மேலும்

மகிந்தவை மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்ல முனைகிறது கூட்டமைப்பு – டிலான் பெரேரா

dilan pereraபோர்க்குற்றங்களுக்காக மகிந்த ராஜபக்சவைத் தண்டிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அனைத்துலக சமூகமும் முயற்சிப்பதாகவும், அவரை மின்சார நாற்காலிக்குக் கொண்டு செல்லும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரான முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“போர்க்குற்ற விசாரணைகளின் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும், மின்சார நாற்காலிக் கதைகளும் பொய்யான கூற்றுக்கள் என்றே நாம் நினைத்தோம்.

ஆனால் இப்போதிருக்கும் நிலைமைகளை பார்க்கும்போது மின்சார நாற்காலிக் கதைகள் பொய்யானது அல்ல என்று தோன்றுகின்றது.

போர்க்குற்றச்சாட்டுகளுக்காக மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட முக்கிய நபர்களை தண்டிக்க வேண்டும் என அனைத்துலக, புலம்பெயர் அமைப்புகள் மற்றும் இங்குள்ள இனவாத தரப்புக்கள் தெரிவித்து வருகின்றன.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் சிறிலங்காவின் அண்மைக்கால செயற்பாடுகள் அமைந்துள்ளன.

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக அனைத்துலக விசாரணை அவசியம் என்றும், அனைத்துலக விசாரணையின் மூலம் குற்றங்கள் கண்டறியப்படுதல் அவசியம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனினும் அனைத்துலக விசாரணைக்கு அனுமதிப்பதில்லை என்று அரசாங்கம் குறிப்பிட்டாலும் உள்ளக பொறிமுறைகள் மூலம் போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுப்பதாக கூறுகிறது.

உள்ளக விசாரணைப் பொறிமுறையில், வடமாகாண சபைக்கு முக்கிய பங்கு வழங்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால செயற்பாடுகள் மோசமானதாக அமைந்துள்ளன.

அவர்கள் இப்போது 13க்கு அப்பால் சென்று சுயநிர்ணய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

மகிந்த ராஜபக்சவை மின்சார  நாற்காலிக்கு கொண்டு செல்லும் தீவிர முயற்சிகளை இவர்கள் மேற்கொள்கின்றனர்.

மகிந்த ராஜபக்சவை மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்ல ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார்.

போர்க்காலகட்டத்தில் எம்முடன் இணைந்து வெற்றிக்கு வித்திட்டவர்களில் மைத்திரிபால சிறிசேனவின் பங்கும் உள்ளது.

ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நாம் ஒருபோதும் நம்பப்போவதில்லை.

மகிந்தவை மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்ல இந்த நாட்டின் சிங்கள மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *