மேலும்

சிறிலங்கா நாடாளுமன்றில் மகிந்தவுக்கு முன்வரிசை ஆசனம்

mahindaசிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, நாடாளுமன்றத்தில் முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்படும் என்று நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் திசநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தேசிய அரசாங்கத்தில் எத்தனை உறுப்பினர்கள் இடம்பெறுவர் என்பது பற்றிய தகவல்கள் எனக்குத் தரப்படவில்லை. இதனால் நாடாளுமன்ற ஆசனங்களை என்னால் ஒழுங்குபடுத்த முடியாதுள்ளது.

தேசிய அரசாங்கத்தில் இடம்பெறப் போகின்ற உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் தெரிய வந்த பின்னரே ஆசனங்களை ஒழுங்குபடுத்த முடியும்.

சிறிலங்காவின் 8ஆவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு வரும் செப்ரெம்பர் 1ஆம் நாள் நடக்கவுள்ளது.

அன்று காலையில் புதிய உறுப்பினர்களின் பதவியேற்பு நடைபெறும். அதையடுத்து. மாலையில் சிறிலங்கா அதிபர் தொடக்கஉரை நிகழ்த்துவார்.

புதிய உறுப்பினர்கள் பதவியேற்ற பின்னரே, ஆசனங்களை ஒழுங்குபடுத்த முடியும்.

116 உறுப்பினர்கள் ஒரு பக்கத்தில் அமரமுடியும். தேசிய அரசாங்கத்தில் இடம்பெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகமாயின், மறுபக்கத்தில் ஆசனங்கள் ஒதுக்கப்படும்.

உறுப்பினர்களுக்கு மூப்பு வரிசைப்படியே ஆசனங்கள் ஒதுக்கப்படும். 1970ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்துக்குள் பிரவேசித்தவர் என்பதால்,  அவருக்கு எதிர்க்கட்சி வரிசையில் முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *