மேலும்

பிரகீத் கடத்தல்: கேணல் சிறிவர்த்தனவை கைது செய்வதை பிற்போடுமாறு உத்தரவு

prageeth eknaligodaஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, கடத்தப்பட்டு காணாமற்போனது தொடர்பாக, சிறிலங்கா இராணுவ அதிகாரிகளைக் கைது செய்யும் நடவடிக்கைகளைப் பிற்போடுமாறு, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய கேணல் சிறிவர்த்தன என்ற சிறிலங்கா இராணுவ அதிகாரியைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே, நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரையில் கைது நடவடிக்கைகளைப் பிற்போடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது யார் என்பதை அந்த ஆங்கில ஊடகம் குறிப்பிடவில்லை.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்து ஓய்வு பெற்ற சார்ஜன்ட் மேஜர் முத்துபண்டா, தாம் எக்னெலிகொடவை கிரிதல இராணுவ முகாமில் வைத்து, குடும்ப விருட்சம் என்ற நூல் தொடர்பாகவும், சரத் பொன்சேகாவுடனான தொடர்புகள் குறித்தும் விசாரணை செய்ததாக ஒப்புக் கொண்டிருந்தார்.

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரின் துணையுடன் கோப்ரல் பிரியந்தவே, எக்னெலிகொடவை கிரிதல இராணுவ முகாமுக்கு கடத்தி வந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

தமது விசாரணைகளுக்குப் பின்னர், ஒரு இடத்துக்குச் செல்ல வேண்டும் என்றும் எக்னெலிகொடவை, கேணல் சிறிவர்த்தனவே அழைத்துச் சென்றதாகவும், சார்ஜ்ட் மேஜர் முத்துபண்டா வாக்குமூலம் அளித்திருந்தார். இதன் பின்னரே எக்னெலிகொட காணாமற்போயுள்ளார்.

இந்தநிலையில் கேணல் சிறிவர்த்தனவைக் கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே, தேர்தல் முடிவடையும் வரை அவரது கைது தடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *