடையின் போது கொள்வனவு செய்யப்படும் நெல்லை களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு, சிறிலங்கா நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சிறிலங்கன் எயர்லைன்ஸ் மற்றும் எவியேசன் நிறுவனம் ஆரம்ப அனுமதியை வழங்கியுள்ளது.

தமக்கான தேவை முடிந்த பின்னர், மத்தல விமான நிலையத்தின் களஞ்சியசாலைகள் நல்ல நிலையில், மீள ஒப்படைக்கப்படும் என்று நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் திசநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மத்தல விமான நிலையத்தை மூடவோ, அதனை நெற்களஞ்சியமாக மாற்றவோ அனுமதிக்கப் போவதில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நெற்களஞ்சியமாக மாற்றும் முடிவு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டிருந்தால் அதுபற்றி அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் பேசி, தடுத்து நிறுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே, 2001 ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்த போது ரணில் விக்கிரமசிங்க, மத்தல விமான நிலையத்துக்கு சில கி.மீ தொலைவில், இரண்டாவது அனைத்துலக விமான நிலையத்தை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டியிருந்தார் என்பதையும் சமல் ராஜபக்ச நினைவுபடுத்தியிருக்கிறார்.

எந்த விமான நிலையமும் ஆரம்பத்திலேயே வருவாயை அள்ளிக் கொடுப்பதில்லை என்றும் காலப் போக்கில் தான் அது வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது சீனாவிடம் பெறப்பட்ட 210 மில்லியன் டொலர் கடன் மூலம் இந்த விமான நிலையம் கட்டப்பட்ட போதும், தற்போது ஒரே ஒரு விமான நிறுவனம் மட்டுமே சேவைக்குப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *