மேலும்

ஐ.நா விசாரணைக்கு சிறிலங்கா ஒத்துழைக்க வேண்டும் – பிரித்தானியா வலியுறுத்தல்

Lord Livingstonஐ.நா விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் சிறிலங்கா அரசாங்கத்திடம் பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் குறித்து நேற்று மாலை பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பிரபுக்கள் சபையில் குறுகிய நேர விவாதம் ஒன்று இடம்பெற்றது.

இந்த விவாதத்துக்குப் பதிலளித்து உரையாற்றிய பிரித்தானிய வர்த்தக அமைச்சர் லிவிங்ஸ்டன் பிரபு,

“வர்த்தகம் பிரித்தானியாவின் செழிப்புக்கு மட்டுமன்றி சிறிலங்காவின் செழிப்புக்கும் முக்கியமானது.

எனினும், சுதந்திரமான வர்த்தகத்துக்குச் செல்வதற்கு முன்பாக, எம்முன் மனித உரிமைகள் பற்றிய கடப்பாடுகளும் உள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு பிரித்தானியா ஆதரவு அளித்திருந்தது.

இந்த தீர்மானம், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் நிலையில் முன்னேற்றத்தை எட்டும்படி சிறிலங்காவைக் கோரியது.

போரின் போது இருதரப்பினாலும் இழைக்கப்பட்ட அனைத்துலக சட்ட மீறல்கள்  குறித்து விசாரணை செய்யுமாறு, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துக்கும் இந்த தீர்மானம் ஆணை வழங்கியுள்ளது.

நாம் இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும்படியும், விசாரணையில் சாட்சியமளிப்போரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் படியும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியமர்வு குறித்து தமது சொந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் படியும் சிறிலங்காவைத் தொடர்ந்து கேட்டு வருகிறோம்.

அடுத்தமாதம் சிறிலங்காவில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நியாயமான முறையில் நடப்பதை உறுதி செய்வதற்கு, அனைத்துலக கண்காணிப்பாளர்களை அழைக்கும்படி நாம் சிறிலங்கா அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

சிறிலங்கா தேர்தல் ஆணையம், கொமன்வெல்த் மற்றும் சார்க் கண்காணிப்பாளர்களை அழைத்திருப்பதை வரவேற்கிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *