மேலும்

சிறிலங்கா: அபிவிருத்தி என்னும் போர்வையில் முல்லைத்தீவின் காடுகள் அழிப்பு

Forest land Mullaitivuமுல்லைத்தீவின் 1000 ஏக்கர் பரப்பைக் கொண்ட Pansal Kanda என்கின்ற காட்டுப்பகுதி துப்பரவு செய்யப்பட்டு 25 ஏக்கர் நிலப்பரப்பாகப் பிரிக்கப்பட்டு செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு Ceylontoday ஆங்கில ஊடகத்தில் Rathindra Kuruwita எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

2009ல் சிறிலங்காவில் யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் முன்னால் போர் வலயத்தில் உள்ள காடுகள் துப்பரவு செய்யப்பட்டு செல்வாக்கு மிக்க வர்த்தகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்படுகின்றன. கடந்த காலத்தில் பயன்படுத்தப்படாதிருந்த நிலம் தற்போது விவசாயம் மற்றும் அபிவிருத்திக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.

அபிவிருத்தி என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ள அதேவேளையில் குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிடப்படாத நடவடிக்கைகளால் இங்கு சூழல் தொடர்பாகப் பேணப்படும் சட்டங்கள் மீறப்படுகின்றன.

காடுகளைத் துப்பரவு செய்தல் மற்றும் இவற்றை பாரிய விவசாய மற்றும் சுற்றுலாத்துறைத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதால் தற்போது யானைகள் மனிதர்களைத் தாக்கும் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. காடுகளை அழிப்பதால் விவசாயிகளின் வாழ்வாதரம் பாதிக்கப்படுவதுடன், எதிர்கால நீர் வளங்கள் அழிவுக்கு உள்ளாகின்றன.

ஆண்டாங்குளம் வனத் தேக்கம் மற்றும் கொக்கிளாய் சரணாலயம் போன்றவற்றுக்குச் சொந்தமான 6000 ஏக்கர் காட்டுப் பிரதேசம் தற்போது அழிக்கப்பட்டு சக்திமிக்க அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது மகாவலி L வலயத்தை அமைப்பதற்காகவே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முல்லைத்தீவின் 1000 ஏக்கர் பரப்பைக் கொண்ட Pansal Kanda என்கின்ற காட்டுப்பகுதி துப்பரவு செய்யப்பட்டு 25 ஏக்கர் நிலப்பரப்பாகப் பிரிக்கப்பட்டு செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கும் மேலாக, கொக்கிளாய் நீரேரிக்கு தெற்காக உள்ள மிகப் பெரிய காட்டுப் பகுதியை நிறுவனங்கள் மற்றும் பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க அமைச்சரின் அரசியல் பிரமுகர்களிடம் மகாவலி அதிகார சபை வழங்கியுள்ளது.

“ஹெலம்ப வாவியிலிருந்து கொக்கிளாய் நீரேரி வரையான 5000 ஏக்கர் காட்டுப் பகுதியை அழிப்பதற்கு மகாவலி அதிகாரசபையானது மிகப் பாரிய இயந்திரங்களைப் பயன்படுத்துகிறது. அழிக்கப்பட்ட காட்டுப் பகுதியானது 25 ஏக்கராகப் பிரிக்கப்பட்டு வர்த்தக நோக்கங்களுக்காகவும் தனிநபர்களின் தேவைகளுக்காகவும் வழங்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய மரங்கள் காடு அழிப்பின் போது வெட்டப்பட்டுள்ளன. பல ஆயிரக்கணக்கான சிறிய மரங்களும் தாவரங்களும் எரிக்கப்பட்டுள்ளன” என சூழல் பாதுகாப்பு நிதியத்தின் இயக்குனர் சஜீவ சமிகார உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது அழிக்கப்படும் காடானது முல்லைத்தீவு மாவட்டத்தின் எடன்டாவலக் குளம் மற்றும் ஏனைய குளங்கள் நீரைத் தேக்கி வைப்பதற்கான மிக முக்கிய வளமாகக் காணப்படுகிறது. இந்தக் காட்டுப் பகுதி கொக்கிளாய் நீரேரிக்கு நீரை வழங்கும் ஜானகபுர, வெலியெர மற்றும் மொறஓயா போன்ற நீர்த்தேக்கங்கள் நீடித்து நிற்பதற்கு மிகவும் முக்கிய பங்கு வகித்தது.

நீர்ப்பாசனப் பயிர்ச்செய்கைக்கு நீரைச் சேகரித்து வழங்கக் கூடிய மிகப் பெரிய நீர் நிலைகள் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் இல்லைஎன இந்த மாவட்டத்தின் அரச அதிபர் செயலகத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பாலான விவசாயிகள் மழைநீரிலும், மூன்று பெரிய குளங்கள் மற்றும் 17 நடுத்தரக் குளங்களிலும் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்குச் சொந்தமான 6000 இற்கும் மேற்பட்ட ஏக்கர் காட்டுப் பகுதி அழிக்கப்படுவதால் விவசாயிகள் நம்பி வாழ்கின்ற நீர் நிலைகளை மிகவும் மோசமாகப் பாதிக்கும். இதனால் 80 சதவீத விவசாயிகள் வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பொருளாதாரம் ஆபத்தைச் சந்திப்பதுடன், இந்த விவசாயிகளின் வருவாயும் பாதிக்கப்படும்.

“இதற்கப்பால், பெருமளவான காடு அழிக்கப்படுவதால் இதில் வாழும் யானைகள், கரடிகள் மற்றும் எருதுகள் போன்ற பல்வேறு மிருகங்கள் தமது வாழ்விடத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். உண்மையில் காட்டு எருதுகள் தற்போதும் வாழும் மிகக் குறைந்த காடுகளில் முல்லைத்தீவில் தற்போது அழிக்கப்படும் காடும் ஒன்றாகும்” என சமிகார சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரை காலமும் நல்வாய்ப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் யானைகள் மனிதர்களைத் தாக்கும் சம்பவங்கள் குறைவாகும். ஏனெனில் முல்லைத்தீவு மாவட்டமானது பாரிய காடுகளால் சூழப்பட்ட ஒரு நிலப்பரப்பாகும். ஆனால் தற்போது இக்காடுகள் அழிக்கப்படுவதால் இனிவருங் காலங்களில் மனிதர்களை யானைகள் தாக்கும் சம்பவங்கள் அதிகரிக்கும். யானைகள் நடமாடும் பகுதிகள் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளன. இதனால் மக்கள் நடமாடும் பகுதிகள் ஊடாக யானைகள் நடமாடும். முல்லைத்தீவு மாவட்டத்தின் 167,850 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் 64.1 சதவீதம் காட்டுப் பிரதேசமாகும்.

எதுஎவ்வாறிருப்பினும், நாட்டின் ஏனைய பாகங்களில் இடம்பெறுவது போன்று முல்லைத்தீவு மாவட்டத்திலும் பொருத்தமான சாத்தியப்பாட்டு அறிக்கை தயாரிக்கப்படாது அல்லது சூழல் தாக்க மதிப்பீடு எதுவும் முன்னெடுக்கப்படாது மேற்கொள்ளப்படும் திட்டமிடப்படாத காடு அழிப்பானது யானைகளும் ஏனைய காட்டு விலங்குகளும் கிராமங்களுக்குள் புகுந்து அழிவை ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.

“மகாவலி அதிகாரசபை இவ்வாறான நடவடிக்கையை பல ஆண்டுகளாக மேற்கொள்கிறது. நாட்டின் பல பகுதிகளில் மகாவலி அதிகார சபையானது பெருமளவான காட்டுப் பகுதியைத் துப்பரவு செய்து அவற்றை பெரிய வர்த்தகர்களிடமும் அரசியல்வாதிகளிடமும் வழங்கியுள்ளது. இவர்களது பெரும்பாலான அபிவிருத்தி நடவடிக்கைகள் சூழலியல் சட்டங்களை மீறுகின்றன. முல்லைத்தீவுக் காடுகளை அழிப்பதற்கு அமைச்சர் துணைபோவதானது அங்கு வாழும் மக்களின் வாழ்வைப் பாதிப்பதுடன் சூழல் முறைமையையும் பாதிக்கும்” என சூழல் பாதுகாப்பு நிதியத்தின் இயக்குனர் சுட்டிக்காட்டியுள்ளார்.

6000 ஏக்கர் காட்டுப் பகுதியை அழிப்பதன் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் மக்கள் யானைகளின் தாக்குதலுக்கு உட்படுவதுடன், இதன் நீர்வளங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுவதுடன் பொருளாதாரமும் பாதிக்கப்படுவதன் விளைவாக இங்கு சமூக சீர்குலைவு ஏற்பட வழிவகுக்கும்.

1980ல் உருவாக்கப்பட்ட தேசிய சூழல் சட்டத்தின் இல 47வது பிரிவின் கீழ் 1993 யூன் 24 அன்று வெளியிடப்பட்ட 772/22 இல என்கின்ற வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவும் ஒரு ஹெக்ரேயருக்கும் மேற்பட்ட காட்டுப் பகுதி அழிக்கப்படுவதற்கு சூழல் மதிப்பீட்டு அறிக்கையுடன் கூடிய முன் அங்கீகாரம் மிகவும் அவசியமானதாகும்.

1940ல் வரையப்பட்ட 9வது இலக்க தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒக்ரோபர் 04, 2000ல் வழங்கப்பட்ட இல 1152/14  வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், இரண்டு ஹெக்ரேயருக்கு மேற்பட்ட நிலமானது அபிவிருத்தித் தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்கு முதல் தொல்பொருளியில் சார்ந்த மதிப்பீட்டறிக்கை தயாரிக்கப்பட்டு குறித்த இடத்தின் தொல்பொருளியல் பாதிப்புக்கள் தொடர்பாக ஆராயப்பட வேண்டும். பத்திற்கும் மேற்பட்ட தொல்பொருளியல் இடங்கள் மகாவலி அதிகார சபையால் அழிக்கப்பட்டுள்ளன.

“போர் இடம்பெற்றதன் காரணமாக இந்தப் பிரதேசத்தில் எமது தொல்பொருளியலாளர்கள் பொருத்தமான ஆய்வுகளை மேற்கொள்ள முடியவில்லை. இந்த இடத்தில் எவ்வாறான தொல்பொருட்கள் புதைந்துள்ளன என்பதும் எமக்குத் தெரியாது. ஆனால் எமது தொல்பொருட்கள் தொடர்பாகவோ, காட்டு விலங்குகள் மற்றும் முல்லைத்தீவு வாழ் மக்கள் தொடர்பாகவோ மகாவலி அதிகார சபை கருத்திலெடுக்கவில்லை” என சமிகார மேலும் குறிப்பிட்டார்.

அண்மைய காலங்களில் மகாவலி அதிகார சபையானது தனக்கு வழங்கப்பட்டுள்ள வரையறைக்கு அப்பால் செயற்பட்டுள்ளது. 1979ல் மகாவலி அதிகார சபையால் வரையப்பட்ட 23 வது இலக்கச் சட்டத்தை இது மீறியதுடன், பெருமளவான அழிக்கப்பட்ட காட்டுப் பகுதியை வர்த்கர்களுக்கும் அரசியற் பிரமுகர்களுக்கும் வழங்கியுள்ளது.

“நாங்கள் மீதியாக உள்ள காட்டை அழிக்கிறோம். அரசியல்வாதிகள் வனத் தேக்கங்களைப் பிரகடனப்படுத்துவதற்குத் தடையாக உள்ளனர். இதனால் இவர்கள் தமது சட்டவிரோத வர்த்தகத்தை மேற்கொள்ள முடிகிறது. நாட்டின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வெளிப்படைத் தன்மையுடன் சிறிலங்கா அரசாங்கமானது தனது அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்” என சமிகார கோரியுள்ளார்.

இதேவேளையில்,  வெலிஓயா ஒருங்கிணைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மகாவலி L வலயத்தில் மகாவலி அதிகார சபையானது சில அபிவிருத்திகளை மேற்கொள்வதாகவும் வெளிப்படைத்தன்மையுடன் திட்டமிடப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களே இங்கு மேற்கொள்ளப்படுவதாகவும் சிறிலங்கா நீர்ப்பாசன மற்றும் நீர் வள முகாமைத்துவப் பிரதி அமைச்சர் W.B.எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *