மேலும்

அத்துருகிரியவில் வீழ்ந்து நொருங்கியது சிறிலங்கா விமானப்படை விமானம்

Antonov_An-32Bகொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரியவில் சற்று முன்னர் சிறிலங்கா விமானப்படையின் அன்ரனோவ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொருங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (புதிய தகவல்கள் இணைப்பு)

இன்றுகாலை 6.20 மணியளவில், அத்துருகிரிய ஹோக்கந்தர பகுதியில் உள்ள வனகுரு மாவத்தை இறப்பர் தோட்டம் ஒன்றிலேயே விமானம் வீழ்ந்துள்ளது.

வீடுகளுக்கு மேல் விமானம் வீழ்ந்துள்ளதாகவும், இதையடுத்து அந்தப் பகுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

எனினும், வீடு ஒன்றுக்கு அருகிலேயே விமானம் வீழ்ந்ததாகவும், எனினும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

antanov-crash (1)

antanov-crash (2)

antanov-crash (3)

சீரற்ற காலநிலையால் விமானம் வீழ்ந்த பின்னர் தீப்பிழம்பாக வெடித்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோட்டேயில் இருந்து விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்து விட்டனர்.

சம்பவ இடத்துக்கு பொதுமக்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரத்மலான விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த சிறிலங்கா விமானப்படையின் அன்ரனோவ் 32 விமானம் ரேடர் திரையில் இருந்து காணாமற்போயுள்ளதாகவும், அதுவே அத்துருகிரிய பகுதியில் வீழ்ந்திருக்கலாம் என்றும் சிறிலங்கா விமானப்படை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த விமானத்தில் நான்கு சிறிலங்கா விமானப்படையினர் பயணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, விமானத்தின் சிதைவுகளுக்குள் இருவரின் சடலங்களை கண்டதாக நேரில் பார்த்தவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும் எவரும் இந்த சிதைவுகளுக்குள் சிக்கியுள்ளனரா என்பது பற்றிய விபரங்கள் தெரியவரவில்லை

சம்பவ இடத்துக்கு மீட்புப் பணியாளர்கள் விரைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *