மேலும்

தேசியப்பட்டியல் விவகாரம் – நீதிமன்ற உத்தரவை நாடுவார் தேர்தல்கள் ஆணையாளர்?

Mahinda Deshapriyaசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலர் பதவியில் இருந்து அனுர பிரியதர்சன யாப்பாவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜெயந்தவும், நீக்கப்பட்டதன் சட்டபூர்வதன்மை குறித்து கருத்து வெளியிட மறுத்துள்ளார் சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர்.

இந்த விவகாரத்தில் எந்தக் கருத்தையும் வெளியிட வேண்டிய தேவை இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜெயந்த நீக்கப்பட்டுள்ளது நாளை நடைபெறவிருக்கும் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று தேர்தல் ஆணையாளரைச் சந்தித்த, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களாக, தினேஸ் குணவர்த்தன மற்றும் டலஸ் அழகப்பெருமவிடமே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலராக இருந்த போது சுசில் பிரேமஜெயந்த தேர்தல் திணைக்களத்திடம் கையளித்த, வாக்களிப்பு நிலைய முகவர்கள், வாக்கெண்ணும் நிலைய முகவர்களின் பட்டியல் செல்லுபடியாகும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

அதேவேளை, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர், தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு முன்னதாக, அதற்கு அனுமதி கோரி தேர்தல்கள் ஆணையாளர் நீதிமன்ற உத்தரவு ஒன்றை நாடக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *