மேலும்

மிருசுவில் படுகொலை வழக்கில் சிறிலங்கா படை அதிகாரிக்கு மரணதண்டனை- நால்வர் விடுதலை

sunil rathnayakeமிருசுவிலில் தமது வீடுகளைப் பார்வையிடச் சென்ற இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 8 தமிழர்களைப் படுகொலை செய்து புதைத்த குற்றச்சாட்டில், சிறிலங்கா இராணுவ சார்ஜன்ட் தர அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்துள்ளது.

2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், 19ஆம் திகதி மிருசுவில் பகுதியில் தனது வீடுகளைப் பார்வையிடச் சென்ற 5 வயதுக்கும், 41 வயதுக்கும் இடைப்பட்ட  தமிழர்கள் எட்டுப் பேர் காணாமற்போயிருந்தனர்.

மறுநாள் இவர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டு மலசலகூடக் குழி ஒன்றில் போடப்பட்டனர்.

sunil ratnayake

மரணதண்டனை விதிக்கப்பட்ட சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க . படம்- லங்காதீப

இந்தச் சம்பவத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் பிடியில் இருந்து, காயங்களுடன் தப்பிய ஒருவர், இந்த தகவலை வெளிப்படுத்தியதை அடுத்து,  நடத்தப்பட்ட தேடுதலில் எட்டு பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன.

mirusuvil_case

எட்டுத் தமிழர்களும் கொலை செய்யப்பட்டு சடலங்கள் போடப்பட்டிருந்த குழியைப் பார்வையிடும் நீதிபதிகள்

இதையடுத்து, ஐந்து சிறிலங்கா படையினர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 17 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் லலித் ஜெயசூரிய, பிரீதி பத்மன் சூரசேன ஆகியோரால் இன்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி, ஸ்ராப் சார்ஜன்ட் சுனில் இரத்நாயக்க என்ற சிறிலங்கா இராணுவ இளநிலை அதிகாரி குற்றவாளியாக காணப்பட்டு, அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும்,  இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஏனைய நான்கு சிறிலங்கா படையினருக்கும் எதிராக முன்வைக்கப்பட்ட சான்றுகளில் சந்தேகங்கள் இருப்பதாக கூறி, அவர்கள் நால்வரையும் நீதிபதிகள் விடுதலை செய்துள்ளனர்.

அதேவேளை, தான் இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக கூறிய சுனில் இரத்நாயக்க,  தான் இந்த கொலைகளை செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அவரது சட்டவாளர்  தனராஜ சமரகோன் கூறினார்.

இந்த தீர்ப்பின் முலம் சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு உள்நாட்டுக்குள் பலம்வாய்ந்த கட்டமைப்பொன்று இருக்கின்றது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக வழக்கில் அரச தரப்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சரத் ஜயமான்ன கூறினார்.

காவல்துறையினரும், இராணுவத்தினரும் நியாயமான முறையில் விசாரணைகளை மேற்கொண்டதன் காரணமாகவே இந்த தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதற்கு முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *