நாடாளுமன்றத்தைக் கலைப்பது குறித்து சிறிலங்கா அரசு ஆலோசனை
நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சிறிலங்கா அரசாங்க உயர்மட்டத்தில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன எதிரணியின் பொதுவேட்பாளராக களமிறங்க முடிவு செய்துள்ள நிலையில், ஆளும்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், அவருக்கு ஆதரவளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்து விடலாமா என்று சிறிலங்கா அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
நாடாளுமன்றத்தைக் கலைப்பதன் மூலம், மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள், வசதிகள் அனைத்தையும் பறிக்க முடியும்.
இதனை அடிப்படையாக கொண்டே, இதுபற்றி ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1988ம் ஆண்டு 19ம் நாள் நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில், பிறேமதாச வெற்றி பெற்றதையடுத்து, மறுநாளே அப்போதைய அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தன நாடாளுமன்றத்தைக் கலைத்திருந்தார்.
இரண்டு மாதங்களின் பின்னர் நடத்தப்பட்ட தேர்தலில் ஐதேக ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.