மேலும்

வடக்கு, கிழக்கு விவசாயிகளுக்கு சவாலாகி வரும் நீர்

farmerசிறிலங்காவின் மூன்று பத்தாண்டு கால உள்நாட்டுப் போர் 2009இல் முடிவடைந்ததிலிருந்து, தமிழ் விவசாயிகள் தமது தொழிலை சிறப்புற முன்னெடுப்பதில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

இந்தவகையில், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த விசுவமடு வாழ் விவசாயியான நாகரத்னம் கணேசன் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதற்கான போதியளவு நீரைப் பெறமுடியவில்லை எனக் கூறுகிறார்.

போர்க் காலத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் மட்டுமே நெல்லைப் பயிரிட்டதாகவும் ஆனால் தற்போது நான்கு ஏக்கர் நிலங்களில் நெற்பயிர்ச் செய்கையை மேற்கொள்வதாகவும் கணேசன் கூறுகிறார். ‘எனது பயிர்ச்செய்கைக்கு என்னால் எவ்வளவு நீரைப் பெறமுடியும் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இதுவே எனக்கு உள்ள மிகப் பெரிய பிரச்சினையாகும்’ என்கிறார் கணேசன்.

இதையொத்த பிரச்சினையை கிழக்கு மாகாண விவசாயிகளும் சந்திக்கின்றனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயிகள் பாரம்பரியமாக விவசாயத்தை நம்பி வாழும் மக்களாவர். இவர்களது விவசாய நடவடிக்கைகள் போரின் போது மிக மோசமான பாதிப்புக்களைச் சந்தித்தது.

யுத்தம் முடிவுற்ற பின்னர் தற்போது மீண்டும்  விவசாயத் தொழில் விரிவாக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. விவசாயிகள் மேலும் வெவ்வேறு பயிர்களைப் பயிரிடுவதற்கான தெரிவுகளைக் கொண்டுள்ளனர்.

அதாவது காலபோக மரக்கறிகள் மற்றும் புகையிலை போன்றவற்றை பயிரிடுவதற்கான தெரிவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயிகள் கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், 207 காலப்பகுதியில் 16,300 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டது. 2014ல் இதன் அளவு இரண்டு மடங்காகியது. அதாவது 31,632 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டது.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில், இந்த வளர்ச்சி மேலும் அதிகரித்தது. 2007ல், 47,000 ஏக்கரில் நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டது. 2014ல் இது மும்மடங்காகியது. அதாவது ஏழு ஆண்டுகளின் பின்னர், 2014ல்  153,000 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிடப்பட்டது.

‘போர்க் காலப்பகுதியில் நிலவியது போன்று ஊரடங்குச் சட்டம் போன்ற எவ்வித தடைகளும் தற்போது எமக்கில்லை. நாம் விரும்பிய நேரங்களில் எமது வயல்களுக்குச் செல்ல முடியும். ஆனால் நீர் கிடைக்கும் அளவை நிச்சயப்படுத்த முடியாமையே நாங்கள் எதிர்கொள்ளும் மிகப் பாரிய பிரச்சினையாகும்’ என மட்டக்களப்பைச் சேர்ந்த முஸ்லீம் விவசாயியான மொஹமட் அனீஸ் தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விவசாயமானது அடிப்படையில் பருவப்பெயர்ச்சி மழை மற்றும் நீர்ப்பாசனத்தில் தங்கியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, பருவமழை காலந் தவறிப் பொழிகிறது. இதனால் நாட்டில் வெள்ளப்பெருக்கு மற்றும் வரட்சி போன்றன ஏற்படுகின்றன. இதுவே பயிர் அறுவடைகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. கடந்த ஆண்டு, நாட்டில் மிக மோசமான வரட்சி ஏற்பட்டது. இதனால் கிட்டத்தட்ட 15 சதவீத நெல் அறுவடை பாதிப்படைந்தது.

அளவுக்கதிக நீராலும் மிகக்குறைந்தளவு நீராலும் சிறிலங்காவின் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என இவ்வாண்டு ஐ.நா உணவு மற்றும் விவசாய நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘அளவுக்கதிகமான மற்றும் காலத்திற்குத் தேவையான நீரைப் பெறமுடியாததால் சிறிலங்காவின் பல்வேறு பிராந்தியங்களிலும் விவசாய உற்பத்தி விலைகளில் தளம்பல் ஏற்பட்டுள்ளது’ என ஐ.நா உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் ஆசிய பசுபிக் உணவு விலை மற்றும் கோட்பாட்டு கண்காணிப்பால் இம்மாதம் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘மறுபுறத்தே, அளவுக்கு அதிகமான மழைநீரால் விவசாயப் பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. உலர் வலய மாவட்டங்களில் மழைநீர்ப் பற்றாக்குறையானது பயிர்ச்செய்கைகளை ஆரம்பிப்பதில் காலதாமதத்தை ஏற்படுத்துகிறது’ என ஐ.நா உணவு மற்றும் விவசாய நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த இரண்டரை பத்தாண்டு கால போர்க்காலத்தின் போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயமானது பெருமளவில் சுயதேவையைப் பூர்த்தி செய்வதற்கான சிறியளவு விவசாயமாகவே காணப்பட்டது. சந்தை வாய்ப்புக்கள் குறைவாக இருந்தமையே இதற்கான காரணமாகும். ஏனெனில் யுத்தத்தின் அச்சம் காரணமாக மக்கள் விவசாய நிலங்களை அதிகளவில் பயன்படுத்தவில்லை.

‘யுத்தம் முடிவுற்ற பின்னர் விவசாயமானது தற்போது வர்த்தக சார் நோக்குடன் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது அதிக சந்தை வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. பயிர்செய் நிலங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. ஆனால் பெறக்கூடிய நீரின் அளவை நிச்சயப்படுத்த முடியவில்லை’ என வடக்கு மாகாண சபையின் உதவி நீர்ப்பாசன இயக்குனர் எஸ்.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

கைவிடப்பட்ட நீர்ப்பாசன கட்டுமானங்கள் மீளவும் செப்பனிடப்பட்டுள்ள போதிலும் நீர் விநியோகம் நிலையற்றதாகக் காணப்படுவதாக சண்முகநாதன் மேலும் தெரிவித்தார்.

‘நீர் முகாமைத்துவத்தில் அதிகளவில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதே தற்போதைய விவசாயிகளின் தேவையாக உள்ளது’ என இவர் மேலும் சுட்டிக்காட்டினார். விவசாயிகள் நீரைத் தேக்கி வைக்கக்கூடிய எளிய முறைகளைக் கைக் கொள்ள வேண்டும். இதுவே விவசாயிகள் தொடர்ந்தும் தமது பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளத் துணைபுரியும் என்பது நீர்ப்பாசன வல்லுனரின் கருத்தாகும்.

முதலாவதாக, விவசாய நிலங்களை மட்டப்படுத்த வேண்டும். இதன் மூலம் நீர்ப் பயன்பாட்டை மேலும் வினைத்திறன் மிக்கதாக மாற்ற முடியும்.

இரண்டாவதாக, கிருமிநாசினி போன்றோ அல்லது களைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழிபோன்றோ நீரை விவசாயிகள் பயன்படுத்தக் கூடாது என நீர்ப்பாசன வல்லுனர் அறிவுறுத்துகிறார்.

வடக்கில், நெற்பயிரில் ஈடுபடும் விவசாயிகள் 15.24 சென்ரிமீற்றர் அதாவது ஆறு அங்குல நீரைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இதற்கு நான்கு அங்குல நீர் மட்டும் போதுமானதாகும். களைகள் பயிர்களைத் தாக்காமல் வைத்திருப்பதற்காகவே இவ்வாறு அதிகளவான நீர் பயன்படுத்தப்படுகிறது. எனினும் விவசாய நிலத்தை முறையாக பராமரிப்பதன் மூலமும் களைகொல்லிகளைப் பயன்படுத்துவதன் மூலமும் களைகளைக் கட்டுப்படுத்த முடியும்.

பல்வேறு பயிர்களை ஒரேதடவையில் பயிரிட வேண்டும். இதன்மூலம் நீரின் பயன்பாடு கட்டுப்படுத்தப்படும். குறிப்பாக சில நெல் பயிருக்கு குறைந்தளவு நீர் தேவைப்படும். நீரில்லாத காலத்தில் இவ்வாறான நெல்லைப் பயிரிட முடியும் என்பது நீர்ப்பாசன வல்லுனரான சண்முகநாதனின் ஆலோசனையாகும்.

‘எனது தந்தையார் தனது காலம் முழுவதும் ஒரே வகையான நெல் விதைகளைப் பயிரிட்டுள்ளார். ஆனால் நான் அப்படியல்ல. குறிப்பிட்ட காலப்பகுதியில் நெல்லைப் பயிரிடுவதற்கு முன்னர் நான் குளங்களிலுள்ள நீரின் அளவைக் கவனத்திற் கொள்கிறேன்’ என மட்டக்களப்பைச் சேர்ந்த அனீஸ் என்கின்ற விவசாயி தெரிவித்தார்.

வழிமூலம் – ரொய்ட்டர்ஸ்
ஆங்கிலத்தில் – அமந்தா பெரேரா
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *