மேலும்

நாளை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பாரிய கட்சித் தாவல்கள்

crossoverசிறிலங்கா நாடாளுமன்றத்தில் நாளை வரவு செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், பாரிய கட்சித் தாவல்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நாளை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இடம்பெறும் போது, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்தவர்கள் எதிரணியுடன் இணையவும், ஐதேகவினர், ஆளும்கட்சியுடன் இணையவும் வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

எனினும், வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக ஐதேக வாக்களிக்கும் என்ற போதிலும், அதனைத் தோற்கடிக்க விரும்பவில்லை என்று ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அதனால் நாட்டு மக்களே பிரச்சினைகளை எதிர்கொள்வர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, எதிரணியுடன் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவும், வரவுசெலவுத் திட்டத்தை தோற்கடிக்க முனையவில்லை என்று கூறியிருக்கிறார்.

எனினும், நாளை நாடாளுமன்றத்தில் பெரியளவிலான கட்சித் தாவல்கள் இடம்பெறும் என்பதை அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும், எதிரணியுடன் இணைந்து கொள்வார்கள் என்று குறிப்பிட்ட ராஜித சேனாரத்ன எத்தனை பேர் இவ்வாறு கட்சி தாவுவர் என்று குறிப்பிடவில்லை.

அதேவேளை ஐதேகவின் மூத்த தலைவரான ஜோன் அமரதுங்க மற்றும், கயந்த கருணாதிலக ஆகியோரும், நாளை நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சியினர் பலரும், எதிரணியுடன் இணைந்து கொள்வர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

என்றாலும். அவர்களும் எத்தனை பேர் கட்சி தாவுவர் என்று குறிப்பிடவில்லை.

இதற்கிடையே, நாளை ஐதேகவில் இருந்து பலரும் ஆளும்கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக, சிறிலங்கா அரமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் தெரிவித்துள்ளார்.

ஆளும்கட்சி உறுப்பினர்கள் எதிரணியுடன் இணைந்து கொள்வதைத் தடுப்பதற்கு அரசாங்கம் பெரும் பிரயத்தங்களை மேற்கொண்டுள்ளது.

அத்துடன் எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தம்பக்கம் இழுப்பதற்குப் கோடிக்கணக்கான ரூபா பேரம் பேசப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *