மேலும்

ஐ.நா விசாரணை அறிக்கையை உள்ளக விசாரணைக்கு பயன்படுத்துவோம் – ஜெனிவாவில் மங்கள

mangala-unhrcபோரின்போது நடந்த பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையரின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை, சிறிலங்கா அரசு உருவாக்கவிருக்கும் உள்ளக விசாரணை மற்றும் நீதிக்கட்டமைப்பு பயன்படுத்தும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“சிறிலங்கா அரசு உள்ளக புலன்விசாரணை மற்றும் நீதிக்கட்டமைப்புக்களை உருவாக்கவுள்ளது. அந்த அமைப்புக்கள், ஐ.நா மனித உரிமை ஆணையரின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை கவனத்தில் எடுத்துச் செயற்படும்.

சிறிலங்கா அரசு உருவாக்கவிருக்கும் உள்ளக புலன்விசாரணை மற்றும் நீதிக்கட்டமைப்புகளின் தன்மை மற்றும் அவை செயற்படும் முறைகள் குறித்து சிறிலங்கா அரசு ஏற்கனவே விரிவான விவாதங்களை முன்னெடுத்துள்ளது.

இதற்குத் தேவையான சட்டமாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

2009 ஆம் ஆண்டில் அப்போதைய சிறிலங்கா அரசு, “பயங்கரவாதத்தை” முடிவுக்கு கொண்டு வந்தது. அது அவசியமானது.

அவ்வாறு பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதால் தான் சிறிலங்காவுக்குள் மனித உரிமைகளும், நீடிக்கத்தக்க அனைவருக்குமான அபிவிருத்தியும் சாத்தியமாகும் சூழல் தோன்றியது.

அதேசமயம், அதற்கு ஒரு விலை கொடுக்கப்பட்டது.

முந்தைய அரசாங்கம் வெற்றி மமதையுடனும், யாரும் தன்னை எதுவும் செய்யமுடியாது என்ற மனோபாவத்துடனும் நடந்து கொண்டதால்தான் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் சிறிலங்காவில் உருவாகவில்லை.

நாட்டின் மனித உரிமைகள் நிலவரம் முன்னேற்றமடையவில்லை.

mangala-unhrc

ஆனால் கடந்த ஜனவரி 8ஆம் நாள் சிறிலங்காவில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அதிபர் தேர்தலில் முந்தைய ஆட்சி தோற்கடிக்கப்பட்டு புதிய ஆட்சி அமைந்திருக்கும் சூழலானது சிறிலங்காவுக்குள் மனித உரிமைகள் முன்னேற்றமடையவும், நல்லிணக்கம் உருவாகவும் மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போதைய சிறிலங்கா அரசு அந்த முக்கியத்துவத்தை உணர்ந்து இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது.

முதல்கட்டமாக நீண்டநாட்களாக காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் பிரச்சினையை சிறிலங்கா அரசு மீளாய்வு செய்து வருகிறது.

காணாமல்போனவர்களின் பட்டியலை இறுதி செய்வதற்காக சிறிலங்கா அரசு செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகிறது.

சிறிலங்காவின் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கான பல்வேறு முன்னெடுப்புக்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முந்தைய அரசால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு மோசமான மனித உரிமை மீறல்கள் நடந்ததாக அடையாளம் கண்ட சம்பவங்களில் மேலதிக புலனாய்வு மற்றும் சட்ட ரீதியிலான மேல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

சிறிலங்காவுக்குள் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கான அனைத்துலக ஒத்துழைப்பை வலுப்படுத்த எமது அரசாங்கம் விரும்புகிறது.

சிறிலங்காவுக்குள் ஏற்பட வேண்டிய நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான கட்டமைப்பும், முன்னெடுப்புக்களும் சிறிலங்கா அரசின் சுயமான செயற்பாடாக இருப்பதே சரியான வழியாகும்.

அந்த அணுகுமுறையே அவை வெற்றி பெறுவதற்கான ஒரே வழி என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.

சிறிலங்காவுக்குள் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்குத் தேவையான தகமை, ஆளணி மற்றும் திறமைகள் எம்மிடம் உள்ளன.

சிறிலங்காவின் உள்ளக பொறிமுறைகளுக்குத் தேவையான ஆலோசனையையும், கட்டமைப்பு வசதிகளையும், உதவிகளையும் அனைத்துலக சமூகத்திடம் இருந்து பெற்றுக் கொள்வதற்குத் சிறிலங்கா அரசு தயாராக இருக்கிறது.

சிறிலங்காவின் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கும், நல்லிணக்கத்தை தோற்றுவிக்கும் நோக்கத்துடனும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் மற்றும் அவருக்குக் கீழ் செயற்படும் பல்வேறு மனித உரிமைகளுக்கான அமைப்புக்கள் மற்றும் அவற்றின் நிபுணர்களுடன் ஏற்கனவே பேச்சுகளை நடத்தி வருகிறேன்.

சிறிலங்காவின் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு தென்னாபிரிக்க அரசின் உதவியையும் சிறிலங்கா அரசு நாடியிருக்கிறது.

ஏற்கனவே ஐ.நா பிரதிநிதியும், தென் ஆபிரிக்க குழுவினரும் சிறிலங்காவுக்கு வந்திருக்கின்றனர்.

இத்தகைய முயற்சிகளுக்கான ஒத்துழைப்புக்கள் தொடரும்” என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *