மேலும்

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் – அஞ்சல் வாக்களிப்பு இன்று ஆரம்பம்

postal-votesசிறிலங்கா நடாளுமன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகவுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இன்று அஞ்சல் மூலம் வாக்களிக்கவுள்ளனர்.

க.பொ.த. உயர்தரப் பரீட்சை கடமையில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள், காவல்துறையினரின் வசதி கருதியே இன்று அஞ்சல் மூல வாக்களிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காவல் நிலையங்களிலும், வலய அல்லது கோட்டக் கல்வி அலுவலகங்களிலும் தேசிய பாடசாலைகளிலும் இன்று அஞ்சல் மூல வாக்களிப்பு நடைபெறும்.

அஞ்சல் மூல வாக்காளர்களின் அடையாளமிடப்பட்ட வாக்குச்சீட்டை எவரும் பார்க்க முடியாத வகையில் சுதந்திரமாகவும் இரகசியமாகவும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதனால் வாக்காளர்கள் தமக்குரிய வாக்களிப்பு நிலையத்துக்கு பணியக நேரத்திற்குள் சென்று அச்சமின்றி வாக்களிக்கலாம் என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அஞ்சல் மூல வாக்களிப்பு சுமுகமாக நடைபெறுவதற்கு தடைகளை ஏற்படுத்தினாலோ, வாக்காளர்களை வற்புறுத்தினாலோ, வாக்களிப்பு உடனடியாக ரத்துச் செய்யப்படுமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் எச்சரித்துள்ளார்.

அஞ்சல் மூல வாக்களிப்பின் போது வாக்களிப்பு நிலையத்துக்கு அண்டிய பிரதேசத்தில் நேற்று முதல் பரப்புரைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, அஞ்சல் வாக்களிப்பு நிலையத்துக்கு அண்மையில் வேட்பாளர்களின் உருவப்படம், அடையாளம் அல்லது சின்னத்தை காட்சிக்கு வைத்தல், வாக்கை இரந்து கேட்டல், வேட்பாளரொருவருக்கு வாக்களிக்க வேண்டாமென இரந்து கேட்டல், அடையாளமிடப்பட்ட அல்லது அடையாளமிடப்படாத வாக்குச் சீட்டை வெளியில் எடுத்துச் செல்லல் அல்லது அதற்கு முயற்சித்தல், அடையாளமிடப்பட்ட வாக்குச்சீட;டை பிறருக்கு காண்பித்தல், காட்டுமாறு பிறரை வற்புறுத்தல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் தேர்தல் சட்ட விதிமுறை மீறல்களாகும்.

அதிகாரபூர்வ அஞ்சல் வாக்களிப்பு நாளை மறுநாளான, ஓகஸ்ட் 5ஆம், 06 ஆம் நாள்களில் இடம்பெறும். தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளுக்கான அஞ்சல் வாக்களிப்பு 08 ஆம் நாள் நடைபெறும்.

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிக்க 566,823 பேர் தகுதி பெற்றுளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *