மேலும்

கருணாவின் காலைவாரிய பிள்ளையான் – தோற்றாலும் தேசியப்பட்டியலில் இடம் உறுதி

pillayanகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் (பிள்ளையான்) வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்றாலும், அவருக்கு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து, சந்திரகாந்தனின், தமிழ்த் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.

தனித்துப் போட்டியிடவே சந்திரகாந்தன் திட்டமிட்டிருந்ததாகவும், இந்த தேர்தலில் தோல்வியுற்றாலும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் அனுப்புவோம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, கொடுத்திருந்த வாக்குறுதியின் பேரிலேயே அவர் கூட்டணி அமைத்துப் போட்டியிட இணங்கியதாகவும் தமிழ்த் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடு ஒன்றும் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, சந்திரகாந்தன், மட்டக்களப்பில் தோல்வியுற்றாலும், தேசியப்பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றம் நுழைவது உறுதி என்றும், அவரது கட்சி பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த உடன்பாட்டுக்கு அமையவே, முன்னாள் பிரதி அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளராக இருந்தவருமான கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன், தேசியப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை அறிந்த பின்னரே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோசப் பரராஜசிங்கம், சந்திரநேரு, ரவிராஜ் மற்றும் பேராசிரியர் ரவீந்திரநாத் உள்ளிட்டோரைப் படுகோலை செய்த குற்றவாளிகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக கருணா, குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *