மேலும்

மகிந்தவுக்கு நன்றி கூறிய மோடி – மீனவர் விடுவிப்பின் பின்னணியில் சல்மான் கான்?

fishermen-releaseதமிழ்நாட்டு மீனவர்களை விடுவித்ததற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்துள்ள நிலையில், இந்த விடுதலையின் பின்புலத்தில் நடிகர் சல்மான் கானும் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அவுஸ்ரேலியப் பயணத்தை முடித்துக் கொண்டு புதுடெல்லி திரும்பியதும், கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணியளவில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதன் போது, மீனவர்களை விடுவித்தமைக்கு அவர் நன்றி கூறியுள்ளார்.

மீனவர்கள் விவகாரம் தொடர்பாக, இரண்டு வாரங்களுக்குள், மகிந்த ராஜபக்சவும், நரேந்திர மோடியும் தொலைபேசியில் உரையாடியுள்ளது இது இரண்டாவது தடவையாகும்.

இதற்கிடையே, ஹிந்தி நடிகர் சல்மான் கான், இந்த மீனவர்களின் விடுதலை விவகாரத்தில் மறைமுகமான பங்காற்றியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சல்மான் கானின் சகோதரியின் திருமணத்துக்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும், நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக, அவரது நண்பரும் ஊடகவியலாளருமான ரஜாட் சர்மா, கொழும்பு சென்றிருந்தார்.

இதன்போது அவர், சிறிலங்கா அதிபர் மற்றும் நாமல் ராஜபக்சவுடன் மீனவர்களின் விடுதலை குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.

நாமல் ராஜபக்சவும், சல்மான் கானும் நண்பர்கள் என்றும் அதனடிப்படையில் மீனவர்களின் விடுதலை குறித்த வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை சல்மான் கான் மற்றும் ஊடகவியலாளர் ரஜாட் சர்மா ஆகியோர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *