மேலும்

வடக்கில் போருக்குப் பிந்திய சூழலில் சமூக உளவியல் புனர்வாழ்வு

jaffna-tamils (1)சட்டம், ஒழுங்கு மற்றும் நீதி போன்றவற்றுக்குப் பொறுப்பளிக்க வேண்டியவர்கள் மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். போரின் போதும் அதன் பின்னரும் மக்கள் இவ்வாறான சட்ட ஒழுங்கின் பாதிப்பால் பல்வேறு துன்பங்களைச் சந்தித்துள்ளனர். இதுவே அவர்கள் இன்று சட்டத்தை தமது கைகளில் எடுத்துள்ளமைக்கான பிரதான காரணம்.

இவ்வாறு, வடக்கு, கிழக்கில் போருக்குப் பிந்திய உளவியல் பாதிப்புகள் குறித்து, சண்டே ரைம்ஸ் வாரஇதழில், விரிவான கட்டுரையொன்றை வரைந்துள்ளார் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட உளநலத்துறை பேராசிரியர் கலாநிதி தயா சோமசுந்தரம். இந்த கட்டுரையை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

பாதிக்கப்பட்ட ஒருவரது காயங்களை ஆற்றி அவரைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதே புனர்வாழ்வு எனக் கூறப்படுகிறது. காயங்கள் என்பது உடல், உள மற்றும் சமூக வடுக்களை உள்ளடக்குகிறது.

போர்க் காரணத்தால் அல்லது ஆழிப்பேரலை காரணமாக ஒருவர் இழந்த தனது உடல் மற்றும் உள நலங்களை மீண்டும் அவர் பெறும் விதமாக செயற்படுவதே புனர்வாழ்வு என்பதன் நோக்காகும்.

உளஆற்றுப்படுத்தல், உளப்பிணிச் சிகிச்சை, நடத்தை மற்றும் அறிவாற்றல் சிகிச்சைகள் போன்றன பாதிக்கப்பட்ட ஒருவரை மீளவும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கான உள புனர்வாழ்வின் கீழ் பயன்படுத்தப்படும் சில சிகிச்சை முறைமைகள் ஆகும்.

குடும்ப மற்றும் சமூக மட்ட சிகிச்சைகள், புனர்வாழ்வு, தொண்டர் நிறுவனங்கள் வலைப்பின்னல்கள், தொழில்சார் சிகிச்சை மற்றும் தொழிற்பயிற்சிகள் போன்றன சமூக மட்ட உள மற்றும் உடல் ஆற்றல்களை மேம்படுத்துவதற்கான சிகிச்சைகள் ஆகும்.

இதேபோன்று, ஆத்மார்த்தமான நம்பிக்கை மற்றும் பலம் போன்றன பாதிக்கப்பட்ட ஒருவரின் உடல் உள ஆற்றல்களை அனைத்து மட்டங்களிலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளாகும்.

சிறிலங்கா வாழ் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமுதாயங்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் கரையோரப் பகுதிகளில் வாழ்வோர் கடந்த 25 ஆண்டுகளாக போர் வடுக்களைச் சுமந்து கொண்டு வாழ்கின்றனர்.

அத்துடன் இவர்கள் பல்வேறு இடப்பெயர்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். காயமடைந்துள்ளனர், தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளனர், தமது குடும்ப உறுப்பினர்கள் பலரை நண்பர்களை இழந்துள்ளனர், தமது வீடுகளை, தொழில்வாய்ப்புக்களை மற்றும் பெறுமதி மிக்க பல்வேறு வளங்களை இவர்கள் இழந்து வாழ்கின்றனர்.

சிறிலங்கா சுகாதார அமைச்சு, யுனிசெப் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் இணைந்து அண்மையில் சிறிலங்கா வாழ் தனிநபர்களின் உளப்பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்துள்ளனர். இந்த வகையில்,  போருக்குப் பின்னான உளத்தாக்கங்களுக்கு 13 சதவீதத்தினரும், 49 சதவீதத்தினர் பதற்றத்திற்கும் 42 சதவீதத்தினர் மனஅழுத்தங்களுக்கும் ஆளாகியுள்ளனர்.

இந்த ஆய்வானது போரின் போது இடம்பெயர்ந்த வன்னிப் பிரதேச மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டது. இதேபோன்று புத்தளத்திலுள்ள இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் 18.8 சதவீதத்தினர் பொது மனத் தாக்கங்களுக்கும், 14 சதவீதத்தினர் மரபுவழி மனநோய்க்கும், 1.3 சதவீதத்தினர் பாரிய மன அழுத்தத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தினர் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பிறிதொரு ஆய்வில், போருக்குப் பின்னான மனத் தாக்கங்களுக்கு 6.7 சதவீதத்தினரும், மன அழுத்தத்திற்கு 15.7 சதவீதத்தினரும், 7.9 சதவீதத்தினர் மரபுவழி உளத் தாக்கத்திற்கும், 10.8 சதவீதத்தினர் தொடர்பறு சீர்குலைவாலும், 3.3 சதவீதத்தினர் மூளைப் பாதிப்பிற்கும், 3.5 சதவீதத்தினர் மதுபான சீரழிவிற்கும் ஆளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

போருக்குப் பின்னான உளவியல் தாக்கத்தின் விளைவாக தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி மற்றும் வீட்டு வன்முறைகள் உட்பட பல்வேறு உளசமூகப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. போரின் தாக்கம் வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் மிகப் பாரிய உள மற்றும் உளசமூகப் பிரச்சினைகளை அதிகரித்துள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட வேறுபட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு உளசமூக புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. இராணுவ மற்றும் ஆயுதக்குழுக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம், இவர்களது குடும்பங்கள் மத்தியில் பிணக்குகள் மற்றும் வீட்டு வன்முறைகள், மதுபானப் பாவனை, போதைப் பொருள் பாவனை, சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகள், தற்கொலைகள் போன்றன அதிகரித்துள்ளன.

தொடர் இடப்பெயர்வின் காரணமாக குடும்பங்கள் பிரிந்துள்ளன. குடும்ப உறுப்பினர்கள் இறந்துள்ளனர், காணாமற்போயுள்ளனர், காயமடைந்துள்ளனர், பெண்கள் தமது குடும்பங்களைத் தலைமை ஏற்று நடாத்த வேண்டிய நிலை காணப்படுகிறது. முழு சமூகத்தின் வடிமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய சூழல் முறைமைகள் அதாவது வாழ்வு முறைமை, கிராமங்கள், உறவுகள், தொடர்புடைமை, சமூக முதலீடுகள், கட்டமைப்புக்கள், நிறுவகங்கள் போன்றன சீர்குலைந்துள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த விளைவால் சமூக இழைகள் அறுந்துள்ளன.

நம்பிக்கையீனங்கள், தொடர்புகள் துண்டிக்கப்படல், தங்கியிருத்தல், ஊக்குவித்தல் இல்லாமை, அதிகாரம் இழக்கப்பட்டமை போன்ற பல்வேறு சீர்குலைவுகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான மன வடுக்கள் பெற்றோர் – சிறுவர் தொடர்பாடல் மூலம் கடத்தப்படுகின்றன.

போரின் பின்னான சமூக மட்டத் தாக்கங்கள் பல மட்டங்களிலும் பரவியுள்ளன. இவ்வாறான வடுக்களைப் போக்குவதற்கு தனிப்பட்டவர்களிடம் உளவியல் சார் அணுகுமுறைகள் மேற்கொள்ளப்படுவது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.

சமூக மட்டப் பிரச்சினைகள் புரிந்து கொள்ளப்பட்டு அவை வெளிப்படுத்தப்பட வேண்டும். இதற்கும் மேலாக, குடும்பங்கள், சமூகங்கள் மத்தியில் சமூக-பொருளாதார புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு இவை வெற்றி கொள்ளப்பட வேண்டும்.

மிகப்பாரிய இயற்கை அழிவுகள் அல்லது மிகக்கொடிய உள்நாட்டு யுத்தம் போன்றவற்றின் விளைவுகள் சமூக முதலீட்டில் தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. நீண்டகால யுத்தத்தின் போது சமூக முதலீடு என்பது அழிக்கப்பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

நேர்மறையான சமூக முதலீடு என்பது சமுதாயத்தை மீளக்கட்டியெழுப்பவும், அழிவுகளை எதிர்த்து நிற்கக் கூடிய ஆளுமையையும் வினைத்திறனுடன் இவற்றை முகங்கொடுக்கும் ஆற்றலையும் மேம்படுத்துகிறது.

பாரம்பரிய சிறிலங்கா சமுதாயங்களின் சமூக முதலீடு என்பது உயர்வாக உள்ள போதிலும், இவை சமூக, குடும் மற்றும் இனவழி தொடர்பாடலால் பின்னிப் பிணைந்துள்ளது. போட்டி, இனங்களுக்கிடையிலான நல்லுறவு எட்டப்படாமை போன்ற பல்வேறு காரணிகளே நாட்டில் போர் ஆரம்பிப்பதற்கான காரணியாகும்.

பாதுகாப்பின்மை, அச்சம், பலமான உணர்வுகள் போன்றன ஒரு குழுவின் அடையாளம், கலாசாரம், வாழ்வு முறை, நில வளங்களைப் பயன்படுத்துதல், நீடித்து நிலைத்து நிற்றல் போன்ற பல்வேறு காரணிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது எதிர்ப்புகள் தலைதூக்குகின்றன. இதுவே பின்னர் கூட்டுச் செயற்பாடுகள், எதிர்ப்புக்கள், ஆயுதக்குழுக்கள் மற்றும் வன்முறைகள் தோன்றக் காரணமாகும்.

ஆட்சியாளர்களுக்கும் அதிகாரத்துவம் மிக்க சமூகத்திற்கும் இடையில் பிரச்சினைகள் தோன்றுகின்றன. இதேபோன்று ஏழைகள் அல்லது அதிகாரத்துவ வளங்களை அடைய முடியாதவர்கள், தீர்மானம் இயற்றுபவர்கள், சந்தர்ப்பவாத கட்டமைப்புக்களைக் கட்டுப்படுத்துதல், வளப் பகிர்ந்தளிப்பு போன்ற நிலையிலும் மோதல்கள் ஆரம்பிக்கின்றன.

குழுக்களிடையே பாரபட்சம் காண்பித்தல், சிறுபான்மையினர் மத்தியில் சமூக முதலீடு பற்றாக்குறை நிலவுவதும் மோதலுக்கான காரணியாகும். இவ்வாறான பல்வேறு காரணிகளால் ஏற்படும் யுத்தத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட சமூகங்கள் உடல் மற்றும் உளத் தாக்கங்களுக்கு ஆளாகுகின்றனர்.

இந்நிலையில் போருக்குப் பின்னான புனர்வாழ்வு, மீளிணக்கப்பாடு போன்றவற்றுக்கான முக்கிய அம்சமாக நம்பிக்கையை ஏற்படுத்துதல் அமைந்துள்ளது. சமூகத்தையும் தேசத்தையும் ஒன்றாக்கும் போதே புனர்வாழ்வு மற்றும் மீளிணக்கப்பாடு என்பது சாத்தியமாகிறது.

சட்டம் மற்றும் ஒழுங்குமுறையைப் பின்பற்றுதல், நீதி, அரசாங்க கட்டுமானங்கள், அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும், பல்வேறு சமூக உறுப்பினர்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். புங்குடுதீவில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள், மக்கள் அரசாங்க பொறிமுறை மீதான நம்பிக்கையை இழந்தமையே காரணமாகும்.

சட்டம், ஒழுங்கு மற்றும் நீதி போன்றவற்றுக்குப் பொறுப்பளிக்க வேண்டியவர்கள் மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். போரின் போதும் அதன் பின்னரும் மக்கள் இவ்வாறான சட்ட ஒழுங்கின் பாதிப்பால் பல்வேறு துன்பங்களைச் சந்தித்துள்ளனர். இதுவே அவர்கள் இன்று சட்டத்தை மதியாது அதைத் தமது கைகளில் எடுத்துள்ளமைக்கான பிரதான காரணமாகும்.

சிறிலங்காவின் வடக்கில் நிலவும் தற்போது போருக்குப் பின்னான சூழல் தொடர்பாக தனிநபர்கள், குடும்பத்தினர், சமூகம் மற்றும் சமூக கலாசாரம் எனப் பல்வேறு முறைகளின் கீழ் மதிப்பாய்வு செய்யப்பட்டது. பெரும்பாலான மக்கள் மன அழுத்தங்களுடன் வாழ்வது இதன் மூலம் அறியப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, 2010ல் யாழ்ப்பாண மருத்துவக் கல்லூரியில் கல்விகற்ற வன்னிப் பிரதேச மாணவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் 82 சதவீதத்தினர் நேரடியாகப் போரின் தாக்கத்தை அனுபவித்துள்ளனர்.

67 சதவீதத்தினர் மரணத்திலிருந்து தப்பியுள்ளனர். 63 சதவீதத்தினர் தமது குடும்ப உறுப்பினர்களை மற்றும் நண்பர்களை இழந்துள்ளனர். 43 சதவீதத்தினர் படுகொலைகளை நேரில் பார்த்துள்ளனர், 23 சதவீதத்தினர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டனர், 23 சதவீதத்தினர் கடத்தப்பட்டவர்கள், 18 சதவீதத்தினர் சித்திரவதைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். 38 சதவீத மாணவர்கள் 1-3 மனவடு சார் நிகழ்வுகளையும் 28 சதவீத மாணவர்கள் 4-7 மனவடு நிகழ்வுகளுக்கும் 10 சதவீதத்தினர் 8-11 மனவடு நிகழ்வுகளுக்கும் ஆளாகியுள்ளனர்.

இந்த மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதற்கான எவ்வித உளசமூக உதவிகளையும் பெற்றிருக்கவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே. இவ்வாறானவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் போது அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஏனெனில் இவர்கள் பல்வேறு மன உளைச்சல்களுடனேயே தற்போது வாழ்ந்து வருகின்றனர். இவர்களைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கான உளப் புனர்வாழ்வு வழங்கப்படவில்லை.

வன்னிப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் பல்வேறு தடவைகள் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் 10 தொடக்கம் அதற்கும் மேற்பட்ட தடவைகள் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் எதிர்பாராத வகையில் திடீரென மரணமடைந்தமை இந்த மக்கள் மத்தியில் ஆழமான மனவடுக்களைத் தோற்றுவித்துள்ளது.

இவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களது உறவுகள் காணாமற் போயுள்ளனர், குடும்பங்கள் பிரிந்துள்ளன, கைதுகள் இடம்பெற்றுள்ள, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், குண்டுத்தாக்குதல்களையும் எறிகணைகணை மற்றும் துப்பாக்கிப் பிரயோகங்களையும் நேரில் பார்த்துள்ளமை போன்ற பல்வேறு துன்பியல் அனுபவங்களை வன்னிப் பிரதேசத்தில் வாழும் மக்கள் நேரடியாகப் பார்த்துள்ளனர்.

இவர்கள் உளத் தாக்கங்களுக்கு மட்டுமல்லாது, தாகம், பசி, நீண்ட நடை, மருத்துவ வசதியின்மை, தங்குமிட வசதியின்மை போன்ற பல்வேறு துன்பங்களை போரின் போது அனுபவித்துள்ளனர்.

இவ்வாறான துன்பியல் அனுபவங்கள் மக்களின் உள உடல் தாக்கங்களில் பாதிப்பைச் செலுத்துகின்றன. இதுவே உளசமூகத் தாக்கங்களுக்கு காரணமாகும். இவை அதிகரிக்கும் போது குறித்த நபர் மனநோயாளி என அடையாளங் காணப்படுகிறார்.

போரின் தாக்கமே வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கும் காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது. இவ்வாறான போரியல் தாக்கங்களால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பல்வேறு பாதிப்புக்களைச் சந்திக்கின்றன. தொழில்வாய்ப்பற்ற நிலை அதிகரித்துள்ளது. இதனால் கீழ்த்தரமான சில தொழில்களை மேற்கொள்ளும் நிலை காணப்படுகிறது.

குறிப்பாக கசிப்பு உற்பத்தி. தாழ்வான வருமானமே கசிப்பு உற்பத்தியால் கிடைக்கின்ற போதிலும் வேறெந்த தொழிலிலும் ஈடுபட முடியாத சிலர் இதில் ஈடுபடுகின்றனர். கசிப்புக் குடிப்பதால் இது நுரையீரலையும் மற்றும் பிரதான உறுப்புக்களையும் செயலிழக்கச் செய்கிறது.

இத்துடன் சிறுவர் துஸ்பிரயோகம் குறிப்பாக சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் என்பது அதிகரிப்பதற்கும் போர்ப் பாதிப்புக்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன.

இவ்வாறான மிகமோசமான போருக்குப் பின்னான மனவடுக்கள் ஆற்றப்படுவதற்கான தக்க தருணம் இதுவாகும். இது மேலும் தாமதிக்கப்படாது ஆற்றுப்படுத்தல்கள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *