மேலும்

வீழ்வதற்கு அல்ல நிமிர்வதற்கு….!

refugees_srilankaமீண்டும் ஒரு தேர்தல் திருவிழாவைச் சந்தித்து நிற்கிறது ஈழத்தமிழினம். விரும்பியோ விரும்பாமலோ, இதனை எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயம். இது சிறிலங்கா நாடாளுமன்றத்தின் ஆசனங்களை நிரப்புவதற்கான தேர்தல். 

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், ஈழத்தமிழினம் சந்திக்கும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல்.

வல்லரசுத் தேசங்களின் பார்வை முழுவதையும் இலங்கைத்தீவின் மீது குவிய வைத்திருக்கும் தேர்தல்.

  • மகிந்த ராஜபக்சவின் மீள்வருகை அனைத்துலகத்தை தமிழர் பக்கம் திருப்புமா?
  • அமெரிக்க – இந்திய அரசுகளின் நலன்கள் தமிழர் தலைவிதியை தீர்மானிக்குமா?
  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அந்நியப்படுத்த முற்படும் புலம்பெயர் தேச செயற்பாடுகள் சரியானதா? – அது வாக்களிக்கும் உரிமைபெற்ற தாயகத் தமிழர்களின் நிலைப்பாட்டுக்கு ஒத்திசைவானதா?
  • தமிழரின் சுயாட்சிக் கோரிக்கையான சமஷ்டித் தீர்வை ஐ.தே.க நிராகரித்துள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கும்?
  • மைத்திரிபால சிறீசேன தமிழர்களுக்கு எவ்வாறு அதிகாரங்களைப் பகிர்வதான வாக்குறுதியை நிறைவேற்றுவார்?

என்பன போன்ற கேள்விகளுக்கு விடைதேடுவதற்கான தேர்தலாக இது வந்து நிற்கிறது.

என்னதான், தலைகீழாக நின்றாலும், சிறிலங்கா நாடாளுமன்றம் ஒன்றும் தமிழரின் அரசியல் அபிலாசைகளைத் தீர்க்கின்ற ஒரு களமாக இருக்கும் என்று நாம் நம்பவில்லை.

உலகின் கண்களுக்கும், இராஜதந்திர சமூகத்துக்கும் எமது பலத்தையும், உறுதியையும் வெளிப்படுத்துவதற்கான களமாக மட்டுமே அமையக் கூடியது அது.

எனவே தான், ஒன்றுபட்ட பலத்தை தமிழர்கள் வெளிப்படுத்த வேண்டிய களமாக இது கருதப்படுகிறது.

இந்த தேர்தலில் பெரும்பாலான தமிழ்மக்களால் கடந்த 15 ஆண்டுகளாக ஆதரிக்கப்பட்டு வந்திருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபுறம் நிற்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து உடைந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாக மாறிய தமிழ்க் காங்கிரஸ் மற்றொரு புறம் நிற்கிறது.

இந்த இரண்டு பாரம்பரிய தமிழ்க் கட்சிகளை விட, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களின் ஜனநாயகப் போராளிகள், சுயேச்சைக்குழுவாக இன்னொரு பக்கம் நிற்கின்றனர்.

இவர்கள் தவிர, தமிழர்களால் அறியப்பட்ட- அறியப்படாத கட்சிகளும்,  சிங்களத் தேசியக் கட்சிகளும் கூட தமிழரின் வாக்குகளுக்காக  காத்து நிற்கின்றன.

முள்ளிவாய்க்கால் மணல்வெளியில் எல்லாத் திசைகளிலும் இருந்து ஏவிவிடப்பட்ட எறிகணைகள் போல், தமிழ்மக்களைக் குறிவைத்து இவர்களின் பரப்புரைகள் வீசப்படுகின்றன.

யார் பக்கம் நிற்பது – யாருக்கு வாக்களிப்பது – யாரை ஆதரிப்பதால் நன்மை கிட்டும்? இவை தான் இப்போதைய கேள்விகள்.

எதுஎவ்வாறாயினும், தமிழ்த் தேசியத்தை கட்டிக்காக்கும், தமிழரின் உரிமைகளைப் பாதுகாக்கும், அதற்காக போராடும் குணம் படைத்தவர்களையே தமிழ்த் தேசிய இனம் தமது பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் அனுப்பும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எம்முள் உண்டு.

வடக்கு மாகாணசபைத் தேர்தலின் வெளிப்படுத்திய திடமும், நம்பிக்கையும், தமிழரின் அரசியல் போராட்டத்தில் முக்கிய மைல் கல்லாகியது.

அதன் மூலம் அடையப்பட்ட வடக்கு மாகாணசபை ஒரு ஓட்டைப் பாத்திரமாகவே இருந்தாலும், அனைத்துலக இராஜதந்திரக் கதவுகள் எமக்காக இன்னும் அகலத் திறப்பதற்கு அதுவும் ஒரு காரணம்.

எனவே, சிங்களத் தேசியக் கட்சிகளின் சலுகைகளுக்கோ, வாக்குறுதிகளுக்கோ விலைபோகாத இனம் என்பதை மீண்டும் நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் தமிழர்கள் உள்ளனர்.

ஒட்டுமொத்த தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கப்போகும் இத் தேர்தலில்- தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டு, தமிழரின் உரிமைக்காக போராடுவதான வாக்குறுதிகளோடு வந்து நிற்கும், தரப்பு ஒன்றாக மட்டுமே இருந்திருந்தால், கண்ணை மூடிக்கொண்டு புள்ளடிபோடும் பாக்கியசாலிகளாக தமிழர்கள் இருந்திருப்பர்.

ஆனால் ஈழத்தமிழினத்தின் சாபக்கேடு – அத்தகைய பாக்கியசாலிகளாகும் வாய்ப்பை வழங்கவில்லை.

ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அல்லவா, தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டு, தமிழர் தம் விடுதலைக்கான கோசத்தோடு களமிறங்கியிருக்கிறார்கள்.

இவர்களில் யாரைத் தெரிவு செய்து வாக்களிப்பது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், தமிழ்த் தேசிய அரசியலை தூக்கி நிறுத்திக் கொண்டு, அதனை முன்நோக்கி நகர்த்திச் சென்றதில் கூட்டமைப்புக்கு இருந்த பங்கை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

முள்ளிவாய்க்காலில் வீழ்த்தப்பட்ட எம்மினம், மீண்டும் எழுந்திருக்காது-  ஒரு தலைமையில் அணிதிரளாது- என்று மனப்பால் குடித்த சிங்களத்துக்கு, சவுக்கால் அடித்த பெருமை அதற்கேயுண்டு.

முள்ளிவாய்க்காலுக்குப் பிந்திய தமிழ்த் தேசிய இனத்தின் அரசியலில் கூட்டமைப்புக்குத் தனிஇடம் இருக்கிறது.

அதனால், தான் இதுவரை நடந்த தேர்தல்களில் அதற்கு மக்களாதரவும் ஆணையும் கிடைத்து வந்திருக்கிறது.

ஆனாலும், கூட்டமைப்புக்குள் இருக்கின்ற முரண்பாடுகளும், கூட்டுப்பொறுப்பின்மையும் பலவேளைகளில் தமிழ்மக்களின் பொறுமையை சோதித்ததுண்டு.

இந்தப் பொருமலும் வெம்மையும் இன்னமும் கூடத் தமிழ்மக்களிடம் இருப்பதை மறுக்க முடியாது.

அதேவேளை, சிறிலங்காவில் ஒரு எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு செய்யக் கூடியதை விடவும், தமிழரைப் பிரதிநிதித்துவம் செய்யும் எதிர்க்கட்சியாக இருந்து சாதிக்கக் கூடியது மிகக்குறைந்தளவே.

அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, நிதி ஒதுக்கீடு என்று இரண்டாந்தர அரசியல் நடத்தும் வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டாது.

இந்தப் பலவீனத்தை மட்டும் வைத்துக் கொண்டு, இதுவரை நாடாளுமன்றத்தில் இருந்து, எதனை சாதித்தார்கள் என்று கேள்வி எழுப்புவது மடைமை.

அனைத்துலக அரங்கில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கொண்டு செல்லும் வாய்ப்பை கூட்டமைப்பு பயன்படுத்தியிருக்கிறது.

தமிழர்களுக்கு நீதி கோருவதற்கான நகர்வுகளை காத்திரமாக முன்னெடுத்திருக்கிறது.

மக்களின் ஆணை தமக்கிருப்பதை தேர்தல்களில் நிரூபித்திருக்கிறது.

இவற்றுக்கு அப்பால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைவுகளை எட்டுவதற்கான புறச்சூழல் சிறிலங்காவில் இருக்கவில்லை.

தமிழருக்கான உரிமைகளை விட்டுக் கொடுக்கச் சிங்களத் தலைமைகள் தயாராக இல்லாத போது, அவர்களுடன் முட்டிமோதுவதை விட வேறெதைச் செய்ய முடியும்?

சிங்களத் தலைமைகளின் விருப்புக்கேற்ற ஒரு தீர்வை கூட்டமைப்பு பெற்றுத் தந்திருந்தால், அதைத் தான் தமிழ் மக்கள் ஏற்றிருப்பார்களா?

அப்படியொரு தீர்வுக்கு இணங்கினால், இணக்க அரசியல் செய்வதாக தமிழினம் வசைபாடாதா?

சிங்களத் தலைமைகள், தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை வழங்க இணங்கும் வரை, எந்தவொரு தமிழ்க் கட்சியாலும், எதையுமே வெட்டிப் பிடுங்க முடியாது.

மாகாணசபை, சுயாட்சி, இருதேசம் ஒரு நாடு-  தீர்வு எதுவானாலும் இது தான் யதார்த்தம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்வதெல்லாம் சரியென நாம் வாதிடவில்லை.

இன்றைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலமே உலகஅரங்கில் ஈழத்தமிழினத்தின் குரலை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதே எம் கருத்து.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

2010 நாடாளுமன்றத் தேர்தலில், வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கப்படாததால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து, பிரிந்து போனவர்கள்.

அப்போது தனித்துப் போட்டியிட்டு படுதோல்வி கண்டவர்கள்.

ஒரு நாடு இரு தேசம் என்ற கோசத்துடன், ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் தேர்தல் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்.

இடைப்பட்ட காலத்தில் வந்த தேர்தல்கள் அனைத்தையும் புறக்கணித்து, தமிழ் மக்களின் ஜனநாயக கட்டமைப்புகளில் பங்காற்றாமல் ஒதுங்கி நின்று விட்டு, இப்போது நாடாளுமன்றக் கதவைத் தட்டுகின்றனர்.

கூட்டமைப்பு கொள்கையை விற்று பிழைப்பு நடத்துவதாக குற்றம்சாட்டும் இவர்கள், தாமும் அங்கிருந்து தான் வந்தவர்கள் என்பதை மறந்து போயினர்.

இவர்களும், நாடாளுமன்ற ஆசனத்தின் சுவையை ருசித்தவர்கள் தான்.

அப்போது இவர்கள் எதனைச் செய்தார்கள் என்ற கேள்வி தம்மை நோக்கியும் கேட்கப்படும் என்று சிந்திக்கவில்லை.

தமது கோட்பாட்டு அரசியலை மக்கள் முன் தெளிவாக விளங்கப்படுத்த முடியாத நிலையில் இன்னமும் இருப்பது இவர்களின் பலவீனம்.

தமது இலக்கை அடைவதற்கு, சிறிலங்கா நாடாளுமன்றம் எந்த வகையில் உதவும் என்று தெளிவுபடுத்த முடியாதவர்கள் இவர்கள்.

எங்கிருந்தோ தொட்டிலை ஆட்டிவிடுவோரின் விருப்புக்கேற்ப, வெறுமனே வசைபாடும் விமர்சன அரசியல் மூலம் தலையெடுத்து விடலாம் என்று தப்புக்கணக்கு போடுகின்றனர்.

கொள்கையைப் பலப்படுத்துவது தான் நிலையான அரசியல் தளத்தை உருவாக்கும்.

அத்தகைய நாகரீக அரசியல் நிலையில் இருந்து விலகி, வெறுமனே கூட்டமைப்பு மீது சாணியடிக்கும் அரசியலையே செய்கிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

ஜனநாயக அரசியலில், கொள்கை வேறுபாடுகள் கருத்து முரண்பாடுகள் வழமை.

பல கட்சிகள் முட்டிமோதுவது தான் ஜனநாயகத்தின் அழகு.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க விரும்பினால், அது வரவேற்புக்குரியது.

அது தமிழ்த் தேசிய இனத்தின் பலத்தை சிதைத்து விடாத வகையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஜனநாயகப் போராளிகள்

இப்போது தான் புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் – கத்துக்குட்டிகள்.

இவர்கள் எப்படி அரசியலுக்கு வந்தனர் என்று சொல்வதா அல்லது எப்படி அழைத்து வரப்பட்டனர் என்று சொல்வதா?

ஆயுத மோதல்கள் முடிந்து ஐந்தரை ஆண்டுகளாக, இராணுவப் புலனாய்வுத்துறை தம்மைத் துரத்துகிறது, தூக்குகிறது என்று வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தவர்கள்.

அரசியலுக்கு வந்தவுடன், தம் மீதான சந்தேகப்பார்வை விலகி விட்டதாக கூறி, தமது அரசியல் விற்பன்னத்தை வெளிப்படுத்தியவர்கள் இவர்கள்.

அப்படியானால் விடுதலைப் புலிகளை அரசியல்வாதிகளாக்குவது தான், சிறிலங்கா தேசத்தின் நிகழ்ச்சி நிரலா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம், ஆசனம் கேட்டு பேரம் பேசிச் சென்றவர்கள், அது கிடைக்காமல் போனதால் தான் தனித்துப் போட்டியிட வந்தனர்.

ஆசனம் கேட்டுப்போனவர்கள், கூட்டமைப்புக்கும் தமக்கும் கொள்கை வேறுபாடு இருப்பதாக எவ்வாறு கூற முடியும்? அவர்களை எப்படி விமர்சிக்க முடியும்?

உயிரைக் கொடுத்து- உடலில் விழுப்புண் ஏற்று- உறுப்புகளையும் தியாகம் செய்து, போராடிய வீர்ர்களை தமிழினம் என்றும் மறக்காது.

ஆனால், தேசத்துக்காக போராடிய வீரர்கள் வெளிச்சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் அகப்பட்டு நிற்பதை, தமிழ்மக்களால் பொறுத்துக் கொள்ள முடியாதிருக்கிறது.

முன்னாள் போராளிகள் எல்லாத் துறைகளிலும் மிளிர வேண்டும் என்பதில் ‘புதினப்பலகை’க்கு மாற்றுக் கருத்தில்லை.

அவர்களின் துன்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் ‘புதினப்பலகை’ அளவுக்கு வேறு தமிழ் ஊடகங்கள் வெளிப்படுத்தியிருக்குமா என்பது சந்தேகம் தான்.

ஆனால், முன்னாள் போராளிகளின் திடீர் அரசியல் பிரவேச முடிவின் பின்னால் என்ன உள்ளதென்று ஆழமாகப் பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம்.

இந்த மூன்று தரப்புகளை விட,  உதிரிகளாக சில தமிழ்க் கட்சிகளும், சிங்களத் தேசியவாதக் கட்சிகளும் தேர்தல் களத்தில் நிற்கின்றன.

யாருக்கு வாக்களிக்கலாம் என்ற தெரிவு முற்றிலும் வாக்காளர்களைச் சார்ந்தது.

அந்த ஜனநாயக சுதந்திரத்தின் மீது தலையிடும் அதிகாரம் யாருக்குமில்லை.

ஆனால், மீண்டும் பேரினவாத வெறிகொண்டு மகிந்த ராஜபக்ச அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்துள்ள இவ்வேளையில், தமிழ்மக்களை எல்லா வழிகளிலும் சிதைத்து சின்னாபின்னமாக்கியவர்களை தலையெடுக்கவிடாமல் தடுக்கின்ற பொறுப்பு மீண்டும் தமிழ் மக்களுக்கு வந்திருப்பதை மறந்து விடலாகாது.

மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வரும் நிலை ஏற்பட்டால், அது எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்று விளக்கிக்கூற வேண்டியதில்லை.

அத்தகைய நரகநிலைக்குத் தள்ளிச் செல்வது தான் தமிழினத்துக்கு விடிவைப் பெற்றுத் தரப்போகிறதா?

ஒற்றையாட்சிக்குள் தான், தீர்வு என்று கொழும்பில் கூறிக் கொண்டு, யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியம் பேசும், ஐதேகவுக்கு இம்முறையாவது தக்க பதிலடி கொடுக்கத் தயாராக வேண்டும்.

தமிழ் மக்களின் வாக்குகளை சிதைத்து- சிங்களத் தேசியத்துக்குத் துணைபோகும் சக்திகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.

ஒற்றுமையே பலம் என்பதை வெளிப்படுத்தி, தமிழரின் அபிலாசைகளை வெளிப்படுத்த வேண்டும்.

இத்தருணத்தில் தமிழ் மக்கள் எடுக்கும் முடிவு மிக முக்கியமானது.

அடுத்தமாதம் வெளியாகப் போகும் ஐ.நா விசாரணை அறிக்கையும் அதன் மீதான அடுத்த கட்ட நடவடிக்கையும் இந்த தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும்.

ஒருவேளை தமிழ் மக்கள் உதிரிகளாகப் பிரிந்து போகும்நிலை ஏற்பட்டால், சிறிலங்காவுடன் சேர்ந்து அனைத்துலக சமூகம் எம்தலையில் “எதையோ” ஒன்றைக் கட்டிவிடும் அபாயம் உள்ளது.

அதை தடுக்க வேண்டுமானால், தமிழரின் ஒன்றுபட்ட பலத்தை வெளிக்காட்ட வேண்டும். நாம் ஒரே நிலையில் நிற்கிறோம் என்பதை உணர்த்த வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான பற்றுறுதியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் போதே, அதை உறுதிப்படுத்த முடியும்.

ஏனென்றால், எமது இனத்தின் உரிமைப்போராட்டம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் நீடித்துச் செல்லக் கூடாது- அடுத்த தேர்தல் வரை கூட நீளக்கூடாது.

இந்தநிலையில், அடுத்த ஆண்டுக்குள், தீர்வைப் பெற்றுத் தருவதாக இரா.சம்பந்தன் அளித்துள்ள உறுதிமொழியை நம்புவதை விட வேறு வழியில்லை.

– புதினப்பலகை குழுமத்தினர்

03-08-2015

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *