மேலும்

இராணுவ அழுத்தங்களால் பிரகீத் கடத்தல் குறித்த விசாரணைகளை நிறுத்த ரணில் உத்தரவு

military-officersசிறிலங்கா இராணுவத்தின் அழுத்தங்களால், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளை உடனடியாக நிறுத்தும்படி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் சிறிலங்கா படையினருக்குள் குழப்பங்கள் ஏற்படக் கூடும் என்று இராணுவ உயர் மட்டத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கையை அடுத்தே, சிறிலங்கா பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டது குறித்த விசாரணைகளில், பல புலனாய்வு அதிகாரிகளுக்கும், இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

ஒரு இராணுவ அதிகாரி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு உயர்மட்ட அதிகாரி விரைவில் கைது செய்யப்படவுள்ளார்.

எனினும், குறிப்பிட்ட இராணுவ அதிகாரியை விசாரணைக்காக ஒப்படைக்க முடியாது என்று சிறிலங்கா இராணுவ அதிகாரிகள், குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளனர்.

அந்த இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டால், போரின் போது உருவாக்கப்பட்ட சிறப்பு இராணுவப் புலனாய்வுப் பிரிவு பற்றிய தகவல்கள் வெளிவரக் கூடும்.

650 பேரைக் கொண்ட இந்த சிறப்பு இராணுவப் புலனாய்வுப் பிரிவு, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினால், உருவாக்கப்பட்டது.

போர் முடிவுக்கு வந்த பின்னர், இந்தப் புலனாய்வுப் பிரிவு, ராஜபக்சவின் படைப்பிரிவு போலச் செயற்பட்டது. எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டது இதன் ஒரு நடவடிக்கையே ஆகும்.

இதுபோன்ற பல செயற்பாடுகளில் இந்த இராணுவப் பிரிவு ஈடுபட்டுள்ளதாகவும், இதுபற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டால், இராணுவத்துக்குள் பாரிய குழப்பம் ஏற்படுவதுடன், மிலேனியம் சிற்றி காட்டிக் கொடுப்பு போன்ற சர்ச்சையாக உருவெடுக்கலாம் என்றம், இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் கீழ், முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, பிரிகேடியர் வன்னிநாயக்க உள்ளிட்ட பல அதிகாரிகள் இந்த சிறப்பு புலனாய்வுப் பிரிவில் இருந்துள்ளனர்.

இந்தச் சூழ்நிலையிலேயே, எக்னெலிகொட கடத்தல் குறித்த விசாரணைகளை இடைநிறுத்த சிறிலங்கா பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *