மேலும்

அன்ரனோவ் விமானத்துக்கு என்ன நடந்தது? – விரிவான தகவல்கள்

plane-crash (1)கொழும்புக்கு அருகே இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தில், நான்கு சிறிலங்கா விமானப்படை அதிகாரிகள் உயிரிழந்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அன்ரனோவ் விமானங்கள் பறப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 6.10 மணியளவில் புறப்பட்ட சிறிலங்கா விமானப்படையின் அன்ரனோவ் விமானம், காலை 6.20 மணியளவில், இரத்மலானை விமான நிலையத்தில் தரையிறங்க முன்னர், விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொருங்கியது.

அத்துருகிரியவில் உள்ள, ஹோகந்தர பகுதியில் உள்ள இறப்பர் தோட்டம் ஒன்றில் விமானம் வீழ்ந்து, வெடித்துச் சிதறியதில், அதல் பயணம் செய்த நான்கு விமானப்படை அதிகாரிகள் உயிரிழந்தனர்.

மற்றொருவர் கடுமையான எரிகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விமானி ஸ்குவாட்ரன் லீடர் அபேவர்த்தன, துணைவிமானி பிளைட் லெப்.தரங்க அமரதுங்க, பிளைட் சார்ஜன்ட் பிரியந்த, கோப்ரல் விஜேரத்ன ஆகியோரே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லான்ஸ் கோப்ரல் சதுரங்க என்ற அதிகாரி இடுப்புக்குக் கீழ் கடுமையான எரிகாயங்களுடன் மீட்கப்பட்டு, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

plane-crash (2)

இந்த விபத்துத் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு, சிறப்பு விசாரணைக் குழுவொன்றை, சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர்மார்ஷல் கோலித குணதிலக நியமித்துள்ளார்.

எயர் கொமேடோர் ரவி ஜெயசிங்க தலைமையிலான குழுவே விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

இந்த விசாரணைகளை முடிவடையும் வரை, சிறிலங்கா விமானப்படையிடம் உள்ள எஞ்சியுள்ள 4 அன்ரனோவ் விமானங்களும், பறக்கத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமானம் ரேடர் திரையில் இருந்து மறைவதற்கு முன்னதாக, கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட விமானி, பார்வைப்புலன் குறைவாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

கடைசியாக விமானி இரத்மலான விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட போது, ஓடுபாதையில் இருந்து 8 கி.மீ தொலைவில், 2000 மீற்றர் உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தது.

plane-crash (1)

எனினும், கடும் பனிமூட்டத்தினால் பார்வைப்புலன் குறைவாகவே இருந்தது என்றும், அதன் காரணமாகவே விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்றும் சிறிலங்கா விமானப்படை தலைமை அதிகாரி எயர் வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்கள தெரிவித்துள்ளார்.

எனினும் விசாரணைகள் முடியும் வரை எதையும் கூறமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீழ்ந்து நொருங்கிய அன்டனோவ் விமானம், 1996ம் ஆண்டு உக்ரேனிடம் இருந்து வாங்கப்பட்டது. கடந்த ஆண்டு அது ரஷ்யாவில் மறுசீரமைப்புச் செய்யப்பட்டு மீண்டும் விமானப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.

இந்த விமானம் கடந்த 9 ஆண்டுகளில், 298 மணித்தியாலங்கள் பறந்துள்ளதுடன், 447 தரையிறக்கங்களையும் மேற்கொண்டுள்ளது.

இந்த விமானத்தின் பெறுமதி 4.5 மில்லியன் டொலர்களாகும். இதன் விமானியும் போதிய அனுபவம்மிக்க விமானி என்றும் சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

plane-crash (3)

இந்த விபத்தில் ஒரு வீடு சேதமடைந்த போதிலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *