மேலும்

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் விபரம் நாளை அறிவிப்பு – இரா.சம்பந்தன்

sampantharதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளவர்களின் விபரங்களை நாளை வெளியிடப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தன.

நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியல் ஆசனங்களைக் கைப்பற்றிய ஐதேக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியன தமது தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் இன்னமும் இழுபறியில் தமது தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை வெளியிடாமல் உள்ளது.

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனங்களைப் பிடிக்க தோல்வியுற்ற வேட்பாளர்கள் பலரும் முயற்சிக்கின்றனர்.

அத்துடன் , பல்வேறு தரப்பில் இருந்தும், தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு நியமிக்கப்பட வேண்டியவர்கள் தொடர்பான பரிந்துரைகள், கோரிக்கைகள், கூட்டமைப்புத் தலைமைக்கு விடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரம் நாளை தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னர், ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என்றும், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற ஒருவரும், வன்னி மாவட்டத்தில் சில நூறு வாக்குகளால் வெற்றி வாய்ப்பை இழந்த பெண் வேட்பாளர் ஒருவரும், நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *